Tamil film industry - Kollywood 
வெள்ளித்திரை

ஆயிரம் கோடி வசூல் தமிழ்படங்களுக்கு எட்டாக்கனியா? ஏன்?

நா.மதுசூதனன்

சமீபத்தில் ஒரு ஊடகத்திற்குப் பேட்டி அளித்த பிரபல விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன் ஒரு சுவாரசியமான தகவலைச் சொன்னார்.

"நாட்டில் எத்தனையோ தொழிலதிபர்கள் இருக்கின்றனர். தொழில்கள் இருக்கின்றன. எவரும் தங்கள் விற்பனை இவ்வளவு, சாதனை என்று பெரிதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. சினிமாவில் மட்டும் தான் இந்த நிலை இருக்கிறது. நூறு கோடி, ஐநூறு கோடி, ஆயிரம் கோடி வசூல் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆயிரத்தில் ஒரு படம் அந்த மாதிரி நடக்கும். மற்ற படத் தயாரிப்பாளர்கள் கதி? சிறிய படங்களின் கதி? ஆயிரம் கோடி வசூல் என்றால் மொத்த லாபம் அந்தத் தயாரிப்பாளருக்கா என்று யாரும் யோசிப்பதில்லை. உதாரணத்திற்கு வரி இருநூற்றி ஐம்பது கோடி என்று வைத்துக் கொள்வோம். மீதமுள்ள தொகையில் தயாரிப்புச் செலவைக் குறைத்தால் என்ன நிற்கும்? இதை எங்கே போய்ச் சொல்வது. இது கண்டிப்பாகத் தவிர்க்கக்கூடிய தவிர்க்க வேண்டிய விஷயம். இது ரசிகர்களுக்காகவும், மீடியாவிற்காகவும் செய்யக்கூடிய செயலே தவிர வேறு ஒன்றும் இல்லை," என்கிறார். 

இந்தக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. என்ன தான் அரண்மனை 4 நூறு கோடி வசூல் என்று கூறப்பட்டாலும் இன்னும் அது பலருக்கு ஆச்சரியம் தான். இத்தனைக்கும் அதில் பெரிய நடிகர்கள் இல்லை. பிரம்மாண்டமான செலவுகளும் இல்லை. மிகச் சாதாரணமாக எடுக்கப்பட்ட படம். மக்கள் ஆதரிப்பது என்று முடிவு செய்து விட்டால் இது அத்தனையும் இரண்டாம் பட்சம் தான். அதைத் தொடர்ந்து ஸ்டார், கருடன், மகாராஜா போன்றவை வசூலில் தவறு செய்யாத படங்கள். இதில் ஸ்டார் மற்றும் லவ்வர் இரண்டு படங்களும் விமர்சன ரீதியில் நல்ல பேச்சிருந்தாலும் வசூலில் அவ்வளவு பெரிதாகச் சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை.

இதைத் தவிர இப்போது தமிழ்த் திரையுலகில் படம் வெளியான மூன்றாம் நாளே சக்ஸஸ் மீட் என்று வைக்கும் பழக்கம் ஒன்று முளைத்திருக்கிறது. ஓடுகிறதோ இல்லையோ திரையரங்கில் படம் இருக்கும் போதே விழா எடுத்துவிடுவது எனப் படக்குழுவினர் நினைக்கின்றனர். 

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி, தமிழ்ப் புத்தாண்டு என ஐந்து தினங்கள் முக்கிய தினங்களாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்கள் அனைத்தையும் பெரிய ஹீரோக்களின் படங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், கார்த்தியென இவர்கள் படங்களுக்கு மட்டுமே வரவேற்பு பெரிய அளவில் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் படம் வந்தால் மற்றவர்கள் படம் வரக் கூடாது, எடுபடாது என்ற நிலைமை இருந்தது. இன்று மேலே சொன்ன அனைவர் படம் வரும் போதும் இருக்கும் நிலை இது தான். பண்டிகைக்காலங்களில் பத்து முதல் பதினைந்து படங்கள் வந்த காலம் கூட உண்டு. (இங்கே தான் திரையரங்ககுகளின் எண்ணிக்கை, பகிர்ந்தடிக்கப்படும் படங்கள் போன்ற பேச்சு வருகிறது.)

இப்போது இரண்டாவது ஒரு பெரிய  ஹீரோ படம் வருவது வசூலைப் பாதிக்கும் என்ற பேச்சு பெரிதாகக் கிளம்புகிறது. அப்படி நடந்தது தான் வேட்டையன், கங்குவா போட்டி. கங்குவா படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டது. வேட்டையன் படக்குழுவிலிருந்து இது தொடர்பாக எந்தத்தகவலும் இல்லை. அக்டோபர் பத்தாம்  தேதி படம் வருவது என்பது தனது இமயமலைப் பயணத்தின்போது ரஜினி பேச்சுவாக்கில் சொன்னது. பின்னர் அது தொடர்பாக ஒரு போஸ்டர் கூட வந்தது. ஆனால் அதோடு அந்தப் பேச்சு நின்று விட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா, ரிலீஸ் தொடர்பான பிற தகவல்கள் என்ன என்பது பற்றியெல்லாம் ஒரு சின்ன அப்டேட் கூட இல்லை. இப்போது கிளம்பி இருக்கும் போட்டித் தகவல்கள் கூட மீடியாக்கள் கிளப்பி விட்டது தான். 

தமிழ்த் திரையுலகின் சமீபத்திய அதிர்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 வின் தோல்வி தான். இரண்டாம் அரையாண்டின் முதல் பெரிய தோல்வி இது. இதைச் சரி செய்ய இந்தியன் 3 படத்தை விரைவில் முடித்து வெளியிட்டு லாபம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது லைகா. ஷங்கரும், கமல்ஹாசனும் இதில் தீவிரமாக இறங்க வேண்டிய சூழ்நிலை. இதில் நடந்த தவறுகள் அதிலும் தொடர்ந்து விடக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகச் சொல்கின்றனர். இந்தியன் படைத்த கமல் ஒரு நடிகர் மட்டுமே. இப்போது அவர் அரசியல்வாதியாகவும் இருப்பது பெரிய இடைஞ்சல். அவரது திரைக் கொள்கையினையும், அரசியல் நிலைப்பாட்டையும் சேர்த்து பார்க்க ஆரம்பித்து விட்டனர் மக்கள். அதுவும் இந்தத் தடுமாற்றத்திற்கு ஒரு காரணம்.

இந்நிலையில் சென்ற வாரம் வெளி வந்த தனுஷின் ராயன் படத்தின் வசூல் வெற்றி சற்றே ஆறுதலைத் தந்திருக்கிறது.

மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு, ப்ரம்மயுகம் போன்ற படங்களின் வெற்றி மீண்டும் மலையாள படங்களின் காலம் தொடங்கி விட்டது என்று பேச வைத்தாலும் அதோடு முடிந்தது அவர்களின் வெற்றியும். அதன் பிறகு வந்த எந்தப் பிற மொழிப் படங்களும் அந்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

ஒவ்வொரு பெரிய படம் வரும் போதும் இது தான் அடுத்த ஆயிரம் கோடி வசூல் படம் என்று கிளப்பி விடப்படுகிறது. ஆனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தியென மூன்று மொழிகளிலும் சாத்தியப்பட்ட இந்த விஷயம் தமிழ்படங்களுக்கு மட்டும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. சமீபத்தில் வந்த கல்கி கூட ஆயிரம் கோடியைக் கடந்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழில் இந்த மைல்கல்லைத் தொடப்போகும் முதல் படம் எது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT