Lifetime Pension  
பொருளாதாரம்

வாழ்நாள் முழுவதும் பென்சன்: LIC-யின் சூப்பர் திட்டம் இதோ!

ரா.வ.பாலகிருஷ்ணன்

ஒரே ஒருமுறை மட்டும் பிரீமியம் தொகையை செலுத்தினால், வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும் என்றால் யார் தான் வேண்டாம் எனச் சொல்வார்கள். ஆம் முதுமையில் மூத்த குடிமக்களின் துயர் துடைக்கும் எல்ஐசி-யின் சாரல் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

இளம் வயதில் ஓடியாடி உழைத்து விட்டு, இளைப்பாற நினைக்கும் போது நம்மிடம் பணம் இல்லையென்றால் அவஸ்தை தான் மிஞ்சும். பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில் பணத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆகையால் முதுமையில் சிரமமின்றி வாழ இன்றே நாம் முதலீடு செய்து சேமித்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். இதற்காக பல பென்சன் திட்டங்கள் இருப்பினும், எல்ஐசி-யின் சாரல் ஓய்வூதியத் திட்டம் சிறப்பானதாக கருதப்படுகிறது.

சாரல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் ஒரே ஒரு முறை மட்டும் பாலிசித் தொகையை செலுத்தினால் போதுமானது. பாலிசியைத் தொடங்கிய அடுத்த மாதத்தில் இருந்தே உங்களுக்கு பென்சன் வரத் தொடங்கி விடும். இத்திட்டத்திற்கு முதிர்ச்சி காலம் இல்லை என்பது கூடுதல் பலமாகும். வாடிக்கையாளரின் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என்ற விதத்தில் பென்சன் தொகை வழங்கப்படும். இதில் ஏதேனும் ஒரு விருப்பத்தை வாடிக்கையாளரே தேர்வு செய்யலாம்.

சிறப்பம்சங்கள்:

40 வயது முதல் 80 வயதுடைய இந்தியக் குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் இணைய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் விண்ணப்பிக்கலாம். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. மேலும் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியமாக கிடைக்கும். தனியாகவோ அல்லது கூட்டாகவோ கூட சாரல் ஓய்வூதியத் திட்டத்தை தொடங்கலாம்.

பாலிசி எடுக்கும் போது ஒருவர் ரூ.10 இலட்சத்தை பிரீமியமாக செலுத்தினால், ஒரு ஆண்டுக்கு ரூ.50,250 வீதம் வாழ்நாள் முழுவதுமாக பென்சன் கிடைக்கும். நாம் செலுத்தக் கூடிய பிரீமியம் தொகைக்கு ஏற்றாற் போல் பென்சன் தொகையில் மாற்றம் இருக்கும். அவசர செலவுக்காக பாலிசியை முன்கூட்டியே நீங்கள் முடித்துக் கொள்ள விரும்பினால், 5% கழிக்கப்பட்டு மீதமுள்ள பிரீமியம் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தைத் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த உடன் கடன் பெறும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறைந்தபட்ச பென்சனாக ஒரு ஆண்டுக்கு ரூ.12,000 வேண்டுமெனில், பிரீமியம் தொகையாக ரூ.2.5 இலட்சம் கட்ட வேண்டும். ஒரு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் பென்சன் வேண்டுமெனில் பிரீமியம் தொகையாக ரூ.20 இலட்சத்தைக் கட்ட வேண்டும்.

உங்களின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப நீங்கள் விரும்பும் தொகையை எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்து, சிறப்பான ஓய்வு காலத்தைப் பெறுங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT