எந்திரமயமான வாழ்க்கை முறையில் அனைவரும் அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச் சக்கரம் சுழலும் வேகத்தில் பல விஷயங்களை தினசரி மறந்து போகிறோம். வேலைப்பளு, மனஅழுத்தம், கவலை போன்றவை மூளையின் செயல்பாடுகளை சோர்வுற வைத்து, நிறைய விஷயங்களை மனதில் பதிய வைக்காமல் மறக்க வைக்கிறது.
வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெரியோர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும், சிறுவர்களும் கூட நினைவாற்றல் குறைபாடுகளால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் வளரும் பருவத்தில் நினைவாற்றல், கல்வி கற்றலுக்கு பெரிதும் உதவுகிறது. நினைவாற்றல் குறைபாடுகளால் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் நினைவாற்றல் குறைவாக கொண்டவர்களை, யோகாசனம் மற்றும் தியானம் செய்வ சொல்வது நினைவாற்றலை இயல்பாக அதிகரிக்கச் செய்ய உதவும்.
ஒருவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது அவரது மூளையின் சுமை அதிகரிக்கும். இந்த சுமையானது மூளையில் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும்.
மேலும் மூளையில் செல்களையும் பலவீனம் ஆக்குகிறது. இதனால் சில செயல்கள் உடனடியாக மூளையில் பதிவாகுவது இல்லை. கவன குறைபாடுகள், கவன சிதறல்கள் ஆகியவை ஏற்பட்டு நினைவாற்றலின் திறன் குறையத் தொடங்குகிறது.
யோகாசனம் செய்வது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க வைக்கிறது. நினைவாற்றலை அதிகரிக்க செய்ய இது ஒரு எளிதான செயல்முறையாகும். யோகாசனம் செய்யும் பொழுது ஆக்ஸிஜன் அளவு அதிகமாக உள்ளே இழுக்கப்படுகிறது. இந்த ஆக்சிஜன் மூளைக்கு சரியான அளவில் ரத்த ஓட்டத்தை வழங்குகிறது. மூளையின் ரத்தஓட்டம் ஒருவரின் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தினை குறைக்கிறது. இதனால் அவர் செய்யும் செயல்களில் கவனமாக செயல்படுவார்.
மனதினை அமைதிப்படுத்தும் யோகா, தியானம் மற்றும் பிராணயாமம் ஆகியவற்றையும் தொடர்ந்து பயிற்சி செய்வது மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது. இதனால் செய்யும் செயல்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள ஏதுவாக அமைகிறது. மேலும் இந்த பயிற்சிகள் ஒருவருக்கு நல்ல தூக்கத்தையும் மன அமைதியையும் தருகிறது. இவை ஒருவரின் நினைவாற்றலில் நேரடியாக நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
தியானம் செய்வதால் கிடைக்கும் பலன்:
தியானம் என்பது யோகா செய்வதற்கு முன் உள்ள அடிப்படை நிலை. இந்த முறையை எவர் வேண்டுமானாலும் எளிதில் பயிற்சி செய்யலாம். ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கண்களை மூடி, புற விஷயங்கள் அனைத்தையும் மறந்து, அமைதியாக அமர்ந்து இருப்பதுதான் தியானம். தியானம் மனதிற்கு அமைதியை தரும். இந்த அமைதி நினைவாற்றலை கட்டுப்படுத்தும் ஹிப்போகேம்பஸ் பகுதியில் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
யோகா மற்றும் பிராணயாமம்:
தியானத்தின் மேம்பட்ட வடிவம் தான் யோகாசனத்தின் பிராணயாமம். யோகாவில் பல ஆசனங்கள் உள்ளன. அவற்றோடு பிராணயாமம் செய்வது மனதை ஒருநிலை படுத்துவது மட்டும் இல்லாமல் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் மூளை மற்றும் உடல் முழுக்க ஆக்சிஜன் சரியாக செல்கிறது.
ஆக்சிஜன் இரத்த ஓட்டத்தை மூளை மற்றும் நரம்புகளில் சீராக பாய வைக்கிறது. இது நினைவாற்றலை அதிகரிக்க செய்வதோடு, மனதையும் அமைதியாக்குகிறது. தொடர்ச்சியாக இதை பயிற்சி செய்பவர்களுக்கு அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு ஆளாகும் அபாயம் குறைகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)