கண்ணீரும் உப்பு தான் , வியர்வையும் உப்பு தான்.... காரணம் என்ன தெரியுமா?

science of tears and sweat
Why are tears salty? Image credit: AI image
Published on

​கடல் நீர் உப்பாக இருப்பதன் காரணம் நாம் அறிவோம். ஆனால் நம் கண்ணீர் ஏன் உப்பாக இருக்கிறது? நமது வியர்வைத் துளி எதனால் உப்பு கரிக்கிறது என்பதை எல்லாம் நாம் யோசித்து இருப்போம். பெரும்பாலும் நாம் உணர்ச்சி வசப்படும் போது கண் கலங்குவது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு செயலாகும், சில நேரங்களில் அதிக மகிழ்ச்சியை அடையும் போதும் நம்மை அறியாமல் கண்கள் கலங்குகின்றன.

உடலில் வியர்வை உண்டாக பல காரணங்கள் உண்டு. அதிகப்படியான வெப்பம், காற்றோட்டம் இல்லாத அறை , புழுக்கம், அதிக உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவை உடலில் வியர்வையை ஏற்படுத்துகின்றன. வியர்வையின் சுவை உப்பாகவே இருக்கிறது (Why are tears salty?). என்ன காரணத்தினால் வியர்வையும் கண்ணீரும் உப்பாக இருக்கிறது? அறிந்து கொள்வோம்... 

கண்ணீர் என்பது உடலில் இருந்து வெளியேறும் வெறும் தண்ணீரினால் மட்டும் ஆனது அல்ல. அறிவியல் பூர்வமாக கண்ணீரையும் மூன்று வகைப்படுத்தலாம்.

1. அடிப்படைக் கண்ணீர் (Basal Tears):

இந்தக் கண்ணீர் எப்போதும் நம் கண்களில் இருப்பது, இது பெரும்பாலும் கண்களைத் தாண்டி வழியாது. இந்த கண்ணீர் கண்ணில் உள்ள விழித்திரையை பாதுகாக்க ஈரப்பதமாக வைத்திருக்க சுரக்கிறது.

2. ​தூண்டல் கண்ணீர் (Reflex Tears): 

கண்ணில் ஏதேனும் தூசி விழும் போதோ, வெங்காயம் நறுக்கும் போதோ, புகை கண்ணில் படும்போதோ, உறுத்தல் உண்டாகி சுரக்கும் கண்ணீர். இது கண்களை விட்டு சிறிய அளவில் வெளியே வரும்.

இதையும் படியுங்கள்:
ஜிம்முக்கு டாட்டா சொல்லுங்க... வியர்க்காமலேயே உடம்பை குறைக்கலாம்... எப்படின்னு பாருங்க!
science of tears and sweat

3.​உணர்ச்சி கண்ணீர் (Emotional Tears): 

இந்த கண்ணீர் மகிழ்ச்சி அல்லது சோக நிகழ்வின் போது வெளியேறும். சோக நிகழ்ச்சியை கேள்விப்படும்போது அதிகமாக கண்ணீர் வெளிப்படும். 

கண்ணீரில் 98 சதவீதம் நீர் இருந்தாலும், மீதமுள்ள பகுதியில் உப்பு சுவை கொண்ட சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. இதனுடன் லிப்பிட்கள் மற்றும் லைசோசைம் (Lysozyme) போன்ற என்சைம்களும் உள்ளன. இந்த என்சைம்கள் கண்களில் புகும் கிருமிகளை அழிக்கும் கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. கண்ணீரில் உள்ள உப்பு, கண்களின் செல்கள் வீங்காமல் தடுக்கவும், கண்ணில் திரவ அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.

வியர்வை ஒரு இயற்கை குளிரூட்டி:

அதிகப்படியான உழைப்பின் போது உடல் சூடாவதைத் தடுக்க, மூளை சருமத்தில் இருக்கும் வியர்வை சுரப்பிகளை தூண்டி வியர்வையை வெளியிடுகிறது. வியர்வை என்பது நம் உடலுக்கு இயற்கையான ஏசியை (Air conditioner) போன்றது. வியர்வை வெளியேறி சருமத்துக்கு ஈரப்பதத்தை கொடுத்து உடலை குளிர்விக்கிறது. 

வியர்வையில் அதிகப்படியாக தண்ணீர் இருந்தாலும் அதனுடன் சோடியம் குளோரைடு, பொட்டாசியம் போன்றவை இருப்பதால் உப்பு சுவையில் இருக்கிறது. அது மட்டுமல்ல அது ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை குறைக்கவும் , வியர்வை அதிக உப்பை வெளியிடுகிறது. இதனால், அடிக்கடி உடல் உழைப்பை கொடுப்பவர்கள் வியர்வையை வெளியிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கலாம். 

கண்ணீரும் வியர்வையும் உப்பாக இருப்பது, நமது உடலில் தொற்று நோயிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் பாதுகாப்பாக இருப்பதற்கும் தான். உப்பு எப்போதும் ஒரு கிருமி நாசினி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் உள்ள செல்கள் தொடர்பு கொள்ள உப்பின் மூலமாக மின் சமிக்ஞைகளை அனுப்புகின்றன, இதற்கு சோடியம் மிகவும் அவசியம், அத்துடன் தசைகள் சுருங்கி விடுவதற்கும் சோடியம் தேவைப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
சாப்பிடும்போது முகம் வியர்த்தால் அலட்சியம் வேண்டாம்... மருத்துவர்கள் தரும் எச்சரிக்கை!
science of tears and sweat

மூளைக்கு தகவல்களை அனுப்பவும் நரம்புகள் உப்பை தான் பயன்படுத்துகின்றன. மேலும் செல்களை சுற்றியுள்ள நீரின் அளவை கட்டுப்படுத்துவது கூட உப்பின் வேலை தான். நீங்கள் அதிகமாக உணவில் உப்பை பயன்படுத்தினால், வியர்வையும் கண்ணீரும் சற்று அதிகமான உப்பு சுவையுடன் இருக்கும். கண்ணை உறுத்தும் போது வரும் கண்ணீரில் உப்பு குறைவாகவும், சோகத்தில் இருக்கும் போது வரும் கண்ணீர் அதிக உப்புடனும் இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com