கரதக டமனக - கடுப்போ கடுப்பு!
ஓடிடி யில் மிக மிக அதிக நேரமெடுத்து பார்த்த படம் இதுவாகத் தான் இருக்கும். குறைந்தது பதினைந்து நாள்... ஓட்டி ஓட்டிப் பார்த்தும் கடுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டது டைரக்டர் யோகராஜ் பட் சாதுர்யம்.
இவரெல்லாம் ஐம்பது வருடங்களுக்கு முன்னம், இன்னும் வாழ்ந்து
கொண்டிருப்பவர். இந்தக் கதைக்குச் சிவராஜ் குமார், பிரபு தேவா சம்மதித்தது இருக்கட்டும். தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ் தான் மிகவும் பாவம்.
கதையா...இரண்டு திருடர்கள் தண்ணீர் வசதி இல்லாத கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கு இரண்டு பெண்களைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தக் கிராமத்தின் தேர்த்திருவிழாவை நடத்துகிறார்கள். அந்தக் கிராமத் தலைவர் தணிகலபரணி இவர்களைத் தத்து எடுத்துக் கொள்கிறார். இவர்கள் வேண்டிக்கொள்ள கிராமத்தில் மழை பெய்து ஒரு பெரிய குளம்உருவாகிறது. படிக்கும் போதே எவ்வளவு கடுப்பு வருகிறது. இந்தக் கதையை இரண்டு பெரிய ஹீரோக்களுக்கு எப்படிச் சொல்லியிருப்பாரெனத் தெரியவில்லை.
பத்து நிமிடம் ஜெயிலர் தந்த ஆரவாரம் என்ன, இரண்டரை மணி நேர படம். அதில் எல்லா காட்சிகளிலும் வருகிறார்கள் சிவராஜ்குமாரும் பிரபுதேவாவும். இந்த மாதிரி கிராமமும் மனிதர்களும் எங்கே இருக்கிறார்கள். இதில் கண் தெரியாத
சித்தர் வேறு. பார்த்தவுடன் காதல் கொள்ளும் பெண்கள் பிரியா ஆனந்தும் நிஷ்விகா நாயுடுவும்! ரவிசங்கர், ரங்காயான ராகு, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இவர்கள் எல்லாம் எதற்கு வருகிறார்கள் என்றே தெரியவில்லை.
இரண்டு பாடல்களைத் தவிர படத்தில் ஒரு காட்சி கூட நன்றாக இல்லாமல் படம் எடுக்க முடியும் என நிரூபித்த படம். அந்தப் பாடல்களின்போது கூட ரசிகர்கள் புகைபிடிக்கப் போயிருப்பார்கள். கேஜிஎப், காந்தாரா, சப்த சாகரதாச்சே
எல்லோ, சுவாதி முத்தின மழை ஹனியே என்று மீண்டு எழுந்துவிடலாமென நினைக்கும் நேரத்தில் இந்த மாதிரிப் படங்கள் வந்து சாண்டல்வுட் படங்களை மேலும் கீழே அமுக்குகின்றன. ரசிகர்களின் பொறுமையைச் சோதிப்பதை விடுங்கள்; அவர்கள் மூளையின் ஸ்திரத்தன்மையை சோதிக்கும் இது போன்ற படங்கள் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை ஒருமுறைக்கு ஆயிரம் முறை சிந்திக்க வைக்கும் என்பது தான் நிதர்சனம்,
ஒரே வார்த்தை....தவிர்க்கவும்...அல்லது தப்பிக்கவும்..