K.Balachander's Aval Oru Thodar Kathai Movie 
வெள்ளித்திரை

'அவள் ஒரு தொடர்கதை'- இயக்குனர் சிகரம் கே.பி.சாரின் கிளாசிக் படம்!

கல்கி டெஸ்க்

- ரெ.ஆத்மநாதன், ஜூரிக், சுவிட்சர்லாந்து 

இந்தப் பூவுலகில் நடப்பவை அனைத்தும் தொடர்கதைதான்!

உறவும்-பிரிவும், இன்பமும்-துன்பமும், காதலும்-சோகமும், மேடும்-பள்ளமும், இப்படி இங்கே எல்லாமே தொடர்கதைதான். வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்து கொண்டவர்கள் இந்தத் தொடர்கதைகளோடு ஒன்றிப் போய்த்தான் ஆக வேண்டும்.

அவளும் ஒரு தொடர்கதைதான். அனைவராலும் விரும்பிப் போற்றப்படும் அழகிய தொடர்கதை.     

புருஷன்களின் பலமுமில்லாமல், அண்ணன், தம்பிகளின் அரவணைப்புமில்லாமல், காதலர்களின் கனிவுமில்லாமல், களத்தில் தனியாக நின்று, குடும்பப் பாரத்தையே தான் ஒருவளாகச் சுமக்கும் கவிதாவைப் போன்றோர் நம் சமுதாயத்தில் மிகக்குறைவே. அதிலும் 50 ஆண்டுகளுக்கு முன்னரே, தனியளாக நின்று சாதித்துக்காட்டிய அவள் வாழ்க்கை ஒரு தொடர்கதைதான். ’அவள் ஒரு தொடர்கதை’யை சற்றே அசை போடலாமா?   

ஒரு திரைப்படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான முத்திரை பதித்த திரைப்படம் இது. கருத்து, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, பாடல்கள், இசை, டைமிங், நடிகர்களின் தேர்வு, நடிப்பு, இயல்பு... இப்படி அனைத்து கோணங்களிலிருந்தும் கே.பாலச்சந்தர் சாரின் கிளாசிக் படம்!  இந்த ஒரு படம் போதும் காலத்துக்கும் அவர் பெருமை பேச!

K.Balachander's Aval Oru Thodar Kathai Movie

1974 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தின் கதையை சுகி சுப்பிரமணியன் அவர்களின் மகனான எம்.எஸ்.பெருமாள் எழுதியிருந்தார், ’வாழ்க்கை அழைக்கிறது’ என்ற குறுநாவலாக. குடும்பத்தை நிர்க்கதியாக தந்தை விட்டுப்போக, பாரத்தைச் சுமக்க வேண்டிய மூத்த மகன் பார்களே கதியென்று அலைய, அவர் குடும்பத்தையும் சேர்த்துக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் கவிதா, தன் ஆசாபாசங்களை விட்டு, கனவுகளை ஏற்படுத்திய காதலனையும் தங்கைக்கு விட்டுக்கொடுத்து, இருட்டை விரட்டி ஒளியைத் தருவதற்காகத் தன்னையே அழித்துக் கொள்ளும் மெழுகு வர்த்தியாய்க் கரைந்து போவதுதான் கதை. 

குடும்பக்கதை, கொஞ்சப்படும் வரலாறாகிப் போவது அதன் ட்ரீட் மென்டில்தான். காட்சி அமைப்புகளாலும், ’கட்’ வசனங்களாலும் படத்தை உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியுமென்பதற்கு, இப்படமே சிறந்த உதாரணம்.

வசனத்தைக் கூடப் பல வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இதமளிக்கும் வசனம், இன்பந்தரும் வசனம், குத்திக் கிழிக்கும் வசனம், குதறிப்போடும் வசனமென்று பலவகை உண்டு. உரிய இடத்தில், உரிய வசனத்தை வைப்பதில்தான் இயக்குனரின் திறமை இருக்கிறது. அந்தத் திறமையே இயக்குனரைச் சிகரமாக்குகிறது.

சிறுவர்கள் வீட்டில் விளையாடும்போது, ’ராச்சசி இல்ல…ரா..ட்..சசி’ என்று சொல்வதில் ஆரம்பித்து, ’கல்யாணத்துக்கு முன்னாடி பெண்கள் கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’ என்ற வசனத்திலாகட்டும், ’ஓர் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்தச் சண்டை வேணும்னா வரலாம். ஆனா சக்களத்தி சண்டை மட்டும் வரக்கூடாது!’ என்பதிலாகட்டும், கே.பியின் ‘டச்’ பளிச்சென பிரகாசிக்கும்.

குழந்தை தொடர்ந்து அழ,சுஜாதா எழுந்து வர, குடிகார அண்ணனும், அண்ணியும் படுக்கையறையிலிருந்து வெளியே வர, ’பணப்பசியைத் தீர்க்க ஒரு தங்கச்சி, வயித்துப்பசியைத் தீர்க்க ஒரு தாய், உடற்பசியைத் தீர்க்க ஒரு மனைவி…ச்சீ..மானங்கெட்ட ஜென்மம்’ என்று சுஜாதா விளாசுவது, குத்திக் கிழிக்கும் வசனம் என்றால், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் சுஜாதாவை எழுப்பி, ’அவர்க்கிட்ட எத்தனையோ கெட்ட குணங்கள் இருக்கலாம். ஆனா பெண்கள் விஷயத்தில அவர் தப்பு பண்றதில்ல. அந்த நல்ல குணமும் அவரை விட்டுப் போயிடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் என்னையே எந்திரமா மாத்திக்கிட்டேன். மற்றபடி…நீ சொன்னியே உடற்பசி…அது என்னிக்குமே எங்கிட்ட இருந்ததில்லம்மா…’ என்பது இதம்தரும் வசனமல்லவா! ரசிகர்கள் மனதில் அந்த வசனம் மூலம் நங்கூரம் போட்டு விட்டாரே அண்ணி.

குடும்பப் பொறுப்பால் தன் காதலையே இழக்கும் சூழலில், காதலன் திலக் (விஜய குமார்) தன் விதவைச் சகோதரியுடன் இணைய, ’அந்தக் கட்டில் சத்தம்…பொறுக்க முடியவில்லை’ என்ற வசனத்தில்தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள். அடிமனத்தின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் ஆசைகளை வேதனையாக விளம்பும் விபரக் குறிப்பல்லவா அது! என்ன செய்வது. அவளும் பெண்தானே. அதனைக்கேட்கும்போது நம் உள் மனத்திலும் ஒரு மின்னல் வந்து போகத்தானே செய்யும்.

சாலையில் அடிபட்டுக் கிடக்கும் நாயைக் காப்பாற்றச் சொல்லி உரியவர்களுக்குப் போன் செய்யும்போது ’அவள் ஒரு பனிப்பாறை. உருக வேண்டிய சமயத்தில் உருகவும் செய்வாள்’ என்பதில்தான் எவ்வளவு பொருள். 

இசையை, மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும், ஏன்? தாவரங்களும் கூட விரும்புவதாக விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ’ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல வேண்டியதை ஒரு படம் விளக்கி விடும்’ என்பார்கள். அது போலவே ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை 3 நிமிடப்பாடல், மிக முழுதாகவே விளக்கிடும்.

Aval Oru Thodar Kathai Movie Songs

5 பாடல்களைக் கொண்டே முக்கியக் கதை நாயகர்களின் குண, நலன்களைக் காட்டிடுவர் இப்படத்தில்...

’அடி என்னடி உலகம்.. இதில் எத்தனை கலகம்… செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா.. சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா? பந்தம் என்பது சிலந்திவலை.. பாசம் என்பது பெரும் கவலை.. சொந்தம் என்பது சந்தையடி.. இதில் சுற்றம் என்பது மந்தையடி.. ஃபடாபட்..

