60+ elders 
பொருளாதாரம்

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

ஆர்.வி.பதி

சேமிப்பு என்பது அவசியமா? என்று யார் எப்போது கேட்டாலும் மிக மிக அவசியம் என்றே சொல்லுவேன். காரணம் எவ்வளவு வருவாய் வந்தாலும் அதில் பத்து சதவிகிதம் முதலில் சேமிப்புக்கென ஒதுக்கி விட வேண்டும். தொண்ணூறுகளில் பிரபல இயங்கிய நிதி நிறுவனம் ஒன்று “உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்” என்று விளம்பரம் செய்தது. எவ்வளவு அருமையான தீர்க்கதரிசனமான வாக்கியம். இன்று வரை இந்த வாக்கியம் என் மனதை விட்டு அகலவே இல்லை. அவர்கள் சொல்வது உண்மைதான். ஒவ்வொரு மாதமும் பணத்தை வாங்கியதும் முதலில் அதில் பத்து சதவிகிதத்தை தபால் அலுவலகம், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி அல்லது நம்பகமான நிறுவனம் இதில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் செய்யும் முதலீடு மிகச்சிறியதாக இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் அது முதிர்ச்சி அடைந்து தரும் பலன் அபாரமானதாக இருக்கும். இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம்.

அறுபது வயது வரை நாம் அரசுப்பணி அல்லது தனியார் நிறுவனப்பணி அல்லது சுயதொழில் என ஏதாவது ஒன்றைச் செய்து வருவாய் ஈட்டிக் கொண்டிருப்போம். சிலருக்கு அதிகமான வருமானம் இருக்கும். பலருக்கு குறைவான வருமானம் இருக்கும். அறுபது வயது வரை கவலையில்லை. வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளி விடலாம். அறுபது வயதானதும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து பணியிலிருந்து ஓய்வு கொடுத்து விடுவார்கள். வயது மூப்பின் காரணமாக உங்களால் முன்பு போல சுறுசுறுப்பாக பணி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

பலர் முப்பது நாற்பது வயதுகளில் சம்பாதிக்கும் பணத்தை யோசிக்காமல் ஆடம்பரமாக செலவு செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த பழக்கம் ஐம்பது, அறுபது வயதானாலும் மாறாமல் தொடர்கதையாகி விடுகிறது. சிலர் தமக்கென சொந்தமாக ஒரு வீட்டைக் கூட வாங்காமல் வாடகை வீட்டில் இருந்தபடியே ஜாலியாக செலவு செய்பவர்களாக இருக்கிறார்கள்.

ஐம்பத்தைந்து வயதை நெருங்கும் போதுதான் பலருக்கு பயம் மனதில் தோன்ற ஆரம்பித்து விடும். இன்னும் சில வருடங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறோம். அறுபது வயதுக்குப் பின்னர் என்ன செய்வது என்ற கவலை அவர்களின் மனதை வாட்டத் தொடங்கிவிடும். இந்த சூழ்நிலையில் அவர்களால் ஏதும் செய்ய இயலாது.

இந்த பதிவைப் படிக்கும் நீங்கள் நாளை முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கத் தொடங்குங்கள். தற்போது அரசுப் பணிகளில் கூட ஓய்வுதியம் என்பது இல்லை என்றாகிவிட்டது. பல தனியார் நிதி நிறுவனங்கள் ஓய்வூதியத் திட்டங்களை அறிவிக்கின்றன. தாமதிக்காமல் இப்போதே நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கி விட்டால் உங்களின் அறுபது வயது நிறைந்ததும் அதன் பலன் உங்களைத் தேடி வரும். நீங்கள் செய்யும் முதலீடுக்கேற்ப மாதாமாதம் ஒரு தொகை உங்கள் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். உங்களுக்குத் தெரிந்த நிதி ஆலோகரைக் கலந்தாலோசித்து நம்பகமான நிறுவனங்களில் உங்களால் முடிந்த தொகையை ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். ஏனென்றால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை பாதுகாப்பாக இருந்து அது உங்கள் பணி ஓய்விற்குப் பின்னர் உங்களுக்கு மாதாமாதம் தவறாமல் பணத்தை வழங்க வேண்டும்.

நீங்கள் பணியாற்றிய நிறுவனம் உங்களின் பணி ஓய்வின் போது ஒரு குறிப்பிட்ட தொகையினை பணிக்கொடையாக வழங்கும். அதை ஓய்வூதியத் திட்டங்களில் அப்படியே முதலீடு செய்து விடுங்கள். வங்கி மற்றும் அஞ்சல்துறையில் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (Senior Citizen Savings Scheme) என்றொரு அருமையான திட்டம் இருக்கிறது. இதில் அறுபது வயது பூர்த்தியானோர் அதிகபட்சமாக முப்பது லட்சம் வரை முதலீடு செய்யலாம். நீங்கள் முப்பது லட்சம் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதாமாதம் 20,500.00 ரூபாய் உங்களுக்கு மாதவருவாயாகக் கிடைக்கும். இந்த தொகையானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 61,500.00 ரூபாயாக வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் முப்பது லட்சங்களுக்குள் உங்கள் வசதிக்கேற்ப எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இது ஒரு பாதுகாப்பான சிறந்த வருவாய்த் திட்டமாகும்.

தாமதிக்காதீர்கள். 60 வயதுக்குப் பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ இன்றே திட்டமிடுங்கள். கவலையின்றி இருங்கள்.

Scientists Best Quotes: அறிவியலாளர்களின் தலைசிறந்த15 மேற்கோள்கள்! 

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பீர்களா? போச்சு!

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 4 வகையான விஷப்பாம்புகள்!

உலகின் 5 நீளமான நதிகள்!

SCROLL FOR NEXT