Bank Loan  
பொருளாதாரம்

வங்கிக் கடன் - வட்டி விகிதம் எந்த அடிப்படையில் முடிவாகிறது?

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

அடிப்படையில், வங்கி ஒரு நிதி நிறுவனம். வங்கி, பணத்தைப் பல விதங்களில் பெறுகிறது. இந்தப் பணத்திற்கு வங்கி வட்டி அளிக்கிறது. இந்த வட்டி விகிதம் பொதுவாக குறைவாக இருக்கும். உதாரணமாக, வங்கியில் வைப்பு நிதிகளில் மக்கள் பணத்தைச் சேமிப்பதன் மூலம், வங்கி பணத்தைப் பெறுகிறது . அதற்கு வட்டி அளிக்கிறது . வங்கி பணத்தைப் பல விதங்களில் கடனாக அளிக்கிறது. இந்தப் பணத்திற்கு வங்கி வட்டியைப் பெறுகிறது. இந்த வட்டி விகிதம் பொதுவாக அதிகமாக இருக்கும். உதாரணமாக, வாகனக் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றை அளிப்பதன் மூலம், வங்கி பணத்தை அளிக்கிறது. அதற்கு வட்டி பெறுகிறது.

பெறும் வட்டி விகிதம் - அளிக்கும் வட்டி விகிதம் = நிகர வட்டி பரவல் (Net Interest Rate Spread).

இந்த நிகர வட்டி பரவல் ஒரு வங்கி இலாபகரமாக இயங்குகிறதா, இல்லையா என்பதைச் சொல்லும். இப்போது, கேள்விக்கு வருவோம். வங்கி கடன் அளிக்கும் போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வட்டி விகிதத்தினை முடிவு செய்கிறது. அது அந்தக் கடனில் உள்ள பணத்தை இழக்கும் அபாயத்தைப் பொறுத்து முடிவாகும். ஒருவருடைய பின்வரும் அம்சங்களைப் பொறுத்து, அவரது வட்டி விகிதம் முடிவாகும்.

  • கடந்த காலங்களில் கடன் வாங்கிக் கட்டிய வரலாறு (credit history) - சரியாக கடன் கட்டியிருந்தால், குறைந்த வட்டி விகிதம் கிடைக்கும்.

  • கடன் மதிப்பீடு (credit score) - நல்ல கடன் மதிப்பீடு இருந்தால், குறைவான வட்டி விகிதம் கிடைக்கும்.

  • கடன் தொகை - கடன் தொகை அதிகரிக்க அதிக வட்டி விகிதம் முடிவாகும். ஏனென்றால், கடன் வாங்கியவர் ஏமாற்றும் பட்சத்தில், வங்கி பணத்தை இழக்க அதிக வாய்ப்புண்டு. 

  • கடனாளியின் மாதாந்திர வருமானம் - குறைந்த வருமானம் எனில், அதிக வட்டி விகிதம் முடிவாகும். ஏனென்றால், கடன் வாங்கியவர் மாதாந்திர கடன் தவணையைச் சரியாக செலுத்தாத பட்சத்தில், வங்கி பணத்தை இழக்க அதிக வாய்ப்புண்டு. 

  • கடன் வகை - அடமானம் சாராத கடன்களான தனிநபர் கடன், கடனட்டைக் கடன்களில் வட்டி விகிதம் அதிகம். அடமானம் சார்ந்த கடன்களான வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் போன்றவற்றில் வட்டி விகிதம் குறைவு. அடமானம் சார்ந்த கடன்களில், கடன் வாங்கியவர் கடனைக் கட்டாவிட்டால், அடமானப் பொருள் கொண்டு, வங்கி பணத்தை மீட்க வாய்ப்புள்ளதால், அடமானம் சார்ந்த கடன்களுக்கு வட்டி விகிதம் குறைவு. 

  • கடனின் காலவரையறை - நீண்ட காலக் கடன்களில் வட்டி விகிதம் குறைவு. ஏனென்றால், வங்கிக்கு நீண்ட காலத்திற்கு வட்டித் தொகை வரும். 

  • கடன் சந்தை நிலவரம் - கடன்கள் வாங்குவதற்கு மக்கள் குறைவாக இருக்கும் போது, குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி, வங்கி மக்களை ஈர்க்க முயலும்.

எனவே, ஒருவருடைய கடன் வட்டி விகிதம் 10% - 20% வரை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். மேலே சொன்னக் காரணங்களால், ஒருவரது கடன் வட்டி விகிதம் முடிவாகும். கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்போம். ஒருவேளை, கடன் வாங்கினால், சீக்கிரமாக அடைத்து, கடனில்லாத வாழ்கைகையை அடைவோம். கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT