

உடல் எடை அதிகம் இருப்பவர்கள் எடையை குறைக்க பல்வேறு வகையான பயிற்சிகளை செய்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்றாக நடைப்பயிற்சி இருக்கிறது. அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் செய்யும் நடைப்பயிற்சியில் செய்யக்கூடாத 7 தவறுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மெதுவாக நடக்கக்கூடாது
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிமிடத்திற்கு 100 முதல் 120 அடிகள் வரும்படி சுறுசுறுப்பாக நடப்பதால் இதயத்துடிப்பு அதிகமாகி விரைவான கலோரி எரிப்புக்கு உதவி உடல் எடை குறைய ஆரம்பிக்கும். மெதுவாகவும் ரிலாக்ஸ் ஆகவும் நடந்தால் மன அமைதி கிடைக்கும் என்றாலும் உடல் எடை குறையாது.
வார்ம்-அப், கூல்-டவுன் இரண்டையும் தவிர்க்கக்கூடாது
நடைப்பயிற்சி செய்வதற்கு முன்பாக வார்ம்-அப் செய்து உடலை தயார்படுத்துவதோடு, நடைப்பயிற்சிக்குப் பின்பும், கூல்-டவுன் செய்து உடலை ரிலாக்ஸ் செய்வது முக்கியம். ஏனென்றால் வார்ம்-அப் செய்யவில்லையென்றால் தசைகள் இறுக்கமாகவே இருந்து விரைவில் சோர்வை ஏற்படுத்தும். கூல்-டவுன் செய்யவில்லை என்றால் காயம் அல்லது தசைப்பிடிப்பு ஏற்படும்.
மோசமான போஸ்சரில் நடக்கக்கூடாது
தலையும் முதுகும் நேராக நிமிர்ந்து இருக்கும்படி சரியான போஸ்சரில் நடப்பதன் மூலமே தசைகள் வலிமை பெறுவதோடு தசை பிடிப்புகள் தவிர்க்கப்பட்டு அதிக நேரம் நடப்பதில் சிரமம் இருக்காது. குனிந்த கழுத்துடன் நடப்பது, மொபைல் பார்த்தபடியே நடப்பது, கால்களை இழுத்து நடப்பது, தரையை பார்த்தபடியே நடப்பதால் உடலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.
தவறான காலணி அணிவது
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிக பலன் பெற நல்ல குஷனிங், கிரிப் இருக்கும்படியான ஷூ வை பயன்படுத்துவது அவசியம். நடக்கும் போது கழன்று கொள்ளும்படியான இலகுவான ஷூ அல்லது செருப்புகளை அணிவது மூட்டு வலி, பாத வலி போன்றவற்றை ஏற்படுத்துவதோடு நடைப்பயிற்சியின் தூரம் குறைந்து உடல் எடை குறைவதில் தாமதம் ஏற்படும்.
மாறுபட்ட நேரங்களில், வெவ்வேறு இடங்களில் நடக்க வேண்டாம்
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நன்கு பழக்கப்பட்ட இடத்தில் நடப்பதால் நல்ல பலன்களை உடலுக்கு கொடுக்கும். மாறுபட்ட இடங்களில் நடக்கும் போது மூளை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும் என்பதால் கவனச்சிதறல் ஏற்பட்டு கலோரி எரிப்பிலும் சிக்கல் ஏற்படும்
போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது
நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னரும் நடைப்பயிற்சி செய்த பிறகு 30 நிமிடங்களுக்கு பின்னரும் அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் நடைப்பயிற்சியின் போது உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு சோர்வடைந்து பசி உணர்வை தூண்டக்கூடும். நடைப்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் தண்ணீர் குடிப்பதால் நீரிழிப்பிலிருந்து உடலைக் காத்து ஆற்றலை கொடுப்பதோடு, கொழுப்பு சத்து உட்கிரகிக்கப்படவும் உதவும். மேலும் தண்ணீருக்கு பதிலாக எந்த சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களையும் பருகக் கூடாது.
நடைப்பயிற்சியை முடித்தபின் நிறைய சாப்பிடக்கூடாது
30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் 120 முதல் 200 கலோரிகள் வரை குறையும். ஆகவே உடனடியாக ஹெவியான உணவு ஏதாவது உட்கொள்வது, கலோரியை அதிகப்படுத்தும் என்பதால் நடந்த பின்பு ஏற்படும் பசிக்கு புரதம் நிறைந்த பழங்கள் அல்லது மிதமான உணவை உட்கொள்ளலாம்.
மேற்கூறிய 7 விஷயங்களை உடல் எடையைக் குறைக்க நினைத்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.