என் படத்தை எல்லாம் யார் பார்ப்பார்கள் என்று சொல்லி, தெலுங்கு சினிமா விநியோகஸ்தர்கள் பலர் புறக்கணித்ததாக நடிகர் சித்தார்த் கண்ணீருடன் விவரித்தார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘சேதுபதி’ ‘சிந்துபாத்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் அருண்குமார். இவரது இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடிப்பில் அண்மையில் வெளியாகி, மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘சித்தா’. இந்தப்படத்தில், அண்ணன் இறந்த பிறகு அண்ணியையும்,அவரது பெண் குழந்தையையும் பாதுகாக்கும் கொழுந்தன், கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து பேசுகிறது இந்த படம்.
முன்னதாக இந்தப்படத்தின் புரமோஷனுக்காக சித்தார்த் பெங்களூர் சென்ற போது காவேரி பிரச்சினை சுட்டிக்காட்டி, அங்கிருந்த கன்னட அமைப்பினர், தமிழ் திரைப்படத்தை இங்கு ஆதரிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆந்திராவில் இந்தத்திரைப்படம் வருகிற 6ம் தேதியன்று வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், சித்தா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது படத்தை வெகுவாக பாராட்டிய உதயநிதி ஸ்டாலின், படத்தை நம்பிக்கையுடன் வெளியிட்டதாக குறிப்பிட்டார்.
ஆனால் தெலுங்கில் இவ்வளவு படத்தில் நடித்தும் தனது படத்தை யார் பார்ப்பார்கள் என்று புறக்கணித்ததாக சித்தார்த் மேடையிலேயே வருத்தப்பட்டார்.
நல்ல படம் அமைந்தால் எந்த மொழியிலும் மக்கள் பார்க்க வருவார்கள் என்றும் சித்தார்த் கூறினார்.