கோவா தலைநகர் பனாஜியில் நாளை தொடங்குகிறது 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா : ஏ.ஆர். ரகுமான், மணிரத்னம், சிவகார்த்திகேயன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட ஏராளமான தமிழ் திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
உலகில் அதிகம் திரைப்பட தயாரிக்கும் நாடுகளின் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. குறிப்பாக பாலிவுட் எனப்படும் இந்தி திரைப்படங்கள், கோலிவுட் எனப்படும் தமிழ் திரைப்படங்கள், டோலிவுட் எனப்படும் தெலுங்கு திரைப்படங்கள் இந்தியாவிற்கு வெளியேயும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. சினிமாவுக்கு என வணிக ரீதியான கட்டமைப்பை மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான, கர்னாடகா, கேரளா உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் உருவாக்கி இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் திரைப்படங்கள் மூலம் பங்கு வகித்து வருகின்றன. 2029 ஆண்டில் இந்திய சினிமாவின் சந்தை மதிப்பு 7 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று ஸ்டாடிஸ்கா எனும் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய சினிமாவைக் கொண்டாடும் வகையில் இந்திய அரசு 1952 முதல் சர்வதேச திரைப்பட விழாவை கொண்டாடி வருகிறது. மேனாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பெரும் முயற்சியால் நட்புறவு நாடுகளிடையே கலாச்சார பரிவர்த்தனையை வலுவாக்கும் வகையில் தொடங்கப்பட்ட இவ்விழா 2004 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுழற்சி முறையில் நிகழ்த்தப்பட்டு வந்தது.
இந்திய சினிமாவுக்கு உலகில் அளவில் உருவான சந்தையை இந்த திரைபட விழாவுக்கு உலக அளவில் ஏற்பட வரவேற்பையும் கணித்து இதனை பாரம்பர்யமிக்க கான்ஸ் திரைப்பட விழாவிற்கு நிகராக மாற்றும் வகையில் அதே போன்ற கட்டமைப்புகொண்ட கோவாவை தேர்ந்தெடுத்து 2004 முதல் நிரந்தர தேதியாக ஆண்டுதோறும் நவம்பர் 20 முதல் 28 வரை அறிவிக்கப்பட்டு மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
1952 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட முதல் விழாவில் 23 நாடுகளும் 40 படங்களும் பங்குபெற்றன. தற்போது நிகழும் 55வது திரைப்பட விழாவில் சுமார் 80 நாடுகளில் இருந்து குறும்படங்கள், முழுநீளத்திரைப்படங்கள், விவரணப்படங்கள் என சுமார் 300 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
தமிழ்நாட்டின் சார்பில் சிறப்பு திரையிடலாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா XXX திரைப்படமும் ஈ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் 'வாத்தியார்' குறும்படமும் இடம்பெறுகிறது.
இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இயக்குனர் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகையும் இயக்குனருமான சுகாசினி ஆகியோர் பங்கேற்கின்றனர். ஒரு மிமிக்கிரி கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி தொலைக்காட்சியில் வாய்ப்புபெற்று இன்று தமிழ் திரைப்பட உலகின் வசூல் மன்னனாக திகழும் சிவகார்த்திகேயன் தனது வெற்றிக்கதையை பார்வையாளர்களுடன் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்வும் இடம்பெறுகிறது.
இவ்விழாவில் பங்கேற்க இதுவரை 6000 பேர் பதிவு செய்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.