Job Loss Insurance 
பொருளாதாரம்

வேலை இழப்புக் காப்பீடு யாருக்கெல்லாம் பயன்படும்?

ரா.வ.பாலகிருஷ்ணன்

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், இளைஞர்கள் தங்களுக்கான வேலையைத் தேடிச் செல்கின்றனர். அதில் சிலருக்கு உடனேயே நல்ல வேலை கிடைத்து விடும். ஆனால் சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். பலரது கனவு அரசு வேலையாக இருந்தாலும், தனியார் துறை நிறுவனங்களில் தான் அதிகம் பேர் வேலை செய்கின்றனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாக சில தனியார் துறை நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால், தனியார் துறை ஊழியர்கள் நிதிப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். ஆகையால், தனியார் துறை ஊழியர்கள் இனி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒருவர் வேலையை இழந்தால், அதனை சமாளிக்கும் நடவடிக்கைகளை அவர் முன்னரே எடுக்க கொண்டு வரப்பட்டது தான் வேலை இழப்புக் காப்பீடு.

தொடர்ந்து வரும் மாதச் சம்பளம் நிறுத்தப்படுவதால், கடன்கள் மற்றும் மாதாந்திர EMI-கள் சுமையாக மாறுகின்றன. இதனால் புதிய வேலை கிடைக்கும் வரை மாதாந்திர இஎம்ஐ (EMI) தொகையை எப்படி செலுத்துவது என கவலைப்பட்டே பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தனியார் துறை ஊழியர்கள் தங்களது வேலையை இழந்தாலும், கடன் மற்றும் மாதாந்திர இஎம்ஐ-களை (EMI) காலம் தாழ்த்தாமல் திருப்பிச் செலுத்த நினைத்தால், வேலை இழப்புக் காப்பீடு செய்து கொள்வது மிகவும் உபயோகமாக இருக்கும்.

வேலை இழப்புக் காப்பீடு:

ஆயுள் காப்பீட்டின் கூடுதல் அம்சம் தான் இந்த வேலை இழப்புக் காப்பீடு. சில காப்பீட்டு நிறுவனங்கள் வேலை இழப்பு காப்பீட்டை ஆயுள் காப்பீட்டுடன் சேர்த்து வழங்குகின்றன. சில நிறுவனங்கள் தனித்தனியாக வழங்குகின்றன. உங்கள் வேலையை நீங்கள் இழந்தாலும் வீட்டுக் கடன், வாகன கடன் EMI மற்றும் கிரெடிட் கார்டு பில்லை இந்தக் காப்பீட்டின் மூலம் செலுத்தலாம். வேலை இழப்புக் காப்பீடு முழுநேரமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தக் காப்பீடு வேலை இல்லாதவர்கள், ஓய்வு பெற்றவர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது வேலையை இழக்கும் பட்சத்தில் அவர் 3 முதல் 4 மாதங்களுக்குள்ளாக புதிய வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். இந்த 4 மாதங்கள் வரை நிறுவனங்கள் அவரது EMI-களை செலுத்தி விடும். அதாவது வேலை இழப்புக் காப்பீடு, உங்களுக்கு தற்காலிகமாக EMI செலுத்தும் வசதியை வழங்கும். வேலை இழப்பு காப்பீட்டில் பிரீமியம், உங்களின் அடிப்படை காப்பீட்டு பிரீமியத்தில் 3% முதல் 5% ஆகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி ஆயுள் காப்பீடு செய்தால், ஓராண்டுக்கு ரூ.10,000 பிரீமியமாக செலுத்த வேண்டும். வேலை இழப்பு காப்பீட்டிற்கு ரூ.300 முதல் ரூ.500 வரை பிரீமியமாக வசூலிக்கப்படலாம்.

இதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், வீட்டுக் கடனின் முழு EMI காலத்திற்கும் உங்களுக்கு கவரேஜ் வழங்கப்பட மாட்டாது. மேலும், பாலிசியை வாங்கிய 5 வருடங்களுக்குப் பின்னர் தான் வேலை இழப்புக் கவரேஜ் கிடைக்கும். அதாவது, 5 ஆண்டுகளுக்குப் பின் உங்கள் வேலையில் நெருக்கடி ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் EMI-ஐ இந்நிறுவனம் செலுத்தும். ஆனால் அதற்குப் பிறகு இதன் கவரேஜ் உங்களுக்கு கிடைக்காது.

(இந்த காப்பீடு குறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது)

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT