Bank Accounts 
பொருளாதாரம்

இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கா? அப்போ இது உங்களுக்குத் தான்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

இணையத்தின் பயன்பாடு அதிகரித்த பிறகு, அனைத்து தேவைகளையும் நாம் இணைய வழியிலேயே பூர்த்தி செய்து கொள்கிறோம். பொருட்களை ஆன்லைனில் வாங்குவது முதல் பணப்பரிமாற்றம் வரை அனைத்தும் இணையத்தின் வழியாகவே நடக்கிறது. வேலை மாற்றத்தின் போது சம்பளம் வரவு வைத்தலுக்காக பலரும் புதிய வங்கிக் கணக்குகளை தொடங்குகின்றனர். இன்றைய தொழில்நுட்ப உலகில் பொதுமக்கள் பலரும் ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர். இதனால் என்னென்ன பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது மற்றும் அதனை எப்படி கவனமுடன் கையாள வேண்டும் என்பதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, வீட்டிலிருந்தே வங்கிக் கணக்கைத் தொடங்கும் வசதியும் வந்து விட்டது. வங்கிக் கணக்குகளை தொடங்குவதற்கு ஆதார் எண் கட்டாயமாகும். ஒருவர் பல வங்கிக் கணக்குகளை வைத்திருந்தால், அந்தந்த வங்கியில் ஒரே ஆதார் எண் பதிவு செய்யப்படும். ஒருவர் இரு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது எளிதானதாக இருந்தாலும், அதில் பல நடைமுறை சிக்கல்களும் மறைந்துள்ளன. அதில் ஒன்று தான் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரித்தல். ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்.

அதிகரித்த ஆன்லைன் பணப்பரிமாற்றத்தின் காரணமாக தற்போது பல்வேறு ஆன்லைன் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது, இதுபோன்ற மோசடிகளில் எளிதாக சிக்க வழிவகுக்கும். ஆகவே, நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இரண்டு வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் போது ஏடிஎம் கார்டுகளும் இரண்டாக இருக்கும். ஏடிஎம் கார்டு பயன்பாட்டிலும் மறைமுகக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இது குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

பல வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள், அதில் ஒன்றை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மற்ற வங்கிக் கணக்குகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவை செயலிழந்து போகும். இம்மாதிரியான வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நினைத்தால், அதற்கென தனியாக அபராதம் செலுத்திய பிறகு தான் கணக்கு செயல்படத் தொடங்கும். இதனைத் தவிர்க்க அனைத்து வங்கிக் கணக்குகளையும், அடிக்கடி சீரான இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.

சில வங்கிச் சேவைகள் இலவசமாக கிடைத்தாலும், வேறு சில வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் குறித்து நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் போது, வங்கிகளால் பிடித்தம் செய்யப்படும் சிறிய தொகையை நம்மில் பலரும் கருத்தில் கொள்வதில்லை. அவரவர் நிதித் தேவைகள் மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப வங்கிக் கணக்குகளைத் தொடங்கி கையாள வேண்டும்.

பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளை அப்படியே விட்டு விடாமல், முறைப்படி மூட வேண்டியதும் அவசியம் ஆகும். இல்லையேல் அது பின்னாளில் நமக்கு அதிக அபராதம் கட்ட வேண்டிய சூழலை ஏற்படுத்தி விடும். இனியாவது வங்கிகள் விதிக்கும் கட்டணம் மற்றும் அபராதம் குறித்து விழிப்புணர்வோடு இருப்போம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT