பங்குச்சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட்டை ஸ்டாக் மார்க்கெட் அல்லது ஈக்விட்டி மார்க்கெட் என்றும் அழைப்பார்கள். இதைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்கள் இதை மோசமானதாக நினைக்கலாம். ஆனால் உண்மையில் பங்குச்சந்து என்பது மோசமானதல்ல. வாழ்க்கையில் வளங்களைப் பெருக்க வேண்டும் என நினைக்கும் அனைவருமே பங்குச்சந்தையின் அடிப்படைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன?
பங்குச் சந்தை என்பது பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை, வாங்குவதற்கும் விற்பதற்கும் தனிநபர்களும் நிறுவனங்களும் ஒன்று கூடும் இடமாகும். ஒரு நிறுவனத்தின் மீது வாங்கப்படும் பங்குகளை Stocks அல்லது Shares என அழைப்பார்கள். அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போது, அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்களில் பங்குபெறும் பங்குதாரராக நீங்களும் மாறுகிறீர்கள்.
ஷேர் மார்க்கெட் எப்படி வேலை செய்கிறது?
எளிதாக சொல்ல வேண்டுமென்றால், பங்குச் சந்தை என்பது Supply & Demand கொள்கைகளின் கீழ் செயல்படுகிறது. ஒரு நிறுவனம் பொதுவில் செல்ல முடிவு செய்யும்போது, Initial Public Offering (IPO) மூலம் பங்குகளை வெளியிடுகிறது. இந்த பங்குகளை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம். இத்தகைய பங்குகளை வாங்குவதற்கு தற்போது ஏராளமான இணையதளங்கள் வந்துவிட்டன. அங்கு அந்த நிறுவன பங்குகளின் தற்போதைய விலையைப் பார்த்து வாங்கிக் கொள்ளலாம்.
ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதும் நீங்களும் அந்த நிறுவனத்தின் பங்குதாரராக மாறுகிறீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் வாங்கிய பங்குகளின் வளர்ச்சி என்பது, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சியைப் பொறுத்ததாகும். ஒருவேளை நீங்கள் பங்குகளை வாங்கிய நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்தால், உங்களது பணத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை நாம் யாரும் முறையாக கணிக்க முடியாது என்பதால், பலர் இதை சூதாட்டம் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் பங்குச்சந்தை முதலீடு என்பது சூதாட்டம் அல்ல. சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து உங்களது முதலீட்டை நீண்ட காலத்திற்கு செய்யும்போது, நிச்சயம் அதன் பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
பங்குச்சந்தையில் உடனடியாக பணம் சம்பாதிக்க முற்பட்டால், நிச்சயம் உங்களுக்கு கிடைப்பது நஷ்டம் மட்டுமே. எனவே அவசரப்படாமல், உங்களது பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்தால், ஒரு கட்டத்தில் கூட்டு வட்டியின் பலனை நீங்கள் அனுபவிக்க முடியும்.
பங்குச்சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாத நான் எப்படி முதலீடு செய்வது?
உங்களுக்கு பங்குச்சந்தையை பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், எதைப் பற்றியும் அதிகமாக கவலைப்படாமல், Index பங்குகளில் SIP முறையில் முதலீடு செய்யுங்கள். இன்டெக்ஸ் பங்குகள் என்பது, டாப் 30, 50, 100, 250 போன்ற நிலையில் இருக்கும் நிறுவனத்தின் பங்குகள் ஒன்றாக இணைக்கப்பட்ட ஒரு பங்காக்கும். பெரும்பாலும் முதல் நிலையில் இருக்கும் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்காது என்பதால், இவற்றில் முதலீடு செய்வது உங்களுக்கு லாபகரமானதாக இருக்கலாம். ஆனால் தனி நிறுவனங்களில் முதலீடு செய்வதை விட இதன் லாபம் குறைவாக இருக்கும் என்றாலும், நீங்கள் பணத்தை இழப்பதற்கான Risk Factor இதில் மிகவும் குறைவு.
எனவே உங்களுக்கென ஒரு Demat கணக்கைத் தொடங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். இது உங்களது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பு, அனைத்தையும் நன்கு புரிந்துகொண்டு முதலீடு செய்யவும். ஏனெனில் உங்களது பணத்தை நீங்கள்தான் முதலீடு செய்யப் போகிறீர்கள். அது உங்களுடைய புரிதலுடன் இருந்தால், லாப நஷ்டங்களை சரிவிகிதமாக பார்க்கும் மனப்பக்குவம் உங்களுக்குக் கிடைக்கும்.
இந்த பதிவில் பங்குச் சந்தை பற்றி மேலோட்டமாக மட்டுமே பகிர்ந்துள்ளேன். இதில் மேலும் பல நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. அவைப்பற்றி இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.