Tamil Cinema Famous Actors Vijay, Ajith and Suriya 
வெள்ளித்திரை

தீபாவளிக்கு வெளியான விஜய், அஜித் மற்றும் சூர்யாவின் மாஸான படங்கள் உங்களுக்காக!

எல்.ரேணுகாதேவி

ன்றைய 2K கிட்ஸ்களுக்கும் சரி,90‘s கிட்ஸ்களுக்கும் சரி தற்போது தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்கள் என்றால் அது விஜய், அஜித் மற்றும் சூர்யாதான். ஒவ்வொரு வருடமும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி போன்ற முக்கியமான பண்டிகைகளுக்கு வெளியாகும் இந்த சூப்பர் ஹீரோக்களின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் திருவிழாபோல் கொண்டாடப்படும்.

இளைஞர்களுக்குப் பிடித்த ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படங்கள் அல்லது உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குடும்ப பின்னணி கொண்ட படங்கள் மற்றும் சமூக கருத்துகளை மையப்படுத்தி எடுக்கும் படங்கள் என, எந்தவகையான கதை அமைப்பு கொண்ட படங்களிலும் இந்த மூன்று ஹீரோக்கள் நடித்தால், அது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறாது. அந்தவகையில் விஜய், அஜித் மற்றும் சூர்யா ஆகியோரின் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி சூப்பர்ஹிட்டான படங்கள் மற்றும் பிளாப்பான படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் ஆகியோரின் என்ட்ரி 1993ம் ஆண்டு தொடங்கினாலும், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய் குழந்தை நட்சத்திரமாக 1984ம் ஆண்டு முதலே வெள்ளித்திரையில் தோன்றிய ஆரம்பித்தவர். ஆனால், ஒரு ஹீரோவாக விஜய் அறிமுகமான படம் என்றால் இது அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளியான ’நாளை தீர்ப்பு‘ என்ற படத்தின் மூலமாகத்தான்.

இந்த படம் எதிர்ப்பார்த்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. அதேபோல், அஜித் நடிப்பில் தமிழில் வெளியான முதல் படம் என்றால் அது அமராவதிதான். விஜய் மற்றும் அஜித் நடிப்பில் முதல் முறையாக வெளியான இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் தமிழ் சினிமாவில் நுழைந்து கிட்டதட்ட ஆறு படங்களில் ஹூரோவாக நடித்து அதன்பிறகு ஏழாவது படமாக 1995ம் ஆண்டு வெளியான ’சந்திரலேகா’ படம்தான் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான முதல் படமாகும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். காதலுக்கு மதங்கள் தடையாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ’சந்திரலேகா’ எடுக்கப்பட்டது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர்ஹிட்டானது.

அதேபோல், அஜித் முக்கிய ரோலில் நடித்திருந்த ’பவித்ரா’ படம் 1994ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றிபெற்றது. அந்தகாலத்திலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இப்படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 90களில் அஜித், விஜய் இருவரும் தமிழ் சினிமாவில் அடுத்தகட்ட ஹீரோக்களாக அறிமுகமாகி இருந்தனர். இதனால், அன்றைய காலகட்டத்தில் இருவரின் படமும் ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கவனம்பெறத் தொடங்கியது.

இதற்கிடையில் விஜய் நடிப்பில் ’பூவே உனக்காக’, ’லவ் டூடே’,’ஒன்ஸ் மோர்’, சூர்யாவுக்கு முதல் படமாக அமைந்த ’நேருக்கு நேர்’, ’காதலுக்கு மரியாதை’, ’நிலவே வா’, ’துள்ளாத மனமும் துள்ளும்’, ’மின்சார கனவு’, ’குஷி’ எனத் தமிழ் சினிமாவில் விஜயின் கிராப் உச்சத்தில் சென்றுகொண்டிருந்தது. அதேகாலகட்டத்தில் ’ஆசை’,’காதல் கோட்டை’,’ராசி‘, ‘உல்லாசம்’,’காதல் மன்னன்’, ’அவள் வருவாளா‘,‘வாலி‘, என அஜித் அட்டகாசமான படங்களை தந்துகொண்டிருந்தார்.

