அப்துல் கலாமுடன் நடிகர் சிரஞ்சீவி 
வெள்ளித்திரை

நடிகர் சிரஞ்சீவி விஷயத்தில் பொய்த்துப்போன அப்துல் கலாமின் அறிவுரை!

கல்கி டெஸ்க்

ப்துல் கலாம் உலகறிந்த அறிவியல் மேதை. ஜனாதிபதி பதவியை விட சாதாரண வீட்டுக் குழந்தைகளுக்கு கல்வியின் ஆளுமையை, ஒழுக்கத்தின் சிறப்பை அன்றாடம் போதிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர். அந்த அறிவியல் மேதைக்கு அரசியல் சிலசமயம் அந்நியப்பட்டு போயிருக்கிறது. அவர் ஜனாதிபதி பதவியில் இருந்த சமயம் ஒருமுறை ஆந்திர நடிகர் சிரஞ்சீவிக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆந்திர படவுலகையும் தாண்டி, இந்தித் திரையுலகிலும், சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு, சிரஞ்சீவியின் சினிமா புகழ் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அவரிடம் பேசிய அப்துல் கலாம், ‘உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்’ என்றாராம்.

அந்த அறிவுரையை நெஞ்சில் ஆழப் பதித்துக்கொண்ட நடிகர் சிரஞ்சீவி, ஆந்திராவில் உடனே ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி விட்டார். அதற்கு ஆந்திராவில் அவருக்கு ஒரு முன்மாதிரி இருந்தார். அவர்தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ். ‘வெறுமனே ஆந்திராவில் மட்டுமே சினிமா சூப்பர் ஸ்டாராக இருந்த ராமராவ், தெலுங்கு தேசம் என்று ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி, எண்ணி பதினெட்டே மாதங்களில், போட்டியிட்ட முதல் பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதன்மந்திரியும் ஆகிக் காட்டினாரே! நாம் அகில இந்திய சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறோமே, நாம் ஆந்திராவில் போட்டியிடப்போகும் முதல் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அத்தனை தொகுதிகளையும் எளிதில் வென்று, முதன்மந்திரியும் ஆகிவிடலாமே. ராமராவே சாதித்து விட்ட பிறகு நம்மால் சாதிக்க முடியாதா என்ன?’ என்ற  எகத்தாள நினைப்போடு தேர்தல் களத்தில் குதித்து இருக்கக்கூடும் சிரஞ்சீவி.

ஆனால்,தேர்தல் முடிவுகளால், மனம் சுக்கு நூறாய் உடைந்துபோயிருக்கும் போல அவருக்கு. எண்ணி 18 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது அவரது கட்சி. அன்று முதல் அவரது தூக்கம் தொலைந்து போயிருக்கும்! விடை தெரியாத ஆயிரம் கேள்விகள் அவரது மண்டையைக் குடையத் தொடங்கி இருக்கும். ‘அப்படியானால், எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும் அவர்கள் சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து முதன்மந்திரி ஆனது எப்படி? அரசியல் அத்தனை பெரிய கம்ப சூத்திரமா? அதன் ஆழம் தெரியாமல், அறிவியல் மேதை அப்துல் கலாம் வேறு சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக, நம்மை அரசியலுக்குள் வர தூபம் போட்டு விட்டாரே?’ என்று அழுது புலம்பி இருக்கக்கூடும்.

சிரஞ்சீவி முதன்மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு, எத்தனை பண விரயம்? எவ்வளவு, கால விரயம்? அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராய் வீணாய்ப் போனதே?’ என்று மனம் புழுங்கி இருப்பார்சிரஞ்சீவி. அதற்கு ஆதாரம், சிறிது காலத்துக்குள் டெல்லிக்கு ஓடோடிச் சென்று, கட்சியை காங்கிரஸ் பேரியக்கத்தில் அவர் இணைத்தது.

அதற்கு முன்பாக, சிரஞ்சீவி மண்டையை சில காலமாகவே குடைந்து கொண்டிருந்த மிகப்பெரிய இன்னொரு புதிருக்கு அவர் விடை காண முயன்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது. முதன்மந்திரி பதவிக்கு நாம் இத்தனை அலையாய்  அலையும்போது, அந்த வாய்ப்பு தான் கேட்காமலேயே, தேடி அலையாமலேயே,  அரசியல் கட்சி தொடங்காமலேயே, தனது  வீட்டு வாசலில் வந்து நின்று கதவைத் தட்டிக் கூப்பிட்டதே! அதன் காலைத் தொட்டு அரவணைக்காமல், அதனை எட்டிப் புறந்தள்ளினாரே ரஜினிகாந்த்? 1996 பொதுத் தேர்தலில், ரஜினி தனிக்கட்சி தொடங்கி, களம் இறங்கினால் அவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதன்மந்திரி என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதே ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ்! அதற்குப் பிறகும் அவர் கட்சியும் தொடங்கவில்லை. முதன்மந்திரி பதவியையும் நாடவில்லையே ரஜினி! அது ஏன்?’ என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு ரஜினியிடமே ஓடோடிச் சென்று, அவரிடம் நேரடியாகவே கேட்டறிந்தார் சிரஞ்சீவி!

ஆம்... அப்போது நடந்த, ‘எந்திரன்’ பட விழாவில் ரஜினியிடம் இதை சிரஞ்சீவி கேட்க, ‘சினிமா சூப்பர் ஸ்டார்களுக்கு அரசியல் பிரவேசம் என்பது வேண்டாத வெட்டி வேலை’ என்று பதில் சொல்லி இருக்கக்கூடும் ரஜினி! அந்தப் பதிலின் தாக்கம், டெல்லிக்கு ஓடிச் சென்று, முதல் வேலையாக தனது கட்சியை காங்கிரசில் இணைத்தார் சிரஞ்சீவி என்பது யூகம்!

ஆனானப்பட்ட அறிவியல் மேதை அப்துல் கலாமே, அரசியலின் ஆழம் தெரியாமல், அதில் சிரஞ்சீவியை காலை விடச் செய்தார் என்ற தகவல் பரவியதே! சிரஞ்சீவிக்கு, ‘உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்’ என்று தவறாக வழி காட்டினார் கலாம் என்று சொல்லப்படுவதற்குப் பதிலாக, ‘உங்களைப் போன்ற சினிமா பெரிய மனிதர்கள், சொந்த பணத்தை வாரி இறைத்து, சமூகத்தில் மாபெரும் ஆக்கபூர்வ, நல்ல சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று ஆற்றுப்படுத்தி இருந்தால் எத்தனை சிறப்பாக இருந்திருக்கும்? அப்படி நடந்து இருந்தால் இந்நேரம் எத்தனை பயனுள்ள பெரிய சமூக சாதனைகளை நிகழ்த்தி இருப்பார் சிரஞ்சீவி? அதைத்தானே ஓசை படாமல், கடந்த பல ஆண்டுகளாக, சொந்தப் பணத்தை செலவிட்டு, ‘அகரம்’ அறக்கட்டளையை நிறுவி, ஆண்டும்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை மாணவ, மாணவிகளை கல்வி கற்கச் செய்து, வாழ்வில் சொந்தக் காலில் நிற்க வைத்து அழகு பார்க்கிறார் நடிகர் சூர்யா சிவக்குமார்.

சிரஞ்சீவி - சூர்யா முன் உதாரணங்கள் நடிகர் விஜய்க்கு 100க்கு 100 சதவிகிதம் பொருந்தும்தானே? சிந்திப்பாரா நடிகர் விஜய்?!

- ராமச்சந்திரன் மகாதேவன்

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT