
குளிர்ந்த மாதங்களில் சளி, காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்கள் பரவுவது சகஜம். மக்கள் அடிக்கடி வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள், இதனால் வைரஸ்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவும். மற்றும் குளிர், வறண்ட காற்று நோய் எதிர்ப்பை பலவீனப்படுத்தலாம். இலையுதிர் காலத்தில், குளிர்காலத்தில் அல்லது வசந்த காலத்தின் துவக்கத்தில் நோய்வாய்ப்படுவது இயல்பானது, குறிப்பாக காற்று வறண்ட நிலையில் காய்ச்சல் வைரஸ்கள், சிறப்பாக பயணிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
குளிர்ந்த காற்று மூக்கு மற்றும் மேல் சுவாசப்பாதையில் நுழையும் போது, வைரஸை எதிர்த்துப் போராடுவதில் உடல் அவ்வளவு திறம்பட செயல்படாது. எனவே ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் கோவிட்-19 போன்ற வைரஸ்கள் பெரும்பாலும் குளிர்காலத்தில் எளிதாகப் பரவும். காய்ச்சல் வைரஸ், இன்ஃப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது. குளிர் மாதங்களில் பருவகால அச்சுறுத்தலாக மாறும் இது, பலருக்கு காய்ச்சல், உடல் வலி மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் குளிரில் மிகவும் நிலையானதாக அறியப்படுகிறது.
குளிர்கால வானிலை, காய்ச்சல் வைரஸ் செழித்து வளர சரியான சூழ்நிலையை உருவாக்குகிறது. லிப்பிட் சவ்வு எனப்படும் காய்ச்சல் வைரஸின் வெளிப்புற அடுக்கு எண்ணெய்கள், கொழுப்புகள், கொலஸ்ட்ரால் மற்றும் மெழுகுகளால் ஆனது. குளிர்ந்த வெப்பநிலையில், லிப்பிட் ஒரு ஜெல்லாக மாறி, வைரஸைப் பாதுகாக்கிறது மற்றும் அது உயிர்வாழவும் பரவவும் அனுமதிக்கிறது. குளிர்காலத்தில் இந்த கிருமிகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து நோயை எதிர்த்துப் போராட விடாமல் உடலை தடுக்கிறது. குளிர்ந்த மாதங்களில் மக்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள், இதனால் வைரஸ்கள் நபருக்கு நபர் பரவுவதை எளிதாக்குகிறது.
ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. இந்த காலகட்டத்தில் சூரியஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டியின் அளவு குறைகிறது. உடற்பயிற்சியின்மை, உணவுமுறை மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலதை மேலும் பலவீனமாக்குகிறது.
குளிர்காலம் காய்ச்சல் பருவமாக இருந்தாலும், உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், நோய் வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் வழிகள் உள்ளன.
* காய்ச்சல் தடுப்பூசி காய்ச்சலுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பாக உள்ளது. ஆண்டுதோறும் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன, ஏனெனில் காய்ச்சல் வைரஸ்கள் ஆண்டுதோறும் மாறுபடும்.
* அடிக்கடி கைகளை கழுவுதல், சானிடைசர்களை பயன்படுத்துதல் மற்றும் உங்கள் முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்ப்பது ஆகியவை வைரஸ் பரவாமல் தடுக்க உதவும்.
* உட்புற காற்றோட்டத்தை மேம்படுத்த, புதிய காற்று புழக்கத்தை அனுமதிக்க ஜன்னல்களைத் திறந்து வைக்கவும். இது வீட்டிற்குள் வைரஸ் பரவுவதை குறைக்கும்.
* காய்ச்சல் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், வீட்டிலேயே இருப்பது மற்றும் பரவுவதைத் தடுக்க மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்ப்பது அவசியம்.
* சீரான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவும்.
* மக்கள் அதிகம் கூடும் நெரிசலான இடங்களுக்கு செல்லும் போது தவறாமல் உயர்தர முககவசத்தை அணியுங்கள்.
* நீங்கள் தும்மும்போது அல்லது இருமும்போது உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள்.
* நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
குளிர்கால மாதங்களில் காய்ச்சல் அதிகமாக இருக்கும் அதே வேளையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் காய்ச்சல் வராமல் காத்து கொள்ளலாம். தடுப்பூசி போடுவது மற்றும் நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், காய்ச்சலின் தாக்கத்தை குறைத்து, குளிர்காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.