சரியாக அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது நவம்பர் 1964 ல் வெளியான முரடன் முத்து படத்தின் பாடல்களுள் ஒன்று “கோட்டையிலே ஒரு ஆலமரம்…..”
வெண்கலக் குரலோன் டாக்டர் சீர்காழி கோவிந்தராஜனின் அமிர்தக் குரலில், கவிஞர் கண்ணதாசனின் பேனா உமிழ்ந்த, காலங்களைக் கடந்த பாடல் அது!
படமும் நன்றாகவே ஓடியது! சிவாஜி-தேவிகா இணையுடன், இயக்குனர் பி.ஆர்.பந்துலுவும் நடித்த படம்!
கோட்டையிலே ஒரு ஆலமரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா!
பாடல் பட்டி, தொட்டிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியது!
திடீரென ஒரு ரசிகர் பொருள் பொதிந்த ஒரு கேள்வியை எழுப்பினார்! பாடலைக் குறித்துத்தான்! அவருடைய கேள்வி இதுதான்!
“மாடங்களில் வசிப்பதால்தான் அதற்கு மாடப்புறா என்ற பெயரே வந்தது! கவிஞரோ கோட்டையிலுள்ள ஆலமரத்தில் மாடப்புறா கூடு கட்டி வாழ்வதாகப் பாடல் இயற்றியுள்ளார்! எந்த மாடப்புறாவும் ஆலமரத்தில் கூடு கட்டி வாழாதே! கவிஞரின் பாட்டு தவறானதாகத் தோன்றுகிறதே!” என்றார்.
இது பத்திரிகைகளில் பிரபலமாக, இன்னொரு ரசிகர் அதற்கு ஒரு விடை கொடுத்தார்! அந்த விடை இதுதான்...
“மாடங்களில் வாழ்வதனால்தான் அதற்கு மாடப்புறா என்ற பெயர், என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! ஆனால் முரடன் முத்து படத்தில் மாடத்தில், அதாவது மாளிகையில் வாழ வேண்டிய கதாநாயகி, தன் நிலையிலிருந்து இறங்கி வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறார்! அந்தக் கதாநாயகி எப்படி தன் நிலை பிறழ்ந்து வாழ்கிறாரோ, அதனைக் குறிக்கும் விதமாகத்தான் கவியரசர் இந்தப் பாடலை எழுதினார்! மாடங்களில் மகிழ்ந்து வாழ வேண்டிய மாடப்புறா, வாழ்வில் நிகழும் அசம்பாவிதம் காரணமாக ஆலமரத்தைத் தேடிப்போய் கூடு கட்டி வாழ வேண்டிய நிர்ப்பந்தம்!” என்று எழுதினார் அந்த ரசிகர்.
கண்ணதாசன் சாதாரணப்பட்டவரா என்ன? இயக்குனர்கள் சொல்லும் கதைகளை உள்வாங்கி, தன் பாடல்கள் மூலம் அந்தக் கதாபாத்திரங்களுக்கு மேலும் மெருகு போடுபவரல்லவா? நடிகர்களின் பணியை எளிதாக்குபவரல்லவா? அந்தக் கதாபாத்திரங்களைத் தன் பாடல்கள் மூலம் பக்குவப்படுத்தி, ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலை பெறச் செய்பவரல்லவா? அப்படி திரைப்பட வரலாற்றில் இடம் பிடித்த பாடல்கள் எத்தனையோ உண்டே!
கோட்டையிலே ஒரு ஆலமரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா
பாட்டு, கேள்விக்கும் பதிலுக்கும் ஆளான நிலையில், ஒரு கூட்டத்தில் பேச வந்த கவிஞரைச் சூழ்ந்து கொண்டு, நிரூபர்கள் நடந்தவற்றை விலாவாரியாகச் சொன்னார்களாம்! அந்த விவாதம் குறித்த அவருடைய கருத்தையும் கேட்டார்களாம்!
அவரோ, ”கேள்வி கேட்டதும் என் ரசிகர்தான்! அவருக்குச் சரியான பதிலைச் சொன்னதும் என் ரசிகர்தான்! இப்படிப்பட்ட புத்திசாலித்தனமும், ரசனையும் கொண்ட ரசிகர்களைப் பெற்றதால்தான் நானும் சந்தோஷமாக இருக்கிறேன்!” என்று மிக எளிதாக அதனைக் கடந்து சென்றாராம்!