சந்திரலேகா படத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் 2000ம் ஆண்டில் விஜய், சிம்ரன் நடிப்பில் ‘ப்ரியமானவளே’ படம் தீபாவளிக்கு வெளியானது. அப்போது,’பூவெல்லாம் கேட்டுப்பார்’,‘ப்ரண்ட்ஸ்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியிருந்தார் சூர்யா.2000ம் ஆண்டு தீபாவளிக்கு ‘ப்ரியமானவளே’ படம் வெளியான அதேநாளில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் இயக்குநர் பாலாவின் ’நந்தா’ வெளியாகி விஜயின் படத்திற்கு கடும் நெருக்கடி கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால், குடும்ப கதையம்சம் கொண்ட ‘ப்ரியமானவளே’ படம் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ’நந்தா’ படத்தின் மூலம் சூர்யா தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை பெற்ற ஹீரோவாக மாறினார். 2001ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ’ஷாஜகான்’ விஜய்க்கு மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ’மின்னலை பிடித்து’, ’மெல்லினமை’ , ‘அச்சச்சோ புன்னகை’ ஆகிய பாடல்கள் மொக ஹிட்டானது. படத்தின் கதையைவிடப் பாடல்களுக்காக ’ஷாஜகான்’ வெற்றிபெற்றது.

இதன்பிறகு, 2002ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த ’வில்லன்’ படம் தீபாவளிக்கு வெளியானது. அப்போது, விஜயின் ’பகவதி’ வெளியாகி இருந்தது. பாடல்களுக்காக ’பகவதி’ ஹிட்டானது. கதை, பாடல் மற்றும் அஜித்தின் வித்தியாசமான நடிப்பிற்காக ’வில்லன்’ படம் சூப்பர் ஹிட்டானது. ’பவித்ரா’ படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகளுக்குக் கழித்து அஜித் நடிப்பில் வெளியான ’வில்லன்’ படம் 40 கோடிகளுக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

2003ம் ஆண்டு தீபாவளிக்கு விஜயின் ’திருமலை’, அஜித்தின் ’ஆஞ்சநேயா’ மற்றும் பாலாவின் இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்த ’பிதாமகன்’ படம் வெளியாகி இருந்தது. இதில், ’ஆஞ்சநேயா’ தோல்வியைச் சந்தித்தது. விஜயின் ’திருமலை’ பாடல் மற்றும் அவரின் மாஸ் வசனங்களுக்காகவே ஹிட்டானது. ஆனால், வித்தியாசமான கதை மற்றும் நடிப்பு ஆகியவற்றுக்காக ரசிகர்கள் மத்தியில் அன்றைய தீபாவளிக்குக் கவனம் பெற்ற படம் என்றால் அது பாலாவின் ’பிதாமகன்’தான். இந்த படத்தில், சக்தி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யாவின் அசத்தலான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சரண் இயக்கத்தில் 2004ம் ஆண்டு அஜித், பூஜா நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ’அட்டகாசம்’ படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. அட்டகாசம் படத்தில் இடம்பெற்றிருந்த ’தீபாவளி தல தீபாவளி’, ‘தல போல வருமா’ ஆகிய படங்கள் தற்போது அஜித்தின் வெற்றி முழக்கப் பாடல்களாக அவரின் ரசிகர்களாகக் கொண்டாடப்படுகிறது.2005 தீபாவளிக்கு வெளியான விஜயின் ’சிவகாசி’ படம் அவருக்குச் சரவெடி வெற்றியைக் கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும். அஜித்துக்கு ’தீபாவளி தல தீபாவளி’ பாடல் அமைந்ததுபோல் விஜய்க்கு ’தீபாவளி.. தீபாவளி’ பாடல் அமைந்தது. இதனைத்தொடர்ந்து 2007ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான அஜித்தின் ’வரலாறு’ படம் அவரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படமானது.

’வரலாறு’ படத்தில் பரதநாட்டிய கலைஞராக வரும் அஜித்தின் நடை, பாவனை, பேச்சு ஆகியவை பெண்மை சாயலில் அமைந்திருந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த சமயத்தில் அஜித் ஏற்று நடித்திருந்த இந்த கதாபாத்திரம் மக்களிடம் அவருக்கான மதிப்பை உயர்த்தியது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

விஜய் நடிப்பில் 2007ல் வெளியான ’அழகிய தமிழ் மகன்’ படம் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அப்போது விஜய் படத்துடன் தீபாவளிக்கு வெளியான சூர்யாவின் ’வேல்’ படம் நல்ல குடும்ப படமாக வெற்றியைப் பெற்றது. அதேபோல், 2008ம் ஆண்டு ராஜ சுந்தரம் இயக்கத்தில் வெளியான அஜித்தின் ’ஏகன்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அப்போது சூர்யாவின் நடிப்பில் வெளியான ’ஆதவன்’ படம் கலவையான விமர்சனங்களுடன் சூப்பர்ஹிட்டானது.

இதனைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு வெளியான ’வேலாயுதம்’ படத்தை பின்னுக்குத் தள்ளி சூர்யாவின் ’ஏழாம் அறிவு’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.’ஏழாம் அறிவு’ படத்தில் இடம்பெற்ற போதி தர்மர் குறித்த தகவல் மற்றும் நோக்கு வர்மம் ஆகிய கான்சப்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

2012 தீபாவளிக்கு வெளியான விஜயின் ’துப்பாக்கி’ படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தது. விறுவிறுப்பான ஸ்லீப்பர் Cell கதை அம்சம் மற்றும் பாடல்கள் ’துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்குப் பலமாக அமைந்தது. 2013ம் ஆண்டு வெளியான அஜித்தின் ’ஆரம்பம்’ படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்தது. தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ’கத்தி’ படம் விவசாயிகள் பிரச்சனைகளைப் பேசியது. இரட்டை வேடத்தில் நடித்திருந்த விஜயின் நடிப்பும், படத்தின் கதையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ரூ.130 கோடிக்கு மேல் வசூலித்தது.

2015 தீபாவளிக்கு 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் ’வேதாளம்’ படம் அவருக்கு மாஸ் வெற்றியைக் கொடுத்தது. Anti Hero கான்சப்டில் நடித்திருந்த அஜித்தின் நடிப்பை பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் 120 கோடி ரூபாயை வசூலித்தது.’வேதாளம்’ படம்தான் அஜித் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான கடைசி திரைப்படமாக உள்ளது. 

அதேநேரம், விஜய் நடிப்பில் 2017,2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வெளியான ’மெர்சல்’,’சர்கார்’ மற்றும் ’பிகில்’ ஆகிய படங்கள் அவரின் சினிமா வாழ்க்கையில் மாபெரும் வசூலில் சாதனைப்படைத்த படங்களாக அமைந்தது. குறிப்பாக, ’மெர்சல்’ 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது அதேபோல், ’சர்கார்’ 240 கோடிகளும் ’பிகில்’300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக உருவெடுத்தார் விஜய். 

இதனிடையே, கொரோனா பெருந்தொற்றின்போது 2020ல் சூர்யா நடிப்பில், உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ’சூரரைப்போற்று’ படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஓடிடியில் வெளியான ’சூரரைப்போற்று’174 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், அந்தாண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த கதை மற்றும் சிறந்த இசை ஆகிய ஐந்து பிரிவுகளில் தேசிய விருது பெற்றது.’சூரரைப்போற்று’ படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

மேலும், 78வது சர்வதேச கோல்டன் குளோப் விருதுக்குத் திரையிடத் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையும் பெற்றது ’சூரரைப்போற்று’. தொடர்ந்து 2021ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சூர்யாவின் ’ஜெய் பீம்’ தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக மாறியது. உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’ஜெய் பீம்’ ஒடுக்கப்பட்ட மக்களான இருளர் பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறை பற்றிப் பேசியது.

இன்றைய காலகத்தில் ஒரு திரைப்படம் சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்விக்குப் பதிலாக மாறியது ’ஜெய் பீம்’. இப்படம் வெளியான பிறகு தமிழக அரசு இருளர் பழங்குடி மக்களுக்கு சமூக நலத்திட்டங்கள் சென்றடைவதில் தனிக் கவனம் செலுத்தியது.அதேபோல், அரசு சார்பில் வீடுகள், பட்டா மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுவருகிறது.

பொதுவாகப் பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் செல்லும் அதேநேரம், சமூகத்தின் பிரதிபலிப்பாக மாறும்போது அதனை மக்களும், ஆட்சியாளர்களும் மாற்றத்திற்கான திறவுகோலாக மாற்றுவார்கள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

SCROLL FOR NEXT