Real Estate 
பொருளாதாரம்

ரியல் எஸ்டேட் முதலீடு: கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

நாளையத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நமக்கு உதவுவது இன்றைய முதலீடு தான். சேமிப்புத் திட்டங்கள் மற்றும் தங்கத்தில் செய்யும் முதலீடுகளை விடவும், நிலத்தில் முதலீடு செய்யும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும். மோசடிகள் அதிகமாக அரங்கேறுவதால், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்களை இப்போது காண்போம்.

சவால் நிறைந்த முதலீடுகளில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று. ஏனெனில் சிறிது கவனக் குறைவாக இருந்தால் கூட நம்மை ஏமாற்றி விடுவார்கள். மொத்தமாக அதிக பணம் வைத்திருக்கும் நபர்களின் முதல் முதலீட்டுத் தேர்வாக இருப்பது ரியல் எஸ்டேட் தான். ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்குவது வாழ்நாள் முழுக்க பலன் தரக் கூடியது. ஒருவேளை வாங்கிய நிலத்தை சில வருடங்கள் கழித்து விற்றால் கூட நல்ல இலாபம் கிடைக்கும். இருப்பினும் நாம் வாங்கப் போகும் நிலத்தைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆகையால், நிலத்தில் முதலீட்டைத் தொடங்கும் முன் நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பட்ஜெட்டைத் தீர்மானித்தல்:

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, நிலத்தின் மதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு விலை இருக்கும். ஆகையால் நம் பட்ஜெட்டைத் தீர்மானித்து, அதற்கேற்ப வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் நிலத்தின் விலையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சில இடங்களில் குறைந்த விலைக்கு நிலம் கிடைக்கிறது என்பதற்காக, எந்தப் பலனும் இல்லாத நிலத்தை வாங்குவதும் தவறானது.

வணிக சொத்து:

வாடகை வருமானத்தை எதிர்பார்த்து முதலீடு செய்யும் நபராக நீங்கள் இருந்தால், வாடகைதாரர்களுக்கு அனைத்து வசதிகளும் இருக்கும் இடத்தில் சொத்துக்களை வாங்கலாம். குறிப்பாக இரயில் நிலையம், மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி போன்ற அத்தியாவசியத் தேவைகள் அருகிலேயே இருந்தால், வாடகையும் அதிகமாக கிடைக்கும்.

ஆவணங்களை உறுதி செய்தல்:

இன்றைய காலகட்டத்தில் மோசடி செய்பவரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. வேறொருவர் சொத்துக்களை விற்பது மற்றும் அடமானம் வைத்து வங்கிக் கடன் வாங்கிய நிலத்தை விற்பது போன்ற பல வழிகளில் சிலர் ஏமாற்ற வாய்ப்புள்ளது. ஆகையால் நிலத்தை வாங்கும் போது அதற்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆவணங்கள் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால், வேறொரு இடத்தை வாங்க முற்படுங்கள்.

இடம்:

நிலத்தில் முதலீட்டைத் தொடங்குவதற்கு முன்பாக அந்த இடத்தின் சூழலை நன்கு அறிந்து கொள்ளுங்கள். இந்த இடம் அனைத்துக்கும் ஏற்றதாக இருக்குமா? வருங்காலத்தில் விற்றால் நல்ல விலைக்குப் போகுமா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக சாலையோரமாக இருக்கும் இடத்தை வாங்குவது நல்லது. பிற்காலத்தில் விற்றால் கூட நல்ல விலைக்குப் போகும்.

சொத்துக்களை விற்றல்:

பொதுவாக நாம் வாங்கும் இடத்தில் எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது என நினைப்போம். அதேபோல் சொத்தை விற்கும் போது எந்த வில்லங்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த இடையூறும் இல்லாத பட்சத்தில் அந்த நிலத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT