

மழைகாலம் என்றாலே சளி, ஜுரம் வந்து அவதிப்படுவோர் ஒருபுறம் இருக்க, வயதானவர்கள் மூட்டுவலியால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை, குளிர்காலங்களில் வயதானவர்களும் இளவயதினரும் மூட்டுவலி, தோள்பட்டை, முதுகுவலி என பலவாறு நோய்வாய்ப் படுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் வெயில் காலங்களில் வயதானோர் ஆக்டிவாக தங்கள் வேலைகளை செய்து கொள்வர். வாக்கிங், உடற்பயிற்சி என செய்வர். மழை வந்தாலே குளிருக்கு பயந்து வெளியில் செல்வதை தவிர்ப்பர்.
மழைக்காலங்களில் வெப்பம் குறைந்து ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் வயதானவர்களின் உடல் இயக்கம் குறைகிறது. உடல் இயக்கம் குறைவதால் ரத்த ஓட்டம் குறைகிறது. மூட்டுகளில் விறைப்பு தன்மை, வீக்கம் ஆகியவை உண்டாகி வலியை கொடுக்கிறது.
மூட்டுகளுக்கு இடையே இருக்கும் சைனோவில் (Synovial) என்ற திரவம் குறைவதால் மூட்டுகளில் இறுக்கம் உண்டாகிறது. இதனால் மூட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்கள் வலுவிழந்து மூட்டுகளில் அழுத்தத்தை உண்டாக்குகிறது மற்றும் வலியை அதிகரிக்கிறது. நமது உடலில் உள்ள எலும்புகள் உடலின் வடிவத்தை பராமரிக்கவும், உள் உறுப்புகளை பாதுகாக்கவும் உதவுகிறது. குளிர்காலத்தில், மழையின் போது காற்றின் ஈரப்பதத்தில், வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுத்துவதால் வயதானவர்களின் உடல் இயக்கத்தில் மாற்றத்தை உண்டாக்கி விடுகிறது.
குருத்தெலும்புகளில் வலி, வீக்கம், உணர்வின் மையை ஏற்படுத்துகிறது. குளிர் காலத்தில் இரத்த நாளங்கள் சுருங்குவதால் மூட்டுகளில் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதுதான் மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்பட காரணமாக உள்ளது.
மூட்டு வலிக்கான மற்றொரு காரணம் போதிய அளவு வைட்டமின் டி இல்லாதது. மழை, பனி, குளிர் காலங்களில் சூரிய வெப்பம் குறைவாக இருக்கும். மேலும் முதியவர்கள் குளிருக்கு பயந்து வெளி வெப்பம் படாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து விடுவதால் மூட்டுகளில் இறுக்கம், ரத்த ஓட்டம் குறைதல் போன்றவை ஏற்படுகின்றன.
முதியவர்கள் அதிக ஓய்வில் இருந்தாலும் எடை அதிகரிக்க செய்கிறது. இது மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியைக் கொடுக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வாக மழைக் காலங்களில் மூட்டு வலி ஏற்படாமல் இருக்க மிதமான உடற்பயிற்சி, உடல் இயக்கம், கிடைக்கும் வெப்ப நிலையில் சற்று நேரம் இருத்தல், சமச்சீரான உணவு, ஒமேகா 3 உணவுகள் என தங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்ள மூட்டு வலி ஏற்படாது.
எடையை பராமரித்து ஒமேகா உணவுகளான மீன், கீரை, மஞ்சள், இஞ்சி, அக்ரூட் பருப்புகள், வைட்டமின் டி நிறைந்த முட்டை, காளான்கள், செறிவூட்டப் பட்ட பால், குறைந்த அளவு இறைச்சி என உணவு எடுத்துக் கொள்ள உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப் பெற்று ஆரோக்கியம் மேம்படும்.
மூட்டுகளில் இறுக்கம், வலி இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள், கிரீம், லோஷன் என தடவ குணம் கிடைக்கும். வெந்நீர் அல்லது ஐஸ் மசாஜ் கொடுக்க மூட்டுகளில் இறுக்கம் குறைந்து வலி இன்றி நல்ல சுகத்தைத் தரும்.
மொத்தத்தில் மழைக் காலங்களில் மூட்டு வலியினை தவிர்க்க வீட்டை ஈரப்பதம் இன்றி கதகதப்பாக வைத்துக் கொள்ளல், நடைபயிற்சி, உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது, சமச்சீரான உணவு, கால்களுக்கு வெகுநேரம் அழுத்தம் கொடுக்காமல் இருப்பது போன்ற செய்கைகளால் மூட்டு வலியைக் தவிர்க்கலாம்.
வயதானவர்கள் அதிக குளிர், மழையை தாங்க மாட்டார்கள். அப்போது பாதுகாப்பான உடைகளும், உணவுப் பழக்கத்தையும் மேற்கொள்ள சௌகரியமாக இருப்பர்.