Investment 
பொருளாதாரம்

நாம் பணத்தை சேமித்தால் மட்டும் போதுமா?

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

நாம் சம்பாதிக்கும் பணத்தைச் செலவழித்து விட்டால், ஓய்வுகாலத்தில் நமக்கு தேவைக்குப் பணம் இருக்காது. சரி நாம் பணத்தைச் சேமித்தால் மட்டும் போதுமா? என்றால், போதாது போதாது கண்டிப்பாக போதாது. சேமிக்கும் பணத்தின் மதிப்பானது பணவீக்கத்தின் காரணமாக ஓய்வுகாலத்தில் குறைந்து விடும். முதலீடு செய்தால் மட்டுமே நம்மால் ஓய்வுகாலத்தில் பணவீக்கத்தைச் சமாளிக்க முடியும். எனவே, பணத்தைச் செலவழிக்காமல் சேமித்து, மேலும் அந்த சேமித்தப் பணத்தை முதலீடு செய்து ஓய்வுகாலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும். வரவு - செலவு = சேமிப்பு என்று இருக்காமல், வரவு - சேமிப்பு = செலவு என்று இருக்க வேண்டும்.

முதலீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைப் பார்ப்போம்:

ஒரு வயதான தொழிலதிபருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவர் தனது தொழிலை நன்றாக நடத்தி வந்தார். தனக்குப் பிறகு எந்த மகளுக்கு தனது தொழிலை நிர்வகிக்க கொடுப்பது என முடிவு செய்ய ஒரு போட்டியை வைத்தார். ஒரு துணிப்பையில் வேர்க்கடலையை போட்டு மூன்று பெண்களிடம் கொடுத்து தான் அதை ஆறு மாதங்களுக்குப் பின்னர் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணிடமும் சென்றார். அந்த வேர்க்கடலையை அவர்கள் என்ன செய்தார்கள் என்று வினவினார். முதல் பெண் அந்த வேர்க்கடலையை தான் வறுத்து உண்டு விட்டதாகக் கூறினாள். இரண்டாவது பெண் அந்த வேர்க்கடலையைப் பத்திரமாக பரணில் வைத்ததாகவும், அவற்றில் சிலவற்றை எலி தின்றுவிட்டது என்றும் கூறி மீதமுள்ள வேர்க்கடலையைத் தந்தையிடம் திருப்பித் தந்தாள். மூன்றாவது பெண் தந்தையை தனது வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள். தனது தந்தை வழங்கிய வேர்க்கடலைகளை மண்ணில் விதைத்து பல மடங்கு பெருக்கி தான் அறுவடை செய்திருந்த மூட்டை மூட்டையான வேர்க்கடலைகளை அங்கிருந்த கிடங்கில் காண்பித்தாள். 

முதலாவது மகள் வேர்க்கடலையைச் சாப்பிட்டு விட்டதால், அவள் தனது தொழிலின் வருமானத்தைச் செலவழித்து உண்டு விடுவாள் என முடிவு செய்தார். இரண்டாவது மகள் தனது தொழிலை ஓரளவிற்கு பாதுகாப்பாள். ஆனால், அவளால் சில பல இழப்புகளால் தொழிலை முழுவதுமாக பாதுகாக்க இயலாது என முடிவு செய்தார்.  மூன்றாவது மகள் தனது தொழிலை மேலும் மேலும் முதலீடு செய்து பெருக்கி தொழிலை பன்மடங்கு விரிவு படுத்துவாள் என முடிவு செய்தார். தந்தை தனது தொழிலை மூன்றாவது மகளுக்கு தந்து விடுவது என முடிவு செய்தார்.

நாமும் கூட அந்தத் தொழிலதிபரைப் போலத்தான்.‌ நமக்கு கிடைக்கும்  வருமானத்தை நாம் முதலாவது பெண் போல செலவு செய்து விட்டால், நம்மால் ஓய்வுகாலத்தை சமாளிக்க முடியாமல் மற்றவர்களிடம் கையேந்த நேரலாம். நமக்கு கிடைக்கும் வருமானத்தை இரண்டாவது பெண் போல நாம் சேமித்து மட்டும் வைத்தால், எலி தின்றதைப் போல், பணவீக்கத்தின் காரணமாக அந்த சேமிப்பின் மதிப்பு குறைந்து விடும். நமக்கு கிடைக்கும் வருமானத்தை நாம் மூன்றாவது பெண் போல முதலீடு செய்தால் மட்டுமே நமது பணத்தைப் பெருக்க முடியும்.

ஓய்வுகாலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும் நமது வீட்டின் தலைமைச் செயல் அதிகாரி நாம் தான். எனவே நமது வருமானத்தை சரியாக முதலீடு செய்து பணத்தை பெருக்கி ஓய்வுகாலத்தை வளமாக்கிக் கொள்வோம்.

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT