உலகளவில், ஆசிய அளவில் பணக்காரர்கள் யார் யார்? நம் நாட்டில் பணக்காரர்கள் யார் யார்? என்ற கேள்விக்கு ஓரளவு பதில் தெரிந்திருக்கும். ஆனால், தனி மனிதர்களைத் தவிர்த்து ஆசிய அளவில் பணக்கார கிராமம் எது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த கிராமம் எந்த நாட்டில் இருக்கிறது என்று தெரியுமா? கேட்கவே ஆச்சிரியமாக இருக்கிறதா! வாங்க தெரித்து கொள்ளலாம்.
உலகளவில் பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் அதிகரித்து கொண்டிருக்க, மறுபுறம் நாளுக்கு நாள் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தான் பொதுமக்கள் பலரும் வருங்காலத் தேவைக்கு உதவும் வகையில் இப்போதே முதலீடுகளை செய்து வருகின்றனர். தனிமனித முதலீடுகள் மற்றும் சொத்து மதிப்புகளைக் கொண்டு பணக்காரர் யார் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். கிராமத்தைக் காட்டிலும் நகரத்தில் தான் தினசரி பொருளாதாரம் அதிகமாக இருக்கும். இருப்பினும் நகரங்களில் அதிகமாக வசிப்பது கிராம மக்கள் தான். அதனால் தான் கிராமங்களில் வாழும் மக்களின் வருமானம் அதிகரித்து காணப்படுகிறது.
சமீபத்திய ஆய்வு முடிவில், ஆசியாவிலேயே பணக்கார கிராமம் இந்தியாவில் தான் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்து வரும் நிலையில் இது சாத்தியமான ஒன்று தான். சரி பணக்கார கிராமம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா! பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக செயலாற்றிய குஜராத் மாநிலம் தான் அது.
குஜராத் மாநிலத்தில் இருக்கும் புஜின் நகரில் உள்ள மாதாபர் கிராமம் தான் ஆசியாவிலேயே பணக்கார கிராமம். இங்கு சுமார் 20,000 வீடுகள் உள்ளன. ஏறக்குறைய 32,000 மக்கள் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்கு விளைவிக்கப்படும் விவசாயப் பொருள்கள் மும்பைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இக்கிராமத்தைச் சேர்ந்த 1,200 குடும்பங்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இருப்பினும் அவர்களது வருமானம் கூட உள்ளூர் வங்கிகளில் தான் வரவு வைக்கப்படுகிறது.
மொத்தமாக இந்த கிராம மக்கள் சுமார் 7,000 கோடி ரூபாயை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். ஒவ்வொரு தனிநபரின் வங்கிக் கணக்கிலும் சராசரியாக ரூ.15 இலட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, பிஎன்பி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் யூனியன் வங்கி உள்பட மொத்தம் 17 வங்கிக் கிளைகள் இந்த கிராமத்தில் உள்ளன.
மாதாபர் கிராமத்தில் சாலை, சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற வசதிகளும் சிறப்பாகவே உள்ளன. வங்கியில் மக்கள் வைத்திருக்கும் மொத்த பண இருப்பின் அடிப்படையில் தான் பணக்கார கிராமம் நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வகையில் மாதாபர் கிராமம் ஆசிய அளவில் பேசுபொருளாக மாறி சாதனை படைத்து விட்டது.
இங்குள்ள மக்கள் சிலர் வெளிநாட்டில் வேலை செய்வதன் காரணமாகவே இந்த அசுர வளர்ச்சி ஏற்பட்டது எனச் சொல்லப்படுகிறது.