விகடகவி கமலின் ’கடவுள் அமைத்து வைத்த மேடை’ பாடல் அவரின் ஆற்றாமைக்குச் சான்றாக அமையும்.

’கண்ணிலே என்ன உண்டு..கண்கள்தான் அறியும்’ பாடலுக்கு விளக்கமே தேவையில்லை.

’தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு..’குடிகார அண்ணனின் தத்துவ முத்து.

’ஆடுமடி தொட்டில்’ என்று அப்புறமும் ஒரு பாடல்.

கண்ணதாசன், விஸ்வநாதன் காம்பினேஷன் உச்சத்தில் இருந்த நேரம். சுசீலா, ஜானகியை உலகே நன்கறியும். ஜேசுதாசின் மயக்கும் குரல் தத்துவப் பாடலுக்கு மேலும் மெருகு சேர்த்ததில் வியப்பேதுமில்லை. கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் சீனிவாசனின் பங்கு அலாதியானது. கொலுசு சத்தத்தைக் கூடத் தன் குரலிலேயே கொண்டு வந்தாராம்.

K.Balachander's Aval Oru Thodar Kathai Movie

பாலச்சந்தர் போன்ற திரைமேதைகளுக்கு, வேண்டிய நடிப்பைப் பெறுவதில் சிரமம் இல்லாத காரணத்தால், புதியவர்களையே பெரிதும் விரும்பினார்கள். சுஜாதா, ஜெய் கணேஷ், ஜெயலட்சுமி, ஶ்ரீப்ரியா என்று அநேகப் புது முகங்களை அனாயாசமாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர்!  அவர்களின் மீது வேறு நடிப்பின் சாயல் இல்லாதிருப்பதை ஒரு பலமாகவே பாலச்சந்தர் எண்ணியிருக்க வேண்டும்.

’எர்ணாகுளம் ஜங்ஷன்’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்த சுஜாதாவைப் பிடித்துப் போனாலும், அவரின் தமிழ் உச்சரிப்பிற்காகச் சில காலம் காத்திருந்தாராம் இயக்குனர்.

படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, எனது பார்வையில், ரியலிசம். நாயகியைத் துன்பம் சூழும் போதெல்லாம், நாயகன் திடீரென தோன்றி பல பேரையும் அடித்து நாயகியைக் காப்பாற்றுவதாகத்தான் பெரும்பாலான படங்கள் இருக்கும். ஆனால் பாலச்சந்தர் படங்களில் அது போன்ற நம்ப முடியாத காட்சிகளை அதிகம் பார்க்க முடியாது. ஜெய் கணேஷை நான்கைந்து பேர் சேர்ந்து அடிக்கையில், ரயில் ஒன்று குறுக்கே போகும். ரயில் க்ராஸ் செய்த பிறகு, அவர்அடிபட்டுக்கிடப்பார். எதார்த்தம். அந்த எதார்த்தமே கே.பி.,யை சிகரமாக்கிற்றோ என்று நான் நினைப்பதுண்டு.       

25 வாரங்கள் ஓடி,வெற்றி விழா கொண்டாடிய இந்தப்படம், பின்னர், தெலுங்கு, பெங்காலி, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. இதற்கு முந்தைய ஆண்டு வெளியான ‘அரங்கேற்றம்’, போற்றலுக்கும், தூற்றலுக்கும் ஆளாகிப் போனாலும், அதைப்பற்றிய கவலை ஏதுமின்றி முன்னேறினார் கே.பி.

70 களில்தான் பாலச் சந்தர் ‘பீக்’கில் இருந்திருக்கிறார். அந்தப் பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 30 படங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ராம அரங்கண்ணலின் ஆண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், பி.எஸ்.லோகநாத்தின் ஒளிப்பதிவில் உருவான ‘அவள் ஒரு தொடர்கதை’ எக்காலத்திலும் புகழ்ந்து பேசப்படும் பொற்படம் என்றே கூறலாம்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT