Gold Bees Investment 
பொருளாதாரம்

Gold Bees: 60 ரூபாய் இருந்தால் போதும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்! 

கிரி கணபதி

பல நூற்றாண்டுகளாகவே தங்கம் உலகெங்கிலும் ஒரு மதிப்புமிக்க உலோகமாகப் போற்றப்பட்டு வருகிறது. பணவீக்கம், பொருளாதார போன்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பான முதலீடாக இது கருதப்படுகிறது. தங்கத்தில் முதலீடு என்றாலே, நகைகள், தங்க கட்டிகள் அல்லது நாணயங்களை வாங்குவது என்பதுதான் பலருக்குத் தெரியும். இருப்பினும், இந்த முறைகளில் சில சவால்கள் இருப்பதால், மாற்று முதலீட்டு வழிகளைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்தப் பதிவில் Gold Bees ETF பற்றி பார்க்க போகிறோம்.

Gold Bees என்றால் என்ன? 

கோல்ட் பீஸ் என்பது பங்குச்சந்தை வழியாக தங்கத்தில் முதலீடு செய்யும் ஒரு வழிமுறையாகும். இந்த ETF-ன் நிர்வாகிகள் தங்கத்தின் தற்போதைய சந்தை விலையை பிரதிபலிக்கும் வகையில் போதுமான அளவு தங்கக் கட்டிகளை வாங்கி வைத்திருப்பார்கள். இது பொதுவாக, 1 யூனிட் கோல்ட் பீஸ், 1 கிராம் தங்கத்தின் விலைக்கு சமமாக இருக்கும். உதாரணத்திற்கு, 1 கிராம் தங்கத்தின் விலை 6000 என்றால், சராசரியாக இதன் 1% (60ரூ) விலை ஒரு யூனிட் ஆக நிர்ணயம் செய்யப்படும். 

இந்த முறையில் நீங்கள் யூனிட்டுகளில் தங்கத்தை வாங்குவதால், குறைந்தபட்சம் 60 ரூபாய் முதல் உங்களால் தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்க முடியும். இதற்காக எவ்விதமான செய்கூலியோ சேதாரமோ வசூலிக்கப்படாது. அதேபோல வாங்கிய யூனிட்டை நீங்கள் விற்கும்போது, அப்போதைய சந்தை மதிப்புக்கு நீங்கள் விற்கலாம். 

Gold Bees-ல் முதலீடு செய்வதன் நன்மைகள்: 

கோல்ட் பீஸ்-ல் முதலீடு செய்வது எளிதானது. ஒரு பங்குச் சந்தை கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் விருப்பம் போல கோல்ட் பீஸ் யூனிட்டுகளை வாங்கி, விற்க முடியும். 

நீண்ட காலத்திற்கு நீங்கள் தங்கத்தை சேமிக்க விரும்பினால் இந்த வழிமுறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் செய்கூலி, சேதாரம் என எந்த செலவும் இல்லாததால், தங்கத்தில் முதலீடு செய்யும்போது கணிசமான தொகையை நீங்கள் மிச்சப்படுத்த முடியும். 

நீங்கள் ஏற்கனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நபராக இருந்தால், உங்களது போர்ட்ஃபோலியோவை பலவகைப் படுத்த, கோல்ட் பீஸ் சரியானதாக இருக்கும். பங்குச் சந்தைகள் மோசமாக செயல்படும்போது தங்கத்தின் மதிப்பு அதிகம் உயரும் என்பதால், நீங்கள் இழப்புகளை சந்திப்பது குறைவாகவே இருக்கும். 

கோல்ட் பீஸ்-ல் முதலீடு செய்வது தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஒரு எளிய வழியாகும். நீங்கள் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் விருப்பம் போல கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப யூனிட்டுகளை வாங்கலாம். 

Gold Bees-ல் முதலீடு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை: 

Gold Bees-ன் மதிப்பு தங்கத்தின் விலையுடன் நேரடியாக தொடர்புடையது. தங்கத்தின் விலை அதிகரித்தால் உங்களுக்கு லாபம் கிடைப்பது போல, தங்கத்தின் விலை குறைந்தால் உங்களது முதலீடு நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே, பங்குச்சந்தை என்றாலே சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதை அறிந்து முதலீடு செய்யவும். ஆனால், நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு இது நிச்சயம் லாபகரமான முதலீடாகவே இருக்கும். 

தங்கத்திலிருந்து கிடைக்கும் லாபம் என்பது பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருக்கும் வாய்ப்புள்ளது. மேலும், நீங்கள் தங்கத்தை வாங்கி விற்கும்போது, உங்களது லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வரியாகக் கட்ட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அதேநேரம் ஏதேனும் ஆத்திர அவசரத்திற்கு உடனடியாக தங்க நகைகளை வைத்து பணம் பெறுவது போல, இதில் நீங்கள் பணம் பெற முடியாது. உங்களது யூனிட்டுகளை விற்ற பிறகு இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். 

பங்குச் சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன், அவற்றின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் அறிந்த பிறகு முதலீடு செய்வது நல்லது. உங்களது முதலீட்டு இலக்குகளுக்கு Gold Bees பொருத்தமானதா என்பதைதா தீர்மானிக்க ஒரு நிதி ஆலோசகரிடம் பேசுவது நல்லது. 

பித்தப் பையில் கல்லு... ப்ளீஸ் இந்த 7 உணவுகள் மட்டும் வேண்டாமே! 

சமைக்க வேண்டாம் மென்று தின்றாலே பலன் தரும் மூன்று இலைகள்...!

Biggboss 8: யார் கெத்து டாஸ்கில் கோட்டைவிட்ட ஆண்கள் அணி!

வைணவத்தைக் காக்க கண்களை இழந்த கூரத்தாழ்வான்!

உக்ரைனில் இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

SCROLL FOR NEXT