

உடற்பயிற்சி என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கு அலர்ஜி வந்துவிடும். ஜிம்மில் சேர்ந்துவிட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அந்தப் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காதவர்கள் நம்மில் பலர். அதிக எடையைத் தூக்குவதும், மூச்சு வாங்க ஓடுவதும், வியர்வை வழியக் கஷ்டப்படுவதும் தான் உடற்பயிற்சி என்று நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
ஆனால், இப்படி உடலை வருத்திக்கொள்ளாமல், ஏசி அறையில் அமர்ந்துகொண்டு செய்யும் வேலைகளைப் போல, மிக எளிமையாக உடலைப் பராமரிக்கும் ஒரு முறை உள்ளது. அதற்குப் பெயர்தான் 'ஜோன் ஜீரோ (Zone Zero)' பயிற்சி.
ஜோன் ஜீரோ என்றால் என்ன?
இதயத்தைத் துடிக்க வைத்து, நுரையீரலைத் திணற வைப்பது ஜோன் ஜீரோ அல்ல. நம்மை அறியாமலேயே நாம் செய்யும் மிக மென்மையான அசைவுகளை இது குறிக்கிறது. உங்கள் இதயத் துடிப்பு இயல்பான அளவை விட மிகக் குறைவாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்வதே இதன் சூட்சுமம். நாம் சாதாரணமாகச் சுவாசிப்பது போலவே, இந்தப் பயிற்சிகளின் போதும் சுவாசம் இயல்பாக இருக்கும்.
நமக்குத் தெரியாமலேயே நாம் தினமும் ஜோன் ஜீரோ பயிற்சியைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். உதாரணமாக, மதிய உணவு உண்ட பிறகு மொபைல் போனை பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் நடப்பது, டிவி சேனலை மாற்ற ரிமோட் தேடுவது, அல்லது அலுவலகத்தில் லிஃப்ட் வேலை செய்யாதபோது அலுத்துக்கொண்டே படியேறுவது என இவை அனைத்துமே இந்த வகையைச் சாரும்.
அறிவியல் மொழியில் இதை 'நீட்' (NEAT) என்று அழைக்கிறார்கள். அதாவது, விளையாட்டு அல்லது உடற்பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்காமல், அன்றாட வேலைகளின் மூலமாகவே கலோரிகளை எரிப்பதாகும். பாத்திரம் கழுவுவது, வீட்டைப் பெருக்குவது, துணி மடிப்பது கூட ஒரு வகையான ஜோன் ஜீரோ பயிற்சிதான்.
நன்மைகள்!
சும்மா உட்கார்ந்திருப்பதை விட, இப்படிச் சின்னச் சின்ன அசைவுகளில் ஈடுபடுவது உடலுக்குப் பெரிய நன்மைகளைத் தருகிறது. ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ரத்த ஓட்டம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், அடிக்கடி எழுந்து நடப்பது அல்லது கைகால்களை அசைப்பது ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
இது மூட்டுகளுக்கு ஒருவித நெகிழ்வுத்தன்மையைக் கொடுத்து, வயதான காலத்தில் வரும் மூட்டு வலிகளைத் தடுக்கிறது. மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பைச் சீராக்க இது உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, மனதிற்கு ஒரு தெளிவையும் இது உண்டாக்குகிறது.
ஜோன் ஜீரோ பயிற்சிகள் சிக்ஸ் பேக் வைப்பதற்கோ அல்லது மாரத்தான் ஓடுவதற்கோ உதவாது. முழுமையான உடல் ஆரோக்கியத்திற்கும், வலிமையான தசைகளுக்கும் தீவிரமான உடற்பயிற்சிகள் அவசியம். ஆனால், உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆரம்பப்புள்ளி. குறிப்பாக உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயிலிருந்து மீண்டு வருபவர்கள் இதைத் தைரியமாகப் பின்பற்றலாம்.
வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய முடியவில்லை என்றாலும், இதுபோன்ற சிறிய மாற்றங்கள் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜிம்முக்குப் போக நேரம் இல்லை என்று சாக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, இருக்கும் இடத்தில் இருந்தே உடலை அசைக்கத் தொடங்குங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)