‘உலக நாடுகளை ஒப்பிடும்பொழுது, இந்தியா மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்து உள்ளது’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் இந்தியாவினுடைய பொருளாதாரம் குறித்து சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்தனர். எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், நாட்டின் வரி வருவாய் என்று அனைத்துத் துறைகளிலும் இந்தியா சமச்சீரான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2013ம் ஆண்டு மோர்க்கான் ஸ்டான்லி நிறுவனம் இந்தியாவை உலகின் ஐந்து பலவீனமான நாடுகளின் பட்டியலில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், அதே மோர்க்கான் ஸ்டான்லி நிறுவனம் தற்போது இந்தியாவின் பொருளாதார மதிப்பீட்டை உயர்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் அரசின் கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை பன்மடங்கு உயர்த்தி இருக்கிறது. உலகின் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. மேலும், ‘பொருளாதாரத்தில் வலுவான நாடாக இந்தியா இருக்கிறது’ என்று பல ஆய்வு நிறுவனங்களே குறிப்பிட்டு இருக்கின்றன. இது தொடர்பான ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி நம்பிக்கை தருவதாகவும், நேர்மையானதாகவும் இருக்கிறது. மேலும், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் நிலை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது” என்று தனது பதிலில் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.