வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய உலகில், பழையவை அனைத்தும் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டே வருகிறது. பழங்காலத்தில் பயன்படுத்திய பொருட்களும், நாணயங்களும் இப்போது வரலாறாய் மாறி நிற்கிறது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய பொருட்கள் கூட தற்போது பழையது என்ற வகையில் சேர்க்கப்பட்டு விட்டது. அவ்வகையில் மக்களிடையே அதிகளவில் புழக்கத்தில் இருந்த 10 ரூபாய் நோட்டுகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகின்றன . பொதுமக்களில் பலரும் இது பற்றி சிந்திக்கவில்லை. 10 ரூபாய் நாணயங்களின் வருகைக்குப் பின், நோட்டுகள் குறைந்ததா அல்லது வேறு என்ன காரணமாக இருக்கும் என்ற சுவாரஸ்யமான தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
சில 10 ரூபாய் நோட்டுகள் பாக்கெட்டில் வைத்தாலே கிழிந்து விடுகின்ற அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம் அதிக புழக்கத்தில் இருந்த 10 ரூபாய் நோட்டுகளுக்கு இப்படி ஒரு மோசமான நிலை ஏற்படும் என்று பலரும் சிந்தித்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். இருப்பினும் கால மாற்றத்திற்கு ஏற்ப பழைய நோட்டுகளை பயன்படுத்துவது குறைவாகிறது. மேலும், சந்தையில் கூட பழைய 10 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. சந்தையில் கிடைக்கும் 10 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை இப்போது நல்ல நிலையில் இல்லை என்பதே உண்மை. கிழிந்தோ அல்லது அழுக்காகவோ தான் இருக்கின்றன. புதிய 10 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் சந்தைக்கு வருவதில்லை.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கியின் நோட் பிரிண்ட் பிரைவேட் லிமிடெட் (ம) செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பொறுப்பில் உள்ளது.
2019-20 நிதியாண்டில் மட்டும் 10 ரூபாய் நோட்டுகள் சுமார் ரூ.147 கோடிக்கு அச்சடிக்கப்பட்டன என ரிசர்வ் வங்கி கூறியது. அதற்கு அடுத்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை குறைந்து, ரூ.128 கோடியே 40 லட்சத்திற்கு மட்டுமே அச்சடிக்கப்பட்டன என தகவல் வெளியானது. அதற்குப் பிறகு 2021-22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, ரூ.75 கோடிக்கு மட்டுமே 10 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இதன்மூலம் 10 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸின் வருகைக்குப் பிறகு ரிசர்வ் வங்கி 'கிளீன் மனி (Clean Money)' என்ற திட்டத்தை கையில் எடுத்தது. இத்திட்டத்தின் மூலம் கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
மனி கண்ட்ரோல் அறிக்கையின் படி, 20 ரூபாய் நோட்டுகளை விட 10 ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்க அதிகமாக செலவாகிறது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சந்தையில் புதிய 10 ரூபாய் நோட்டுகள் வராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இனி சில வருடங்கள் சென்றால், 10 ரூபாய் நோட்டுகளைக் காண்பது கூட அரிதாகி விடும். இதனையும் பழைய ரூபாய் நோட்டுகள் வரிசையில் நினைவுகளாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான் .