Post Office Saving Schemes 
பொருளாதாரம்

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் எவ்வாறு பயன் பெறலாம்?

சங்கீதா

மாதம் ரூ.9250/- வருமானம் கிடைக்கும்..! போஸ்ட் ஆபீஸில் ஒரு முறை முதலீடு செய்தால் போதும்..!

மத்திய மற்றும் மாநில அரசு பல வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக சிறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஏழைகள் ஆகியோர்களுக்கு பயனளிப்பதே இது போன்ற திட்டங்களின் நோக்கமாகும்.

அஞ்சலகங்கள் வாயிலாக நாம் பல விதமான திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலம் பயன் பெறலாம். அந்தவகையில் தபால் நிலையத்தில் வழங்கப்படும் இந்த மாதாந்திர சேமிப்பு திட்டமானது அனைவருக்கும் உபயோகமாக உள்ளது.

அஞ்சலகத்தில் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் கூட்டுக்கணக்கு தொடங்குவதன் மூலம் மாதம் ரூ.9250/- வருமானம் பெற முடியும். தனிநபர் கணக்கு மூலம் ரூ.5,550/- மாதம் வருமானம் பெற முடியும்.

நாம் இந்த பதிவில் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் எவ்வாறு பயன் பெறலாம் என்பதை பற்றி காண்போம்.

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS):

இந்த அஞ்சலக மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் மொத்த தொகையை முதலீடு செய்யும் போது, இதிலிருந்து மாதந்தோறும் நமக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. 

இந்த மாதாந்திர திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம்  முதலீட்டு தொகையாக ரூ.1000 செலுத்தி கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். அதிகபட்சமாக தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் முதலீடு செய்ய முடியும். கூட்டுக் கணக்கில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டம் ஒருமுறை மட்டும் முதலீடு செய்யப்படும் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் ஒருவர் எவ்வளவு முதலீடு செய்கிறாரோ அதற்கான வட்டி மாத வருமானமாக சேமிப்பு கணக்கில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகள் முடிந்ததும் முதலீடு செய்த தொகையை பெற்றுக் கொள்ளலாம். 

அவ்வாறு முதலீடு செய்யும் தொகைக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7.40% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்தாலும், இந்த திட்டத்தில் தொடக்கத்தில் எவ்வளவு வட்டி விகிதம் கொடுக்கப்பட்டதோ, அதே வட்டி அடுத்த 5 ஆண்டுகள் வரை இருக்கும். எனவே இந்திய அரசால் இந்தத் திட்டத்தில் வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டாலும் அது உங்களின் கணக்கை பாதிக்காது. 

மேலும் முதலீடு செய்த பிறகு 5 ஆண்டிற்குள் நீங்கள் பணத்தை பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 3 ஆண்டுக்குள் முதலீட்டை திரும்ப பெற விரும்பினால் நீங்கள் முதலீடு செய்த தொகையில் இருந்து 2 சதவீதம் வசூலிக்கப்பட்டு, மீதி பணம் வழங்கப்படும். 

3 ஆண்டுகள் கழித்து முதலீட்டை திரும்ப பெற விரும்பினால் நீங்கள் முதலீடு செய்த தொகையில் இருந்து 1 சதவீதம் வசூலிக்கப்பட்டு, மீதி பணம் வழங்கப்படும்.

எவ்வளவு முதலீடு செய்தால், எவ்வளவு  வருமானம் கிடைக்கும்?

இந்த கணக்கு தொடங்கும் போது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாத வட்டி ரூ.616 கிடைக்கும். ஐந்தாண்டுகளுக்கு ரூ.37 ஆயிரம் வட்டி பெற்றிருப்பீர்கள். இத்திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் பெறலாம்.

ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் வட்டி ரூ.3,083 கிடைக்கும். ஐந்தாண்டுகளுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் வட்டியாக பெற்றிருப்பீர்கள். இத்திட்டத்தின் மூலம் 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெறலாம். 

9 லட்சம் முதலீடு செய்யும் போது மாதம் வட்டியாக ரூ.5,550 கிடைக்கிறது. ஐந்தாண்டுகள் முடிவில் ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வட்டியாக பெற்றிருப்பீர்கள். இத்திட்டத்தின் மூலம் 12 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பெறலாம். 

ரூ.15 லட்சம் முதலீடாக செலுத்தும் போது மாதம் ரூ.9250 வட்டியாக பெறுவீர்கள். ஐந்தாண்டுகளுக்கு ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வட்டியாக பெற்றிருப்பீர்கள். இத்திட்டத்தின் மூலம் ரூ. 20 லட்சத்து 55 ஆயிரம் பெறலாம்.

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்த தொகைக்கு ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரை வரிச் சலுகை வழங்குகிறது. இருப்பினும், இந்த நன்மையைப் பெற, ஒருவர் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் வைத்திருக்க வேண்டும்.

தவறு செய்வது தவறில்லை ஆனால்..!

News 5 - (22.10.2024) தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள்!

இவர்களுடன் வாதிட்டு நேரத்தை விரயம் செய்யாதீர்கள்!

மழைக்கால விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

புகழைத் தேடும் புலம்பல்கள்!

SCROLL FOR NEXT