
குளிர்காலத்தில் நம் உடலில் வெப்பம் இழக்கப்படுவதால் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இச்சமயத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகளை உட்கொள்வது முக்கியம். குறிப்பாக, கேரட் இதில் மிகவும் முக்கியமானது. எனவே, இந்தப் பதிவில் குளிர்காலத்தில் ஏன் நாம் நம் உணவில் கேரட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு வகையான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. குறிப்பாக, குளிர்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்களிலிருந்து இது நம்மை பாதுகாக்கிறது.
நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு பீட்டா கரோட்டின் மிகவும் முக்கியம். இது கேரட்டில் அதிக அளவு உள்ளது. இதனால், கண் பார்வை கூர்மையாக்கி கண் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்.
விட்டமின் ஏ நிறைந்த உணவுகளில் கேரட் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், இதில் உள்ள விட்டமின் சி சருமத்தை பொலிவாகி, சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கிறது. குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்கி எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க கேரட் சாப்பிடுவது அவசியம்.
கேரட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்தத்தை சுத்திகரித்து அதில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். கேரட்டில் கலோரி மதிப்பு குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் தேவையான ஆற்றலை பூர்த்தி செய்வதற்கு கேரட்டில் உள்ள கார்போஹைட்ரேட் மிகவும் உதவுகிறது. இது உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவும். மேலும், இது வயிற்றில் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையைக் குறைத்து செரிமானம் சார்ந்த பாதிப்புகளை எளிதாக்கும்.
மேலே, குறிப்பிட்ட காரணங்களால் குளிர்காலத்தில் அனைவருமே தங்களது உணவில் கேரட்டை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, எந்த நோயும் வராமல் பாதுகாக்கும்.