இந்தியாவில் UPI பணப்பரிவர்தனை முறைகளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய விதிகள், 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இப்போது இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. குறிப்பாக பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ தளங்கள் வழியாக, மக்கள் அதிகமாக பண பரிவர்த்தனை செய்கிறார்கள். இது சாதாரணமாக பெட்டிக்கடைகளில் சாக்லேட் வாங்குவதில் தொடங்கி, ரயில் கட்டணம், மின்சாரக் கட்டணம், வீட்டு வாடகை வரை UPI மூலமாகவே பணம் செலுத்துகின்றனர். இதன் மூலமாக மக்களின் நேரம் வெகுவாகக் குறைக்கப்படுகிறது.
இனி ஏடிஎம் சென்று யாரும் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவசரத்திற்கு பணம் தேவை என்றால் வங்கிகளையோ, ஏடிஎம் மையங்களையோ தேடி அலைய வேண்டாம். அதோடு இந்த முறையில் உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. அவசரத்தில் கையில் பணம் எடுத்துச் செல்லவில்லை என்றாலும், UPI முறையில் பணம் செலுத்தி கொள்ளலாம் என்கிற மனநிலை பெருநகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.
UPIல் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள்:
கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக 5 லட்சம் வரை UPI முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. முன்னதாக மேற்கூறிய இடங்களில் 1 லட்சம் வரை மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்ய முடிந்த நிலையில், தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கு மேல் செயல்பாட்டில் இல்லாத யுபிஐ கணக்குகளை செயலிழக்கச் செய்ய பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளுக்கு NBCI அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல ஆன்லைன் பண பரிமாற்றத்தில் நடக்கும் மோசடிகளை தடுக்க, முதல் முறை 2000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு, 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் முறை ஒருவருக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்புகிறீர்கள் என்றால், மீண்டும் அதே நபருக்கு பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
விரைவில் யுபிஐ பரிவர்த்தனையில் Tap and Pay வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவி மூலமாக, 2000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 1.1% பரிமாற்ற கட்டணம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் QR Code ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் யுபிஐ ஏடிஎம்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி UPI பணப்பரிவர்த்தன முறையை ஊக்குவிக்கும் வகையிலும், மக்கள் அதை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தும் வகையிலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.