Understanding Inflation and Its Impacts 
பொருளாதாரம்

Inflation: உங்களை ஏழையாகவே வைத்திருக்கும் பணவீக்கம் பற்றிய உண்மைகள்!

கிரி கணபதி

பணவீக்கம் என்ற வார்த்தையை பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் உண்மையிலேயே பணவீக்கம் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் தாக்கங்களை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்? இந்தப் பதிவில் பணவீக்கம் சார்ந்த உண்மையைப் தெரிந்துகொண்டு, தனி நபர்கள் இதைப்பற்றி ஏன் புரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

பணவீக்கம் என்றால் என்ன? 

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், பணவீக்கம் என்பது காலப்போக்கில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை படிப்படியாக அதிகரிப்பதைக் குறிக்கிறது.‌ பணவீக்கம் அதிகரிக்கும்போது பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது. அதாவது இந்த ஆண்டு நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருட்களை அடுத்த ஆண்டு அதே 100 ரூபாயை வைத்து வாங்க முடியாது. அந்தப் பொருட்களின் விலை நூறு ரூபாயை விட அதிகரித்திருக்கும். இதைத்தான் பணவீக்கம் என்பார்கள். 

பணவீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்: 

பொருட்கள் மற்றும் சேவைக்கான தேவை, விநியோகத்தை விட அதிகமாகும்போது விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.‌ மேலும், கூலிகள் அல்லது மூலப்பொருட்கள் போன்ற உற்பத்தி செலவுகள் உயரும்போது ஒரு பொருளின் விலை உயர்கிறது. அதேபோல மத்திய வங்கிகள் அதிக பணத்தை அச்சிட்டு பண விநியோகத்தை அதிகரிக்கும்போது பொருளாதாரத்தில் அதிகப்படியான பணப்புழக்கம் காரணமாக விலைகள் உயரலாம். 

பணவீக்கத்தின் தாக்கங்கள்: 

விலைகள் உயரும்போது பணத்தின் மதிப்பு குறைகிறது. இது வாங்கும் திறன் குறைவதற்கு வழிவகுக்கும். அதாவது தனி நபர்கள் அதே அளவு பணத்தில் குறைவான பொருட்களையும், சேவையையும் வாங்குவதால் இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது. 

பணவீக்கம் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை அதிகப்படுத்தும். இது வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் எதிர்காலத்தை திட்டமிடுவதை கடினமாக்குகிறது. செலவுகளை மதிப்பிடுவது, விலைகளை நிர்ணைப்பது மற்றும் நீண்டகால முதலீட்டு முடிவுகளை எடுப்பது இதனால் சவாலாகிறது.

பணவீக்கம் பல்வேறு வகையான முதலீடுகளை வித்தியாசமாக பாதிக்கும். அதாவது பங்குகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற சில முதலீடுகள் பண வீக்கத்திற்கு எதிராக செயல்படலாம். ஏனெனில் அவற்றின் மதிப்புகள் விலை அதிகரிப்பால் உயரக்கூடும். இருப்பினும் பணவீக்கத்தால் வாங்கும் சக்தி குறைவதால் முதலீடு சார்ந்த விஷயங்களிலும் மக்களின் ஆர்வம் குறையும். 

பணம்வீக்கமானது மத்திய வங்கிகளையும் அரசாங்கங்களையும் நடவடிக்கை எடுக்கத் தூண்டுகிறது. அவர்கள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தலாம். இது கடன் வாங்கும் தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களை முற்றிலுமாக பாதிக்கும். 

இப்படி பணவிக்கமானது பல்வேறு விதமான தாக்கங்களை ஒருவரது வாழ்க்கையில் கொண்டு வரும். எனவே இதைக் கருத்தில் கொண்டு, பணவீக்கத்திற்கு ஏற்ற மாதிரியான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள மக்கள் முற்பட வேண்டும். மேலும் எதிர்கால பணவீக்கத்திற்கு ஏற்ற மாதிரியான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். 

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT