'சிறுதுளி பெருவெள்ளம்' என்பதை உணர்ந்த எவரும், சேமிக்கும் பழக்கத்தில் இருந்து பின்வாங்குவதில்லை. உலகளவில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக விளங்கும் இந்தியாவில் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் எனத் தெரியும். ஆனால் எத்தனை சதவிகிதம் பேர் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது இந்தப் பதிவு.
நாளைய தேவைக்காக இன்றே நாம் சேமிக்கும் ஒரு தொகையானது, பயனுள்ள முறையில் உதவும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். அதற்கேற்ப பலரும் அவரவர் பொருளாதாரத் தேவைக்கேற்ப வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வருகின்றனர். சேமிக்க நினைக்கும் அனைவருக்கும் இன்றைய காலகட்டத்தில் பலவிதமான திட்டங்கள் வந்துவிட்டன. அதில் வங்கிகளும், அஞ்சல் அலுவலகங்களும் போட்டி போட்டுக்கொண்டு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஏற்றியும், குறைத்தும் வருகிறது. இந்நிலையில் உலகளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில் எத்தனை பேர் மாதந்தோறும் சேமிக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கும் சேமிப்புப் பழக்கம் உள்ளது எனில் இதனைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இதில் நீங்களும் ஒருவர் அல்லவா!
இந்தியாவில் தனிநபர் மாதாந்திர சேமிப்புத் தொகையானது மாத வருமானத்தைப் பொறுத்து அனைவருக்கும் வேறுபடுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கும் ஒரு வணிக நிறுவனமான மணிவியூ, இந்தியாவில் மாதாந்திர சேமிப்புப் பழக்கம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. பல்வேறு வகையான மாத வருமானம் கொண்டவர்கள் மத்தியில், அவர்களின் நிதி செயல்பாடுகளை அறிந்து கொள்ள இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கருத்துக்கணிப்பின் முடிவில் மாதம் ரூ.50,000-க்கும் மேல் சம்பாதிக்கும் இந்தியர்களில் 70% பேரும், மாதம் ரூ.30,000-க்கும் மேல் சம்பாதிக்கும் இந்தியர்களில் 51% பேரும் மாதாந்திர சேமிப்பை மேற்கொள்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் 30 வயதைக் கடந்த இந்தியர்கள் மாத வருமானத்தில் 25% தொகையை சேமிக்கின்றனர் எனவும், குறைவான வருமானம் ஈட்டும் இந்தியர்கள் சம்பளத்தின் பெரும்பகுதியை குடும்ப செலவுகளுக்கே செலவிடுகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
குறைந்த மாத வருமானம் கொண்டவர்கள் வைப்பு நிதித் திட்டங்களையும், அதிக மாத வருமானம் கொண்டவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுத் திட்டங்களையும் நாடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்தியர்கள் பலரும் வருங்காலத்தை கணக்கில் கொண்டு சேமிப்பை நிதி இலக்குகளில் ஒன்றாக கருதுகின்றனர். பிள்ளைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு மற்றும் வீடு வாங்குதல் போன்ற எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யவே மாதாந்திர சேமிப்பில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் பலருக்கும் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதை இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. நிதித் தேவைகள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு அத்தியாவசியம் என்பதையும் இது உணர்த்துகிறது. மாதாந்திர சேமிப்பை இன்னுமும் நீங்கள் மேற்கொள்ளவில்லை என்றால், இனியும் தாமதப்படுத்தாமல் உங்களால் முடிந்த அளவிற்கு சேமிப்பைத் தொடங்குங்கள்.