தொழில் தொடங்க பலரும் தயங்கும் நிலையில், ஏற்றுமதி தொழிலில் சாதிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
இந்தியாவில் சுயமாகத் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை, வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையை விடக் மிகக் குறைவு. சிலர் சொந்தத் தொழில் செய்ய நினைத்தாலும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் துரத்துகின்றன. அதையும் மீறி சிலர் தொழில் தொடங்கினால், தொடக்கத்தில் கடுமையாக போராட வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், ஏற்றுமதி தொழிலில் கால்தடம் பதிக்க பலரும் தயங்குகிறார்கள். ஏனெனில் ஏற்றுமதி தொழிலை மிகப்பெரியத் தொழிலாகவும், அதில் எண்ணற்ற சிக்கல்கள் இருக்கும் எனவும் நம்புகின்றனர். ஆனால், இது தவறு; பொறுமையும் முயற்சியும் இருந்தால் ஏற்றுமதி தொழிலில் சாதிக்க முடியும்.
நம் ஊர்ச் சந்தைகளில் எந்தப் பொருள் அதிகமாக கிடைக்கும் என்பதையும், அதே பொருள் எங்கெல்லாம் கிடைக்காது என்பதையும் ஆராய்ந்தாலே போதும், ஏற்றுமதி தொழிலில் வெற்றி அடையலாம். வேளாண் பொருள்களையும், அதன் மதிப்புக் கூட்டுப் பொருள்களையும் தயாரிக்கும் இடங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுபவர்கள், பொருள்களை உற்பத்தி செய்பவராகவோ அல்லது ஓரிடத்தில் ஒரு பொருளை வாங்கி மற்றொரு இடத்திற்கு மைமாற்றி விடுபவராகவோ இருக்கலாம். நம் நாட்டில் இருந்து பல உணவுப் பொருள்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தப் பொருள்கள் பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.
முதலில் ஏற்றுமதி செய்வதற்கு சரியான பொருள்களை நாம் அடையாளம் காண வேண்டும். இதனைத் தொடர்ந்து, ஏற்றுமதி தொழில் தொடங்க ஏழு பிரிவுகளின் கீழ் சான்றிதழ்களைப் பெற வேண்டியது அவசியம். நடப்பாண்டு இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா, வங்கதேசம், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சீனா, இந்தோனேசியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு பல வகையான வேளாண் பொருள்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆகையால், வேளாண் பொருள்களில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பு.
உறைய வைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், சிறுதானிய உணவுகள் மற்றும் கடல்வழி உணவுகளின் தேவை வெளிநாடுகளில் அதிகமாக உள்ளது. ஆகவே ஒருவருக்கு எது தேவையோ அதை அறிந்து, அப்பொருள்களின் விலை மற்றும் சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு பொருளை மட்டும் தான் ஒருவர் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இத்தொழிலை முழுவதுமாக புரிந்து கொள்வதற்கு முன், அதிக முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏற்றுமதி தொழில் குறித்த பயிற்சி தேவைப்பட்டால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஏற்றுமதி இறக்குமதி மையத்தினை அணுகி ஆலோசனை பெறலாம். வெளிநாடுகளில் எந்தெந்த நாடுகளுக்கு என்னென்ன பொருள்கள் தேவை மற்றும் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட அனைத்து விதமான பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகிறது.
ஏற்றுமதி தொழிலில் சாதிக்க விரும்புகிறவர்கள் www.dgft.gov.in, www.apeda.gov.in, www.indianspices.com, மற்றும் www.cocunutboard.gov.in/https://fieo.org போன்ற அரசு இணையதளங்களைத் தொடர்ந்து கவனித்து வந்தால், ஏற்றுமதி தொடர்பான பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இன்று கற்றுக் கொண்டு நாளையே களமிறங்கும் தொழில் அல்ல ஏற்றமதி; கொஞ்சம் பொறுமையுடன் அனைத்தையும் கற்றுக் கொண்டு, பயிற்சியைப் பெற்றால் அதன்பின் மிக எளிதாக வெற்றிக்கனியைப் பிடித்து விடலாம்.