ஏவிஎம் ரஜினி, கமல் வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசையோடு இருந்தார். ஆனால், கமலால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. அது என்ன படம், என்ன நடந்தது என்று பார்ப்போமா?
ஒரு காலத்தில் தமிழ் சினிமா என்றாலே ஏவிஎம்தான். இன்றளவும் ஏவிஎம் இருக்கிறது என்றாலும், ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்ததுபோல் இப்போது இல்லை என்றே கூற வேண்டும். ஒருமுறை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நடிகர் ரஜினிகாந்திடம் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரைப் பார்க்கிறாயா என்று கேட்டிருக்கிறார்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அப்போது ஏவிஎம் ஸ்டூடியோவில்தான் ஆடுபுலி ஆட்டம் படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். அவர் அப்படி கேட்டதும் ரஜினியும் சரி நானும் பார்க்க வருகிறேன் என்றார். முத்துராமன் ரஜினியை அழைத்துச் சென்று ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகம் செய்திருக்கிறார்.
ரஜினியை பார்த்த அவர் அவரது நடிப்பு குறித்து பேசிவிட்டு, எதிர்காலத்தில் நல்ல நடிகராக வருவாய் என்று ஆசிர்வாதமும் செய்திருக்கிறார். மேலும் தன்னுடைய விருப்பம் ஒன்றையும் அவர்
அன்று கூறியிருக்கிறார். 1956ல் ஹிந்தியில் ஏவிஎம் தயாரித்த “பாய் பாய்” என்ற திரைப்படத்தை மீண்டும் தமிழில் எடுக்கும் தனது விருப்பத்தைக் கூறியதோடு, அந்தப் படத்தில் ரஜினியையும், கமலையும் நடிக்க வைக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார். அப்படத்தை நீயே இயக்கு என்று சொன்னவுடன் இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
இதனையடுத்து ஏ.வி.மெய்யப்பர் திடீரென்று காலமானார். மெய்யப்பரின் கனவை நிறைவேற்ற அவரது மகன்கள் முடிவெடுத்தனர். இதுகுறித்து கமலிடம் பேசியபோது, அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நானும் ரஜினியும் இனி தனித்தனியாகத்தான் நடக்கப் போகிறோம். சேர்ந்து நடிக்கும் எண்ணத்தில் நாங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதன்பிறகு இருவரும் சேர்ந்து ஏவிஎம்மிற்கு நடித்துக்கொடுக்கவில்லை என்றாலும், தனித்தனியாக நடித்துக் கொடுத்து ஏவிஎம்மிற்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தனர்.
எஸ் பி முத்துராமன் இயக்கி 1980ல் ரஜினி ஏவிஎம்மிற்காக நடித்த முதல் திரைப்படமான “முரட்டுக்காளை”யும், அதன்பின் 1982ல் கமல்ஹாசன் நடிப்பில் ஏவிஎம் தயாரிக்க, எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த “சகலகலா வல்லவன்” திரைப்படமும் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.