இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் ஏராளம். ஆனால், அவர்களுடைய உழைப்பும் இழப்பும் வெற்றியடைந்துவிட்டது என்பதை இந்திய மக்களுக்கு ரேடியோவில் எடுத்து சொன்னவர் ஒரு பழம்பெரும் நடிகரே ஆவார். அவர் யார் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோமா?
அடிமையான வாழ்வில் நொந்துப்போன, சுருண்டுப்போன நமது இந்திய மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக பலர் போராட்ட வீரர்களாக உருவெடுத்தனர். ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் ரத்தம் சிந்தினர். நமது நாட்டிலேயே நமது சுதந்திரத்தை கேட்டு அடி வாங்கி சாகும் அவலம் ஏற்பட்டது. சுதந்திரம் கேட்டு முழக்கமிட்டவர்களின் கர்ஜனை குரல்களையும், அப்பாவி மக்களின் அழுகுரல்களையும் நம்மால் மறக்க இயலுமா? என்ன?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்தைகளை முதன்முறை ரேடியோவில் கூறிய ஒருவர்தான் பூர்ணம் விஸ்வநாதன். இவர்தான் முதல்முறை அனைத்திந்திய வானொலியில் இந்தியா சுதந்திரமடைந்ததை அறிவித்தார்.
ஒட்டுமொத்த இந்திய மக்களின் ரத்தக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியது அந்த குரலினால்தான். அத்தனை எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிய குரல் பூர்ணம் விஸ்வநாதனின் குரல்.
யார் தெரியுமா அவர்?
1921ம் ஆண்டு பிறந்த இவர் பள்ளியில் பயிலும்போதே நாடக மேடையில் ஏறி தனது திறமையை வெளிப்படுத்தினார். இவர் அண்ணன் ஒரு எழுத்தாளர். அவரது உதவியுடன் ஆல் இந்திய ரேடியோவில் இணைந்தார். ஒரு செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடர்ந்தார். பின் சொந்தமாக ஒரு நாடகக்குழு ஆரம்பித்து ஏராளமான நாடகங்களை மேடை ஏற்றினார்.
தன் 20 ஆண்டுக்காலத்தை டெல்லியில் கழித்த அவருக்கு, எழுத்தாளர் சுஜாதாவின் அறிமுகம் கிடைத்தது. சுஜாதாவின் ஆலோசனை பேரில் சென்னைக்கு பணியிடம் மாற்றம் செய்து 1965ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். சுஜாதா எழுதிய 10 நாடகங்களை மேடையில் அரங்கேற்றினார்.
அப்படியே சினிமாத்துறையிலும் அறிமுகமான இவர், இதுவரை சுமார் 80 படங்களில் நடித்திருக்கிறார். வருஷம் 16, வறுமையின் நிறம் சிவப்பு, தில்லு முல்லு, மகாநதி, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
இப்படி கலைத்துறையில் நடிப்பிலும், நாடகத்திலும், குரலிலும் கலக்கி வந்த இவர் 2008ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்த குரலின் உயிர், உடலை விட்டு நிரந்தரமாக சுதந்திரமடைந்தது.