Director Chimbu Deven Exclusive Interview 
வெள்ளித்திரை

"'ஆக்ஷன்' என்றதும் கடல்கூட நடிக்கத் தயாராகிவிட்டது!" - சிம்பு தேவன் நேர்காணல்!

ராகவ்குமார்

"நம் நாட்டில் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி பேசும் ஆவணங்கள் எல்லாம் டெல்லி, மும்பையை சுற்றியே பேசுகின்றன. விடுதலை போராட்டத்தில் சென்னை மற்றும் கல்கத்தா பகுதிகளின் பதிவுகள் குறைவாகவே உள்ளன. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில்  நடந்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சிதான் ‘போட்’ திரைப்படம்" என்கிறார் டைரக்டர் சிம்பு தேவன்.

‘இம்சை அரசன் இருபத்திமூன்றாம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’, ‘ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும்', 'புலி’, ‘கசடதபற’ என பல பேண்டஸி (fantasy) படங்களைத் தந்த சிம்பு தேவன் தற்போது யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில்
'போட்' திரைப்படத்தை இயக்கி உள்ளார். வரும் ஆகஸ்ட் 2 அன்று இந்தப் படம் வெளியாக உள்ளது. நமது கல்கி ஆன்லைனுக்காக  இந்தப் படம் பற்றி சிம்பு தேவன் அளித்துள்ள Exclusive நேர்காணல்…

இந்த 'போட்' எதை நோக்கி பயணிக்கிறது?

நான் சிறுவயதில் படித்த எர்னஸ்ட் ஹெமிங்வே என்பவர் எழுதிய 'ஓல்ட் மேன் அண்ட் சீ' (old man and sea) என்ற நாவல் என்னை மிகவும் பாதித்தது. கடல் பயணத்தின்போது உணவு, தண்ணீருக்காக நடக்கும் போராட்டம் என நான் நாவலில் படித்த பல விஷயங்கள் என்னை பின்பு தூங்க விடாமல் செய்தது. இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம்தான் 'போட்'. இந்தப் படகு கடல் பயணத்தின்போது எளிய மனிதர்கள் சந்திக்கும் ‘சர்வைவல்’ திசையை நோக்கி பயணிக்கிறது .

உங்கள் படம் என்றாலே fantasy கலந்த நகைச்சுவை சிறப்பாக இருக்கும். 'போட்' படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது சீரியஸ் படம்போல தெரிகிறதே?

இது சர்வைவல் த்ரில்லர் வகை படம். இந்த ‘போட்’ படத்தில் சர்வைவல் குறித்த த்ரில்லிங் விஷயங்கள் நாற்பது சதவிகிதமும், அறுபது சதவிகிதம் நகைச்சுவையும் இருக்கும். நீங்களும் உங்கள் குடும்பமும் சிரிக்க நான் கியாரண்டி.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விடுதலை போராட்டத்தில் வட இந்தியாவிற்கு தரும் முக்கியத்துவம், தென்னகத்திற்குத் தரப்படுவதில்லை என்று சொன்னீர்களே, எந்த அடிப்படையில் அப்படிச் சொன்னீர்கள்?

வரலாற்றில் எழுதி வைத்துள்ள குறிப்புகளை வைத்துதான். முதல் சுதந்திர போர் 1857ல் நடைபெற்றது என்று வரலாற்று புத்தகங்கள் சொல்கின்றன . ஆனால், அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர்களுக்கு எதிராக நமது சிவகங்கை மண்ணில் முதல் குரல் தந்தவர் நமது வேலு நாச்சியார். வேலு நாச்சியார் அம்மையாரின் பங்களிப்பு பெரிதாக பதிவு செய்யப்படவில்லை. இந்திய அளவில் தமிழர்களின் தியாகமும் உலக அளவில் இந்தியாவின் தியாகமும் மறைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது உலகப்போர் நடந்த சமயத்தில் சுமார் 25 லட்சம் இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் மறைக்கப்பட்டுள்ளது. நான் கேட்ட, படித்த இதுபோன்ற விஷயங்களின் பாதிப்புதான் இந்தத் திரைப்படம்.

நீங்கள் உணர்ந்த விஷயத்தை எப்படிக் காட்சி படுத்தி உள்ளீர்கள்?

1945ல் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான்போல் இந்தியாவிலும் குண்டு வீசப்படும் என்று அச்சம் இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னையில் இந்த அச்சம் சற்று அதிகமாகவே இருந்தது. இதிலிருந்து தப்பிக்க ஒரு சிலர் படகு வழியாக கடல் பயணம் செல்கிறார்கள். இந்தப் படகில் செல்லும் கதை மாந்தர்கள் வழியே நான் உணர்ந்த விஷயத்தைச் சொல்லியுள்ளேன்.

உங்கள் படத்தில் political satire எனப்படும் அரசியல் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. இந்த ‘போட்’டில் இந்த நகைச்சுவை இடம் பெறுமா?

இந்தப் பணியை இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் செய்கிறார்.

கடலில் படமாக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

மற்ற இயற்கை விஷயங்களை கணிப்பதைப்போல கடலை கணித்துவிட முடியாது. உவரி பகுதியில் அலை குறைவாக இருக்கும் என்பதால் அங்கே உள்ள கடல் பகுதியை தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தினோம். இருப்பினும் அங்கே சில சமயங்களில் அலை சீற்றம் அதிகமாகியது. சீற்றம் குறைவாக இருக்கிறது என்று எண்ணி அவசர அவசரமாக நடிகர்களை படகில் ஏற்றி, யூனிட்டை ரெடி செய்து, ஆக்ஷன் என்று சொன்னவுடனே காத்திருந்ததுபோல கடல் அலை அதிகமாகும்… ஆக்ஷன் என்று சொன்னவுடன் நடிகர்கள் நடிப்பதற்கு முன்பே கடல் நடிக்கத் தயாராகிவிடும்! (சிரித்துக்கொண்டே விவரிக்கிறார்.)

உங்கள் படத்தில் ஆர்ட் டைரக்ஷன் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தில்..?

இந்தப் படத்தின் ஆர்ட் விஷயத்தில் முக்கிய அம்சமாகப் பார்த்தது படகுதான். இப்போது எங்கேயும் துடுப்பு போடும் படகு இல்லை. இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் சந்தானம் கேரளாவில் உள்ள ஒரு இடத்தில துடுப்பு போடும் படகு இருப்பது கண்டுபிடித்து சிறிது மாற்றம் செய்து உருவாக்கினார். இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் போலவே படகு வருகிறது. ஆனால், இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் சந்தானம் இறந்துவிட்டார். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கிய ஆர்ட் டைரக்டர் சந்தானம் இன்று இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

அன்று ‘இம்சை அரசனில்’ வடிவேலு. இன்று ‘போட்’ படத்தில் யோகிபாபு எதோ சொல்ல வருவதுபோல் தெரிகிறதே..?

எப்போதுமே நான் என் கதைக்கு தேவையான நடிகர்களைத்தான் தேர்வு செய்வேன். நான் நகைசுவை நடிகர்களை மட்டும் ஹீரோவாக வைத்து படம் இயக்கவில்லை. பல மாறுபட்ட நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளேன். இதற்கு என் முந்தைய படங்கள் சாட்சி. மாறுபட்ட யோகிபாபுவை இந்தப் படத்தில் நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT