இரண்டு நாட்கள் முன்னர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆலியா பட் அணிந்த உடையைப் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 163 கைவினைக் கலைஞர்களால் 1965 மணி நேரமாக நெய்யப்பட்ட சேலையை வடிவமைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் வாரத்தில், 'மெட்ரோபாலிடன் மியூசியம் ஆப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூஷன்' என்ற நிறுவனத்திற்கு நிதி சேகரிக்கும் வகையில் Met Gala நிகழ்ச்சி நடத்தப்படும். அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை நியூயார்க் நகரில் நடந்த Met Gala நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து நிறைய புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் கலந்துக்கொண்டனர்.
இந்தியாவிலிருந்து பல நடிகர்கள் அங்கு சென்றனர். அதுவும் அனைவருமே கன்கவரும் வகையில் உடை அணிந்து பார்ப்பவர்களை ஆச்சர்யமூட்டும் வகையில் அங்கு வந்தார்கள். அதில் பங்குபெறும் நடிகர் நடிகைகளின் வித்தியாசமான உடை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்தியாவிலிருந்து அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆலியா பட்டின் சேலைதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து ஆலியா பட் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்ததாவது, “நேரமில்லை என்பது தொடர்க்கதைதான். ஆனால், எப்போதும் அதிக நேரத்துடனும், அதிக கவனிப்புடனும் செய்யப்படும் வேலை எப்போதும் நிலைத்திருக்கும். உலகளவில் இந்தியாவின் பெருமையை விளக்க நாங்கள் பயணிக்கும் பாதையில், இந்த உடைக்கு ஒரு உயிர் வந்துள்ளது. பாரம்பரியத்திற்கும், கலைப் படைப்புக்கும் சேலையை விட ஒரு நல்ல ஆதாரம் வேறு இல்லை. தனித்துவமான எம்பிராய்டரி, அழகான கற்கள், முத்துகள் என அனைத்தையும் வைத்து உருவாக்கப்பட்டது இந்த சேலை. 1920ம் ஆண்டின் ஸ்டைல் கொண்ட இந்த சேலையை 163 பேர் 1965 மணி நேரமாக செய்தார்கள்.” என்று பதிவிட்டார்.
இவர் அந்த நிகழ்ச்சியில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும்போது சேலை தரையில் இழுத்துக் கொண்டே சென்றது. அப்போது பலரால், ஆலியா பட்டை விட அவருடைய சேலையே கவரப்பட்டது. ஆகையால், அந்த சேலைக்கு பின்னால் இருக்கும் உழைப்பினை ஆலியா பகிர்ந்துக்கொண்டார். மேலும், அந்த உடையை செய்யும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. உழைப்பிற்கு ஏற்ற லைக்ஸையும் இந்த வீடியோ குவித்து வருகிறது.