
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவது நீரழிவு நோயினால் தான். பொதுவாக இந்த நோயை இந்தியாவின் நோயாக கூட கருதலாம். அந்தளவிற்கு இந்தியர்கள் சர்க்கரை நோய் என்னும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடலில் சர்க்கரை அளவை சரியாக பராமரித்தாலே நீரழிவு நோயின் மோசமான தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தை கட்டுப்படுத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்கும் உணவுகளை சாப்பிடுவது அவசியம். இது தவிர நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் பல உணவுமுறைகள் உள்ளன. சில உணவுப் பொருட்கள் இரத்தத்தில் சர்க்கரை கலக்கும் அளவை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதில் ஒன்று தான் பாகற்காய்.
பாகற்காயை பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது தான் அதன் முழுமையான மருத்துவக் குணங்கள் ஒருவருக்கு கிடைக்கும். அதிக கசப்பு சுவைக் கொண்ட பாகற்காயை அப்படியே சாப்பிட முடியாது என்பதால் அதை சாறாக்கி குடித்து வருகின்றனர். இதனால் பாகற்காயில் உள்ள சத்துக்களும் அழிவதில்லை, அதன் பலனும் உடலிற்கு கிடைக்கிறது.
பாகற்காயில் பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச் சத்துக்கள் ஏராளமாக உள்ளன. சரியான அளவு மற்றும் முறையில் உட்கொண்டால், அது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவியாக உள்ளது.
பாகற்காய்களில் பாலிபெப்டைட்-பி வகை புரதம் காணப்படுகிறது. இது இரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. பாகற்காய் சாறு குடிப்பதால் மலச்சிக்கல், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகள் சரி செய்யப்படுகிறது.
மேலும் உடலில் உள்ள நச்சுகளையும் நீக்க உதவுகிறது. பாகற்காய் சாற்றில் குறைந்த கலோரிகளும் அதிக நார்ச்சத்தும் உள்ளதால் இது எடையைக் குறைக்கவும் உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது வயிறு நிரம்பியதாக உணர வைப்பதோடு, கலோரி உட்கொள்ளலையும் குறைக்கிறது.
பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும். பாகற்காய் சாறு குடிப்பதல் முகத்தில் உள்ள பருக்கள், சுருக்கங்கள் குறையக் கூடும். மேலும் சில சருமம் சார்ந்த ஒவ்வாமைகளைக் தடுக்க உதவும். இது சருமத்தின் பளபளப்பை பராமரிக்கிறது.
தினமும் பாகற்காய் சாறு குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது செரிமானத்தையும் மேம்படுத்தும். மேலும் சருமத்திற்கும் நல்லது. எப்போதும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிப்பது நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது பாகற்காயில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. மற்ற வேளையில் பாகற்காய் சாறு குடிப்பதால் முழுப் பலன் கிடைக்காது.