Financial Quotes  
பொருளாதாரம்

உங்கள் கனவை அடைய ஊக்கப்படுத்தும் 5 பொருளாதார வாசகங்கள்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

உங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றவும், நிதித் தேவையைப் பூர்த்தி செய்யவும், உங்கள் இலட்சியத்தை அடையவும் ஊக்கப்படுத்தும் சில பொருளாதார வாசகங்களை இங்கே காண்போம்.

ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஏதேனும் ஒரு லட்சியத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியது அவசியமாகும். இந்த லட்சியம் ஒவ்வொருவருக்கும் வேறு வேறாக இருக்கும். ஆனால் அனைத்துமே பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை தான். பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் மாணவர்களை நோக்கி, வருங்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்? உனது லட்சியம் என்ன? போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். அனைத்து மாணவர்களும் ஒரே விதமான பதிலைத் தருவதில்லை. மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி, விமான ஓட்டி, மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரி மற்றும் சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என ஒவ்வொரு மாணவரும் தனக்குள் இருக்கும் ஆசையை வெளிப்படுத்துவார்கள். ஆனால், முடிவில் அனைவருமே அவர்கள் சொன்னபடி ஆளாகிறார்களா என்றால், அதன் விகிதம் மிகக் குறைவு தான்.

“நீங்கள் உங்கள் கனவை உருவாக்கவில்லை எனில், மற்றவர் கனவை நிறைவேற்ற உதவும் பணியாளராக வேலைக்கு அமர்த்தப்படுவீர்கள்”.

ஆம், இது முற்றிலும் உண்மை. ஒவ்வொருவருக்கும் தாம் வருங்காலத்தில் இப்படி ஆக வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவை நோக்கி முழுமனதோடு பயணித்தால் மட்டுமே லட்சியத்தை அடைய முடியும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் இருக்கும். ஆனால், குடும்பச் சூழ்நிலை மற்றும் நிதித்தேவையால் பலரும் இங்கே தங்களுடைய கனவைத் தொலைத்து விட்டு, அடுத்தவரின் கனவுக்காக மாதம் முழுவதும் அயராது உழைக்கின்றனர்.

“நீங்கள் எப்போதும் ஒரு புதுமையான கண்டுபிடிப்பாளராக இருங்கள்; இதனைத் தவிர்த்து அடுத்தவரைப் பின்பற்றுபவராக இருக்காதீர்கள்”.

உங்கள் கனவை நிறைவேற்ற புதுப்புது சிந்தனைகளை செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மற்றவர் செயல்களைப் பின்பற்றினால் கிடைக்கும் வெற்றி என்றும் உங்களைத் திருப்திபடுத்தாது.

“ஆயிரம் மைல் தொலைவு பயணத்தை முதல் அடியில் இருந்து தான் தொடங்க வேண்டும்”.

நீண்ட தூர லட்சியப் பயணத்தில் வெற்றியை ருசிக்க வேண்டுமானால், அதற்கான முதல் முடிவைத் துணிந்து எடுக்க வேண்டும். இங்கே பலருக்கும் தொடக்கம் தான் பிரச்சினையாக இருக்கிறது. தொடக்கம் தைரியமாக இருந்தால் வெற்றி எளிதாகி விடும்.

“உங்கள் கனவை அடையத் தவறினால் அது தோல்வியில்லை; மாறாக இது மிகச் சிறந்த அனுபவமே”.

உங்கள் லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் போது அதில் நீங்கள் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியை சந்திக்கலாம். ஆனால், இதில் நீங்கள் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டிருப்பீர்கள் அல்லவா! இதுதான் அனுபவம். தோல்வியே கண்டாலும் மனம் தளராது அனுபவத்தை ஆசானாக்கினால், அது உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

“ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அடியை எடுத்து வையுங்கள்”.

உங்கள் கனவை அடைய வேண்டுமெனில், நாள் தவறாது புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது புதிதாய் ஒரு செயலையாவது செய்ய வேண்டும். ஒரு நாளையும் வெறுமனே கழிக்கக் கூடாது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT