LIC 
பொருளாதாரம்

ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் பென்சன்: LIC நியூ ஜீவன் சாந்தி திட்டம்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

ஒருமுறை மட்டும் பிரீமியம் தொகையை செலுத்தினால், வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும் என்றால் யார் தான் வேண்டாம் எனச் சொல்வார்கள். இப்படியான எல்ஐசி திட்டங்களில் ஒன்று தான் நியூ ஜீவன் சாந்தி திட்டம். இத்திட்டத்தின் பலன்கள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.

பொதுவாக எல்ஐசி என்றாலே காப்பீட்டுத் திட்டங்கள் தான் அதிகமாக இருக்கும் என்ற மனநிலை பொதுமக்கள் பலருக்கும் உண்டு. இருப்பினும் வாடிக்கையாளர்களைக் கவர எல்ஐசி அவ்வப்போது பல சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் சில ஓய்வூதியத் திட்டங்களும் அடங்கும். இளம் வயதில் கடுமையாக உழைத்து விட்டு, முதுமையில் இளைப்பாற நினைக்கும் போது நம்மிடம் பணம் இல்லையென்றால் என்ன செய்வது?

பொருளாதார வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பணத்தின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் முதுமை காலத்தை சிறப்பாக கழிக்க இன்றே நாம் முதலீடு செய்வது தான் புத்திசாலித்தனம். இதற்காக சந்தையில் பல பென்சன் திட்டங்கள் இருப்பினும், எல்ஐசி-யின் நியூ ஜீவன் சாந்தி திட்டம் சிறப்பானதாக கருதப்படுகிறது.

நியூ ஜீவன் சாந்தி திட்டத்தின் கீழ் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுக்க பென்சன் தொகையைப் பெறலாம். இத்திட்டத்தில் தனிநபர் அல்லது இருவராக இணைந்து விண்ணப்பிக்கும் வசதி இருக்கிறது. விண்ணப்பிக்கும் வயது வரம்பு 30 முதல் 80 ஆகும். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,50,000 மற்றும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

இத்திட்டத்தின் கீழ் பென்சன் தொகையானது பாலிசிதாரரின் விருப்பத்திற்கேற்ப மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை என வழங்கப்படுகிறது. பிரீமியம் செலுத்திய பிறகு பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால், நாமினிக்கு முதலீட்டுத் தொகையுடன் போனஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

ஒத்திவைக்கப்பட்ட முதிர்ச்சி காலத்தின் படி இத்திட்டத்தின் பென்சன் தொகை 1 முதல் 12 ஆண்டுகள் கழித்து அளிக்கப்படும். ஒருவர் 30 வயதில் நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் ரூ.10 இலட்சத்தை முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரது பென்சன் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டால், அதன் பிறகு ஆண்டுக்கு ரூ.86,784 பென்சன் கிடைக்கும். மேலும், 12 ஆண்டுகள் கழித்து ஆண்டுக்கு ரூ.1,32,920 பென்சன் கிடைக்கும்.

45 வயதில் ஒருவர் ரூ.10 இலட்சத்திற்கு பாலிசி எடுத்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆண்டுக்கு ரூ.90,456 பென்சன் கிடைக்கும். மேலும், 12 ஆண்டுகள் கழித்து ஆண்டுக்கு ரூ.1,42,508 பென்சன் கிடைக்கும்.

இன்றைய சேமிப்பிலேயே நாளைய தேவைக்கான பென்சன் பணத்தையும் சேமிக்க முடிகிறது. இது முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. ஆகையால், முதுமையில் சிரமமின்றி வாழ முதலீட்டின் மீதான எண்ணத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT