பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. ஈடுபாடு உள்ள பரஸ்பர நிதிகள் (Active mutual funds)
2. ஈடுபாடு அற்ற பரஸ்பர நிதிகள் (Passive mutual funds)
இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
திரைப்படங்களுக்கு நிதி அளிக்கும் நிறுவனத்தின் முதலாளியாக (Film financier) உங்களை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் 5 கோடி பணம் முதலீட்டிற்காக உள்ளது என கொள்வோம்.
நீங்கள் இரண்டு விதங்களில் திரைப்படங்களில் முதலீடு செய்யலாம்.
ஈடுபாடு சார்ந்த முதலீடு;
பெரிய நடிகர் திரைப்படம், பெரிய இயக்குனர் திரைப்படம், இதுவரை கையாளப்படாத கதை, இளைஞர்களைக் கவரும் படம் என்று பல்வேறு காரணிகளைக் கொண்டு, குறிப்பிட்ட திரைப்படங்களில் நீங்கள் ஈடுபாடு சார்ந்து முதலீடு செய்கிறீர்கள். ஓர் ஆண்டின் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நீங்கள் 5 படங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொன்றிலும் 1 கோடி முதலீடு செய்கிறீர்கள்.
ஈடுபாடு சார்ந்த முதலீடானது ஒருமுகப்படுத்தப்பட்ட முதலீடு. அதில் லாபம் அதிகமாகவும் வர வாய்ப்புண்டு. அதிக நஷ்டம் வர வாய்ப்புண்டு. நம்முடைய எண்ணம்போல், எப்பொழுதும் படம் வெற்றி பெறாது. பல்வேறு காரணிகளினால், படம் தோல்வியடையலாம்.
ஈடுபாடு அற்ற முதலீடு:
திரையரங்குகளில் அதிக அளவில் பார்க்கப்படும் திரைப்பட வகைகளின் விகிதாச்சாரத்தின்படி, கிராமத்துப்படங்களுக்கு 10%, புது முகங்கள் படங்களுக்கு 10%, பெரிய நடிகர் படங்களுக்கு 30% என்றெல்லாம், ஒரு விகிதாச்சாரம், குறியீடு வரையறுக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு, நீங்கள் உங்களது பணத்தை முதலீடு செய்கிறீர்கள். இதில் படங்களை ஈடுபாட்டுடன் தேர்ந்தெடுப்பதில்லை. ஏற்கனவே முடிவு செய்துள்ள பரவலான விகிதாச்சாரத்தின்படி, குறியீட்டின்படி, 5 கோடி ரூபாயினை 20 படங்களில் முதலீடு செய்கிறீர்கள்.
ஈடுபாடு அற்ற முதலீடானது, பரவலான முதலீடு. இத்தகைய முதலீட்டில் இலாபம் குறைவாக வருமென்றாலும், நஷ்டம் வருவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனென்றால், பரவலான முதலீடு ஆகையினால், ஒரு படம் தோல்வியடைந்தாலும், மற்றொரு படம் வெற்றி பெற்று, முதலீட்டினைப் பெருக்கித் தர வாய்ப்புண்டு.
இதனைப் போலவே, பரஸ்பர நிதிகளிலும் ஈடுபாட்டுடன் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் திட்டங்கள் உள்ளன. ஈடுபாடு அற்று பங்குசந்தையில் அதிக சந்தை மதிப்புள்ள, அதிக நீர்ப்புத்தன்மையுள்ள நிறுவனங்கள் சார்ந்த குறியீட்டினைக் கொண்டு (நிப்டி 50, சென்செக்ஸ் போன்றவை) ஈடுபாடு அற்று முதலீடு செய்யும் திட்டங்கள் உள்ளன.
இத்தகைய ஈடுபாடு அற்று பங்குச்சந்தைக் குறியீடு சார்ந்து முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள், குறியீட்டு நிதிகள் (index funds) எனப்படும்.
குறியீட்டு நிதிகளின் நிறைகள்:
செலவு விகிதம் (expense ratio) குறைவு:
பங்குகள் நிதி மேலாளரின் விருப்பப்படி, அடிக்கடி மாற்றப்படாத காரணத்தினால் பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் செலவாகும் தரகுக் கட்டணம் குறைகிறது. மேலும், பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் நிபுணத்துவம் தேவைப்படாத காரணத்தினால் நிபுணருக்குக் கொடுக்கும் கட்டணம் கிடையாது.இதனால், முதலீட்டின் இலாபத்தில் குறைவானத் தொகை செலவு விகிதமாக எடுக்கப்படுவதால், முதலீடு நன்கு வளர்கிறது. 0.05% செலவு விகிதம் உள்ள குறீயீட்டு நிதிகள் உள்ளன. எனவே, 12% இலாபம் எனில், 11.95% சுளையாக நமக்கு இலாபமாக கிடைக்கிறது.
பணத்தை இழக்கும் வாய்ப்பு குறைவு:
குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யாமல், முதலீட்டுப் பணமானது பல்வேறு துறைகளில் உள்ள, பல்வேறு சந்தை மதிப்புள்ள, பல்வேறு பங்குகளில் குறியீடு சார்ந்து முதலீடு செய்யப்படுவதால், பரவலான முதலீடு ஆகையால் பணத்தை இழக்கும் வாய்ப்பு குறைவு.
குறிப்பிட்ட நபர் மீதான சார்ந்திருத்தல் இல்லை;
நிதி மேலாளர், ஈடுபாடு சார்ந்து பங்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த நபர் ஆசாபாசங்களுக்கு ஏற்ப பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார். அது சரியாகவும் அல்லது தவறாகவும் அமையலாம். பங்குச் சந்தை குறியீடு சார்ந்த முதலீடுகளில் இத்தகைய தனிநபர் ஆசாபாசங்கள் முதலீடுகளை முடிவு செய்யாதபடியால், அது தானியங்கி முறையில் வேலை செய்கிறது. நிதி மேலாளர் மாற்றங்கள் குறித்து, நாம் கவலைக் கொள்ளத் தேவையில்லை.
நீண்ட காலத்தில் நல்லதொரு பணப்பெருக்கம்:
பங்குகள் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்தாலும், நீண்ட காலத்தில் பங்குச் சந்தை ஏறுமுகமாகவே உள்ளது. குறியீட்டு நிதி, பங்குச் சந்தையின் குறியீட்டினை அப்படியே பிரதிபலிப்பதால், பங்குச் சந்தையை ஒட்டி வளர்கிறது. நீண்ட காலத்தில் நல்லதொரு பணப் பெருக்கத்தினைக் கொடுக்கிறது.
குறியீடு சார்ந்துள்ளபடியால் தொடர்ந்து பங்குகள் மாற்றத் தேவையில்லை:
குறியீட்டிலுள்ள பங்குகள் அரிதாக மாற்றப்படும். குறியீட்டு நிதிகளின் பங்குகள், குறியீடு சார்ந்துள்ள படியால், தொடர்ந்து முதலீடானது மாறாமல் வளருவதற்கு ஏதுவாகிறது. வரும் வருமானமானது, மறுமுதலீடு செய்து, நீண்ட காலத்தில் நல்லதொரு பணப் பெருக்கத்தினைக் கொடுக்கிறது. மாறாக, அடிக்கடி மாறும் ஈடுபாடு சார்ந்த முதலீடு, தரகுக் கட்டணம் மூலமாக, அதிகப் பணத்தினை இழக்கிறது. மேலும், வரி என்ற வகையில் அதிக பணத்தினை இழக்கிறது.
குறியீட்டு நிதிகளைப் பயன்படுத்திக்கொண்டு, நாமும் பணத்தைப் பெருக்குவோம்.