Stock Market 
பொருளாதாரம்

இரண்டு நபர்கள்; 400 பில்லியன் டாலர் இழப்பு! - நமக்கான பங்குச்சந்தைப் பாடம்!

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

டொனால்ட் டிரம்ப்பும் ஜோ பைடனும் ஒரே நாளில் கிட்டத்தட்ட 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பிற்கு காரணமானார்கள். இது கடந்த வாரம் புதன்கிழமை அன்று நிகழ்ந்தது. என்ன சார் இது தான் தெரிந்த விஷயமாயிற்றே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன என்பதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். 

முதலில் நாம் நடந்து முடிந்த வரலாற்றைப் பார்ப்போம். பின்பு கற்றுக் கொள்ளும் பாடத்திற்கு வருவோம். 

நடந்த வரலாறு: 

கடந்த புதன்கிழமை(17.7.2024) அன்று ஜோ பைடன் பன்னாட்டு குறைகடத்தி சில்லுகள் (semi conductor chips) நிறுவனங்களுக்கு மேலும் பல்வேறு வணிகக் கட்டுப்பாடுகள் விதிக்க எண்ணுவதாக ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது. குறைகடத்தி சில்லுகள் சார்ந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னோடியாக உள்ளது. அந்த முன்னோடி தொழில்நுட்பம், உலக அரசியல் காரணங்களால், சீனாவிற்கு சென்று விடக்கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. எனவே, சீனாவில் விற்பனை செய்யும் குறைகடத்தி சில்லு நிறுவனங்களுக்கு பல்வேறு வணிக கட்டுப்பாடுகள் விதிக்க பைடன் எண்ணுவதாக தெரிவித்தது.  

அடுத்தபடியாக, டொனால்ட் டிரம்ப்புக்கு வருவோம். தைவான் அமெரிக்காவினை தனது பாதுகாப்பிற்காக நம்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய குறை கடத்தி சில்லுகள் தயாரிக்கும் நிறுவனமான தைவான் செமி கண்டக்டர் மேனுஃபாக்சரிங் கம்பெனி (Taiwan Semiconductor Manufacturing Company - TSMC) தைவானை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் தைவான் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இது தைவானின் எதிர்காலத்தின் மீதான பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவான் உலகின் குறை கடத்தி சில்லுகளின் மையமாக உள்ளது. 

மேற்சொன்ன இரண்டு விஷயங்களும் சேர்ந்து ஒரே நாளில் உலகின் குறை கடத்தி சில்லுகள் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் வீழ்ச்சிக்கு காரணமாகின. குறை கடத்தி சில்லுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமெரிக்காவில் அதிகமாக வைத்திருக்கும் இன்டெல், குளோபல் ஃபௌண்டரி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தை சந்தித்தன. மற்ற குறை கடத்தி நிறுவனங்கள் கொரோனா காலத்திற்கு பின்பு இத்தகைய மிகப் பெரிய வீழ்ச்சியை ஒரே நாளில் சந்தித்தன. என்வீடியா 6.6% வீழ்ந்தது. ஏஎம்டி 10.2% வீழ்ந்தது. குறை கடத்தி சில்லுகளின் குறியீடான பிலடெல்பியா செமி கண்டக்டர் இன்டெக்ஸ் ஒரே நாளில் தனது சந்தை மதிப்பில் 496 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை இழந்தது. 

சரி சார், நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன ?

  • நன்றாக சென்று கொண்டிருக்கும் எந்த ஒரு ஜாம்பவான் துறையாக இருந்தாலும், அதில் உள்ள பங்குகளுக்கும் கூட இத்தகைய (இரண்டு நபர்களின்) செயல்களால் மிகப்பெரிய வீழ்ச்சி வரலாம். எனவே ஒரே துறையில் பங்குகளை வாங்குவது அபாயகரமானது.

  • நன்றாக சென்றுகொண்டிருக்கும், தொடர்ந்து அதிக லாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கும், உலகின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு கூட (இங்கு தைவானின் டிஎஸ்எம்சி), ஒரு நபரின் ஒரு கூற்றினால்  (இங்கு டொனால்ட் டிரம்ப்) மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படலாம். எனவே ஒரே நிறுவனத்தில் நமது முதலீட்டினை ஒருமுகப்படுத்துவது அபாயகரமானது.

  • சில துறைகளில் ஏற்படும் வீழ்ச்சி அதனை சார்ந்த பல்வேறு துறைகளிலும் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. உதாரணமாக இங்கு குறை கடத்தி சில்லுகளின் பங்குகளின் வீழ்ச்சி, அதனைச் சார்ந்த பல்வேறு மென்பொருள் ஜாம்பவான்களின் பங்குகளிலும் கூட வீழ்ச்சியை ஏற்படுத்தியது. உதாரணமாக, மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்தன. எனவே, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளில் மட்டும் முதலீடு செய்யாமல், பலதரப்பட்ட துறைகளில் முதலீடு செய்வது நமது பணத்தின் பாதுகாப்பிற்கு உதவும். 

  • துறை சார்ந்த குறியீடுகள் கூட அபாயகரமானவை. இங்கு பென்சில்வேனியா செமி கண்டக்டர் இன்டெக்ஸ் மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. எனவே நமது முதலீடு கூட பல்வேறு துறைகளை கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக எஸ் & பி 500, நிஃப்டி 50 போன்ற பல்வேறு துறைகளைக் கொண்ட குறியீடுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. எனவே, துறை சார்ந்த குறியீடுகளில் முதலீடு செய்யாமல், பல்வேறு துறைகள் சார்ந்த பரவலான (diversified) குறியீட்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.

மொத்தத்தில், ஒருமுகப்படுத்த முதலீடு பங்குகளிலோ அல்லது துறை சார்ந்த பங்குகளிலோ, துறை சார்ந்த குறியீடுகளிலோ இருப்பது அபாயகரமானது. பரவலான நிறுவனங்களை உடைய துறை சாராத குறியீடு சார்ந்த முதலீடு தான் நமது முதலீட்டின் பரவலாக்கத்திற்கு உதவும். அத்தகைய முதலீட்டின் மூலமே நமது பணத்தைப் பாதுகாக்க முடியும். ஒரு துறை வீழ்ச்சி அடைந்தால் மற்றொரு துறை நம்மை காப்பாற்றும். 

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் நமக்கு மற்றொரு முறை பரவலாக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT