Systematic Investment Plan 
பொருளாதாரம்

SIP என்றால் என்ன தெரியுமா? முதலீடு பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும் முதலீடு செய்யலாம்! 

கிரி கணபதி

Systematic Investment Plan என்பதைத்தான் சுருக்கமாக SIP என அழைப்பார்கள். இது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு முறையாகும். மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்யும் முறைக்கு மாற்றாக, கொஞ்சம் கொஞ்சமாக தவணை முறையில் முதலீடு செய்வதையே SIP என அழைக்கிறார்கள். இந்த முதலீட்டு முறையில் குறைந்தது 100 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 

கிட்டத்தட்ட இந்த வழிமுறை வங்கிகளில் செயல்படும் Recurring Deposit போல செயல்படும். ஆனால் நீங்கள் பணத்தை வங்கிகளில் செலுத்துவதற்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வீர்கள். SIP முற்றிலும் எளிதான முதலீட்டு திட்டமாகும். நீங்கள் மாதாமாதம் ஞாபகம் வைத்து பணம் செலுத்த முடியவில்லை என்றாலும், வங்கிக் கணக்கை இத்திட்டத்தில் இணைப்பது மூலமாக, தானாகவே பணம் எடுத்துக் கொள்ளும்படி பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். 

உதாரணத்திற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் எஸ்ஐபி முறையில் பணம் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு இணையான ஸ்டாக்ஸ் உங்களுக்காக ஒதுக்கப்படும். இது மாதா மாதம் தொடர்ந்து நடப்பதால், ஸ்டாக்ஸ்களின் விலை அதிகமாக இருக்கும்போதும் வாங்குவீர்கள், குறைவாக இருக்கும் போதும் வாங்குவீர்கள், இதனால் நீங்கள் முதலீடு செய்த பணம் சராசரியாக கூட்டு வட்டியின் பயனைப் பெற உதவும். 

நீங்கள் நேரடியாக ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்வதற்கு, அந்த நிறுவனத்தின் பங்குகள் எப்போது விலை குறைவாக வருகிறது என காத்திருக்க வேண்டும். ஆனால் எஸ்ஐபி முறையில் உங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. ஏனெனில் நீங்கள் மொத்த பணத்தையும் ஒரே அடியாக முதலீடு செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதால், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் சராசரியாக கணக்கில் கொள்ளப்பட்டு, உங்களுக்கு லாபத்தையே பெற்று தரும். 

ஒழுக்கம் மிக முக்கியம்: நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றாலே ஒழுக்கமும் அமைதியும் மிக முக்கியம். பங்குச் சந்தையில் அவசரப்படுபவர்கள் அனைத்தையும் இழக்கிறார்கள். எனவே எஸ்ஐபி முறையில் நீங்கள் செய்யும் முதலீட்டில் ஒழுக்கம் மிக முக்கியம். ஒவ்வொரு மாதமும் தவறாமல் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். 

லாபம் எப்படி இருக்கும்? 

நேரடி முதலீட்டு முறையை விட, எஸ்ஐபி முதலீட்டில் ஆபத்து குறைவு என்பதால், உங்களுக்கு நேரடி முதலீட்டை விட லாபமும் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த முறையில் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால முதலீடாக முயற்சி செய்தால், குறைந்த முதலீட்டிலும் அதிகப்படியான லாபத்தை ஒருவர் ஈட்ட முடியும். சரியான மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்தால், சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத லாபத்தையாவது நீங்கள் பார்க்கலாம். இது பணவீக்கத்தின் அளவைவிட அதிகம் இருப்பதால், ஒரு லாபகரமான முதலீடாகப் பார்க்கப்படுகிறது.

எனவே இப்போதே உங்களுக்கான டீமேட் கணக்கைத் தொடங்கி, குறைந்தது மாதம் 500 ரூபாயாவது எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். இது நிச்சயம் உங்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்க உதவும். 

(பங்குச் சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டு, உங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்வது நல்லது.)

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT