இந்தியா பொருளாதார வளர்ச்சியில் தொடர் முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.
தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் இதோ, உலக நாடுகளில் தற்போது நிலவும் நிலையற்ற தன்மையின் காரணமாக சர்வதேச பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படுகிறது. இதற்கு போர் பதற்றம் மற்றும் பருவநிலை மாறுபாடு முக்கிய காரணமாக இருக்கிறது.
அதே சமயம் சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. மேலும் இந்தியாவினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, அந்நிய செலாவணி, உள்நாட்டு கையிருப்பு போன்ற துறைகள் மிதமான முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி 2023 -2024 நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலாண்டு பகுதியில் இந்திய 6.50 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று கணித்தது. ஆனால் அதற்கு மாறாக இந்தியா 7.60 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு இலக்கைக் காட்டிலும் முன்னேறி இருக்கிறது.
அதேசமயம் அரசின் செலவினம் கூடியிருக்கிறது. விவசாயத்துறை உற்பத்தி சரிவைக் கண்டிருக்கிறது. ஆனாலும் தயாரிப்புத் துறை 13. 90 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது.
அதே நிதியாண்டின் பகுதியில் சீனா 4.90 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. உலக நாடுகளில் இந்தியா அதிவேக வளர்ச்சியுடன் பொருளாதார முன்னேற்றத்தில் முதன்மை நாடாக விளங்குகிறது.
இந்தியாவின் மதிப்பு கூட்டுத் துறை மற்றும் உணவுப் பொருள் ஏற்றுமதித்துறை பின்னடைவை சந்தித்து இருக்கிறது. தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறது. இப்படி இந்தியா பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் சில துறைகள் சரிவை கண்டிருக்கின்றன. பல துறைகளில் உயர்வைக் கண்டிருக்கின்றன. ஆனாலும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டிருக்கிறது.