கடன் தள்ளுபடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய உதவுவதாகவும், ஆலோசனை தருவதாகவும் இவ்வாறு பல்வேறு விதமான பொய்யான தகவல்களை அச்சு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியாக விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வந்த புகாரை அடுத்து, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது, வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய உதவுவதாகவும் மற்றும் ஆலோசனை வழங்குவதாகவும் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆதாரமற்ற, அதிகாரம் அற்ற பொய்யான தகவல்களை சில நிறுவனங்கள் சமூக ஊடகங்கள் வழியாகவும், அச்சு ஊடகங்கள் வழியாகவும் மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன.
இவற்றை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட எந்த நிறுவனங்களுக்கும் அதிகாரம் கிடையாது. நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி, வங்கிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இது போன்ற பொய்யான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.
இந்த பொய் பிரச்சார விளம்பரத்தின் மூலம் வங்கிகளினுடைய பரிவர்த்தனை பாதிக்கப்படுகிறது. மேலும் நம்பகத்தன்மை ஏற்படும் வாய்ப்பை உருவாக்கும். வாடிக்கையாளர்களிடம் பொய் விளம்பரங்களை காட்டி பண மோசடியில் ஈடுபட வாய்ப்பும் இருக்கிறது. எனவே இது போன்ற பொய்யான தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.
இது போன்ற பொய்யான தகவல்கள் கவனத்திற்கு வரும் பட்சத்தில் அவற்றை உடனடியாக சட்ட அமலாக்க துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளிக்க வேண்டும். இதன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொருளாதார இழப்பின்றி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.