

முதன் முதலாக மக்கள் மூலிகைகளை தான் மருந்தாக பயன்படுத்தினார்கள். பிறகு, மூலிகை செடிகளில் இருந்து சாறை எடுத்து அதில் மருந்தை தயாரித்தார்கள். அதற்கு பிறகு, அவற்றை பொடியாக்கி மாத்திரைகளை தயாரித்தார்கள்.
எகிப்திய நாகரீகத்தின் போதுதான் முதன் முதலில் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அக்காலத்தில் அந்த மருந்துகள் களிமண்ணில் அல்லது ரொட்டியில் கலந்து தயாரிக்கப்பட்டன.
பின்னர், ஐரோப்பாவில் தொழிற்புரட்சி தொடங்கிய பிறகு, 1960ஆம் ஆண்டில், வெள்ளை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டன. உயர் தொழில்நுட்ப வளர்ச்சியுடன், மருந்துகளின் தயாரிப்பிலும் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் விளைவாக 1975ஆம் ஆண்டில், நிறங்களை கொண்ட மாத்திரை தயாரிப்புகள் பரவலாகின. இப்போதோ, மருந்து கடைகளில் பல்வேறு வண்ணங்களில் மாத்திரைகளை நாம் பார்க்கிறோம்.
இன்றைய நாட்களில், ஒரு தலைவலி வந்தால் கூட நாம் மாத்திரை போட்டுக் கொள்வது வழக்கமாகி விட்டது. பல்வேறு விதமான உடல்நல பிரச்சனைகளை சரி செயவதற்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் நாம் இந்த மாத்திரைகளை எடுத்து கொள்கிறோம். இந்த மாத்திரைகள் வேறுபட்ட நோய்களை தடுக்கும் வகையில் வெவ்வேறு விதமான கெமிக்கல்ஸ் மற்றும் வேறுபட்ட விகிதங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே மாத்திரைகளிலிருக்கும் உட்பொருள், அளவு இவை எல்லாம் மாறுபட்டிருக்கும்.
ஆனால், இவற்றின் நிறங்களும் மாறுபட்டிருக்கிறதே ஏன்?
வேறுபடுத்தி காண்பிப்பதற்காக: ஒரு நோயாளி ஒரே நேரத்தில் பல வகையான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியிருக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒரு தனிப்பட்ட நிறம் இருந்தால், குழப்பமின்றி சரியான மாத்திரையை அடையாளத்தோடு எடுத்து கொள்ள ஏதுவாக இருக்கும். இப்படி நிறங்களும் வடிவமும் வேறு பட்டிருந்தால், மாத்திரைகளை மாற்றி எடுத்துக் கொள்வதற்கான அபாயங்கள் குறையலாம்.
மருந்தின் வீரியம் மற்றும் தன்மை: மாத்திரையின் வேறுபட்ட நிறம் அதனுடைய வீரியம் (Dosage) மற்றும் தன்மையை கூட குறிக்கலாம். உதாரணமாக, ஒரே மாத்திரை 500mg மற்றும் 650mg-லும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரண்டும் ஒரே நிறத்திலிருந்தால் நமக்கும் மற்றும் கடைகாரர்களுக்கும் சந்தேகத்தை எழுப்பலாம். தனித்தனி நிறத்தில் இருந்தால் மருந்து வழங்குபவர்களுக்கும், நோயாளிகளுக்கும் குழப்பம் இல்லாமல் இருக்கும்.
பாதுகாப்பான நிலைத்தன்மை: ஒரு சில நிறமிகள் அதாவது Pigments, மாத்திரைகளை சூரிய ஒளி அல்லது புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இந்த நிறமிகள் மருந்தின் வேதியியல் நிலைத்தன்மையை மேம்படுத்தி, அதன் ஆயுளை நீட்டிக்கவும் செய்கின்றன.
வர்த்தக முத்திரை (Branding): மருந்துகளை உற்பத்தி செய்யக் கூடிய நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகளை மற்ற நிறுவனங்களின் மருந்துகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் வெவ்வேறு நிறங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் ஒரு குறிப்பிட்ட Brand-ன் மருந்தை அதன் நிறத்தை வைத்து அடையாளம் காண முடியும்.
மனரீதியான தாக்கம் (Psychological Impact): சில ஆய்வுகள் மாத்திரைகளின் நிறம், நோயாளிகளின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றன. உதாரணமாக, சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற மாத்திரைகள் ஆற்றலை அதிகரிப்பதாகவும், நீல நிற மாத்திரைகள் மன அமைதியைக் கொடுப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.
மேலே கூறிய கருத்துக்கள் விவரங்களை சேகரித்ததின் அடிப்படையில் தான் எழுதப் பட்டுள்ளன. இவை வெறும் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே எழுதப் பட்டுள்ளன.
Reference: