

இந்த மனிதவாழ்க்கை இருக்கிறதே, இது வேடிக்கையானது மட்டுமல்ல! மிகவும் வித்தியாசமானதுங்கூட! அதற்கும் மேலாக, இது அற்புதமானது! அந்த அற்புதத்தை நம்மில் அதிகப் பேர் உணர்வதே இல்லை. 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!' என்று ஔவையார் அழுத்தந் திருத்தமாகச் சொல்லிச் சென்றுள்ளார்.
ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஔவையார் வாழ்ந்ததும், உயர்ந்ததும், சிறந்ததுமே ஒரு பெரும் புரட்சி. அத்தோடு நில்லாது, அருந்தமிழைக் கற்று அகிலத்திற்கே அதனைப் பரப்பவும், அதன் மூலம் அகில உலக மக்களின் உயர் வாழ்வுக்கு வழி சொல்லவும் முனைந்த அவரைப் பாராட்ட வார்த்தைகளும் உண்டோ?
'ஏதோ ஓர் ஆங்கில வார்த்தையைத் தலைப்பாக்கி விட்டு, ஔவையாரின் புகழ் பாடுவது நியாயமா?’ என்ற உங்கள் உள் மனதின் மௌனக் குரல் எனக்கும் கேட்கத்தான் செய்கிறது. செப்டோ (Septo) என்பது ஏழைக் குறிப்பது. இங்கு அது 70+ என்பதன் பிரதிநிதித்துவமாகிறது. அடாலசண்ட் (Adolescent) என்பது டீனேஜ் வயதினரை, அதாவது 13 லிருந்து 19 வயதுக்குள்ளான இளமைப் பருவத்தினரைக் குறிப்பது.
எனவே,செப்டோலசண்ட் (Septolescent) என்றால் எழுபதைத் தாண்டிய இளைஞர்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளலாம்.
ஆம்! ஒரு செப்டோலசண்ட் என்பவர் எழுபது வயதைத் தாண்டியிருந்தாலும், பதினெட்டு வயது இளைஞரின் உற்சாகத்துடன் உலா வருபவர் என்று கூறலே பொருத்தமானது.
பொதுவாக அகவை எழுபதைக் கடந்து விட்டாலே, ’எனக்கு வயதாகி விட்டது. வாழ்க்கை முடிந்து விட்டது!’ என்று அங்கலாய்ப்பவர்களே நம்மில் அதிகம். இயற்கை அருளால் எழுபது வயதைக் கடப்பதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும். பலர் அதைப் புரிந்து கொள்வதே இல்லை. மனிதர்களின் பொதுவான ஒரு குறை, தம்மிடம் இருக்கும் ப்ளஸ் பாயிண்டுகளைக் கண்டு கொள்ளாமலே, இல்லாத ஒன்றுக்காக ஏங்குவதே. ஆனால் அவ்வாறில்லாமல், இருப்பது எதுவானாலும் அதனை உயர்வாக மதித்துப் போற்றி அதனைத் தனக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும் விதமாகப் பார்த்துக் கொள்பவர்களே சமுதாயத்திற்குத் தேவைப்படுபவர்கள். அவர்களே நல்ல சமுதாயத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள். எழுபதைக் கடந்தவர்களும் இந்த பத்துக் கட்டளைகளைக் கடைப் பிடித்தால் சமூகப் பில்லர்கள் ஆகலாம்.
முயல்வோமே!
எப்பொழுதும் நம்மை பிசியாகவே வைத்துக் கொள்ளல்: சும்மா டி.வி பார்த்துக் கொண்டோ, தேவையற்றவைகளில் சிந்தனைகளைச் செலுத்தி நேரத்தை வெறுமனே போக்காமல், பயனுள்ள விதத்தில் பணிகளைச் செய்தல். கற்றவர்கள், குழந்தைகளுக்கு இலவச டியூஷன் எடுக்கலாம்; அனுபவசாலிகள் புத்தகங்கள் எழுதலாம்; வீட்டுத் தோட்ட வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற பிறவற்றில் கவனம் செலுத்தலாம்.
நட்பு வட்டாரத்தைத் தூக்கிப் பிடித்தல்: தனியாக உட்கார்ந்து கொண்டு குறுகுறுவென எதையாவது சிந்தித்துக் குமையாமல், நண்பர்களிடம் செல்போனில் பேசுவது; அருகிலுள்ள நண்பர்களை அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழ்வது; முடிந்த நேரங்களில் டீயோ, காபியோ அருந்தியபடி அளவளாவுவது என்று இருக்க வேண்டும்.
நகர்வலம் செல்வதில் நாட்டம் கொள்ளல்: வீட்டுக்குள்ளோ, ஹோட்டலுக் குள்ளோ முடங்கிக் கிடக்காமல், நகரின் விசேஷமான நான்கு இடங்களுக்குப் பஸ்ஸிலோ, ரயிலிலோ சென்று வந்தால் மனது லேசாகும். கூட்டமான மனிதர்களைக் காண்பதே மனதுக்கு ஊக்கம் தரும். பண்டிகைகளைக் கொண்டாடுவதன் நோக்கமே அதுதானே!
உறவுகளை உரிய முறையில் பேணுதல்: குடும்பத்தார், உறவினர், பேரப் பிள்ளைகளிடமும் பாசத்துடன் பழகுவதுடன், அவர்களின் சுதந்திரங்களில் தலையிடாமல், தற்கால நிலையறிந்து அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்தல். அதுவே உங்களையும் அவர்களில் ஒருவராக்கும்.
சிறு இலக்குகளைத் தாங்களே நிர்ணயித்துக்கொண்டு, நிறைவேற்றுதல்: இந்த வாரம் அந்தச் செடியை நட்டு விட வேண்டுமென்றோ, இந்த மாதம் முடிவதற்குள்ளாக அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிட வேண்டுமென்றோ இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை நிறைவேற்றவும் முயற்சி செய்தல்.
சுய ஆரோக்கியத்தில் ஈடுபாடு காட்டுதல்: சாதாரண சிறு உடல் உபாதைகளைப் பெரிது படுத்தாமல், வயதாகும்போது இவையெல்லாம் இயல்பாகவே ஏற்டக்கூடியவை என்பதை உணர்ந்து செயல்பட்டாலும், சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுடன் உடலுக்கு ஒவ்வாதவைகளை விலக்கிவிட்டு, தினசரி உடற்பயிற்சிகளையும், நடைப் பயிற்சியையும் விடாது மேற்கொள்ளல்.
சின்னச் சின்ன விஷயங்களிலும் மகிழ்தல்: பேரன், பேத்திகளின் பிறந்த நாள் விழாக்களையும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்தல். பெரிதான இலக்குகளைஅடைந்தாலே மகிழ்வேன் என்றில்லாமல், பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் கேட்டுத் திருப்தி கொள்ளுதல். தூறும் மழையும், காலை நேரக் கனிவான வெயிலுங்கூட மனதை வருடி இதமளிப்பவைதானே!
நன்றியறிதலை நாளும் வெளிப்படுத்துதல்: இல்லாததை எண்ணி வருந்தாமல், இவ்வளவையும் கொடுத்த இறைவனுக்குத் தினசரி நன்றி கூறுவதுடன் சந்தோஷம் அடைதல்.
எப்பொழுதும் புன்முறுவலுடன் இருத்தல்: எதற்காகவும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இஞ்சி தின்ற குரங்காக முகத்தை வைத்துக் கொள்ளாமல், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருந்தால், அதுவே நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஓர் ஆறுதலைக் கொடுக்கும்.
உள்ளதைக் கொண்டே உளத் திருப்தி அடைதல்: ’என்னிடம் கோடிக் கணக்கில் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஆரோக்கியமும், உடல் உற்சாகமும் என்னைக் கோடீஸ்வரர்களைக் காட்டிலும் சந்தோஷமாக வைத்திருக்கிறதே! அப்படியானால் நான் கோடீஸ்வரனுக்கும் மேல்தானே!' என்ற எண்ணம் வந்து விட்டாலே இந்தப் பூவுலகமே சொர்க்கந்தானே!
என்னங்க! அதுக்குள்ள எங்க ஓடறீங்க?
என்னது உற்சாகம் ஆயிட்டீங்களா?
ஓ! செப்டோலசண்ட் ஆகிட்டேங்கறீங்களா?
ஆகுங்க! ஆகுங்க! அதுதானே வேண்டும்!