Stock Martet 
பொருளாதாரம்

தமிழ் மொழியிலேயே இனி பங்குச்சந்தை தகவல்களை அறியலாம்! எப்படி தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

இன்றளவும் பங்குச்சந்தை குறித்த விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை. இதற்கு மொழி ஒரு தடையாக இருக்கிறது என்பது பலரும் அறிந்த உண்மை. தற்போது இந்தத் தடை தகர்த்தெறியப்பட்டுள்ளது. ஆம், இனி பங்குச்சந்தை தகவல்களை தமிழிலேயே அறிந்து கொள்ள முடியும். எப்படி என கேட்கிறீர்களா? வாங்க சொல்கிறேன்.

முதலீட்டாளர்கள் இலாபம் ஈட்டும் முக்கியமான பொருளாதாரச் சந்தையாக பங்குச்சந்தை கருதப்படுகிறது. இதில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி விற்பது வழக்கம். பொதுவாக சாமானிய மக்கள் மட்டுமின்றி படித்த இளைஞர்கள் சிலருக்கு கூட பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. இதற்கு முக்கிய காரணம் பங்குச்சந்தை பற்றிய புரிதல் இல்லாமை தான். எது ஒன்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கு சிறந்த வழி தாய்மொழி தான். இத்தனை நாட்களாக தமிழில் பங்குச்சந்தை தகவல்கள் வெளியானது இல்லை. ஆனால் இனி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பங்குச்சந்தை தகவல்கள் வெளியாக இருக்கிறது. இதற்காகவே பிரத்யேகமான மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது தேசிய பங்குச்சந்தை நிறுவனம் (NSE).

பங்குச்சந்தை வர்த்தக தகவல்கள் அந்தந்த மாநில மொழிகளில் வெளியாகும் பட்சத்தில், பொருளாதாரம் சார்ந்த புள்ளி விவரங்களை நாடு முழுவதிலும் உள்ள முதலீட்டாளர்கள் மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும், தேசிய பங்குச்சந்தையின் இணையதளத்தை மாநில மொழிகளில் பயன்படுத்த முடியும். இதனால் நாடு முழுக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை உயர அதிக வாய்ப்புள்ளது.

பங்குச்சந்தையில் நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்த தகவல்கள், இதற்கு முன்பு இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டன. இந்த மொழிகளில் பங்குச்சந்தை தகவல்கள் எப்போதும் போல வெளிவரும். மேலும் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகள் உள்பட 11 மொழிகளில் இனி பங்குச்சந்தை தகவல்கள் வெளியாகும் என என்எஸ்இ அறிவித்துள்ளது.

மற்ற மொழிகள் தெரியாததால் நிதித் தகவல்களை புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்த பலருக்கும் இந்த வசதி பயனுள்ளதாக அமையும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவர்களும் இனி பங்குச்சந்தையில் ஆர்வம் காட்டத் தொடங்குவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

“NSE India” என்ற புதிய பங்குச்சந்தை செயலியை ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் பங்குச்சந்தை தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். என்எஸ்இ என்ற பெயரில் பல செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருப்பதால், பயனர்கள் சரியான செயலியை உறுதிசெய்து பதிவிறக்க வேண்டியது அவசியமாகும்.

பங்குச்சந்தையைப் பொறுத்தவரை பொதுமக்களின் பலரது கேள்வியும் “நான் எப்படி இதில் முதலீடு செய்வது” என்பது தான். தமிழில் நாம் பங்குச்சந்தை தகவல்களை தினமும் தெரிந்து கொள்ளும் போது, முதலீடு மட்டுமின்றி அனைத்துத் தகவல்களையும் நாம் அறிந்து கொள்ள இது நல்வாய்ப்பாக அமையும்.

40 வயதில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய 20 வாழ்க்கைப் பாடங்கள்!

பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்கும் நபரா நீங்கள்? போச்சு! 

ஆயுட்காலத்தை அதிகரிக்கும் அறுசுவை உணவுகள்!

நெல்லிக்காய் பயன்படுத்தி மிட்டாய் செய்யலாம் வாங்க!

பணிபுரியும் இடத்தில் பிறரிடம் பேசக்கூடாத 5 விஷயங்கள்!

SCROLL FOR NEXT