Do you know how Sivaji Ganesan got his first chance? 
வெள்ளித்திரை

உயர்ந்து நிற்கும் திரையுலக சரித்திர நாயகன் - சிவாஜி கணேசன்!

ரெ. ஆத்மநாதன்

சிவாஜி கணேசன் என்ற ஒரு தனி நடிகரை எப்படி மாபெரும் பல்கலைக் கழகம் என்று அழைக்கலாமென்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கும் கேட்கிறது. அதற்கான பதில்தான் இந்தக் கட்டுரையே பாஸ்!

பல்கலைக்கழகம் என்பது உயர் கல்வியையும் ஆய்வையும் மேற்கொள்ளும் ஒரு நிறுவனம். கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், அரசியல், ஆன்மீகம் என்ற மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை பாடங்கள் பற்றியும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆய்வுகள் என்று அத்தனையையும் உள்ளடக்கியதே பல்கலைக் கழகம்! அங்கு மாணவர்கள் ஒவ்வொரு துறைக்கும் தயார் செய்யப்படுகிறார்கள். 3,5,10 ஆண்டுகள் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ற கால இடைவெளியில் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். பின்னர் சமுதாயத்திற்கான பணிகளில் அமர்த்தப் படுகிறார்கள். பட்டங்களின் மூலம் பல்கலைக் கழகங்கள் மக்களுக்குப் பல்தரப்பட்ட அறிவைப் போதிக்கின்றன.

பாமர மக்களுக்கு, பள்ளிக் கூடம் பக்கமே போகாதவர்களுக்கு, பொழுது போக்குக்காகப் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கு, பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் அதிக அறிவைப் போதித்த ஒரு தனி மனிதன் இவர் என்பதாலேயே இவரை மாபெரும் பல்கலைக் கழகம் என்கிறோம்!

- 288 படங்களில் நடித்தவர்;

- தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிப்படங்களிலும் நடித்தவர்;

- 250 க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர்;

- பத்மஶ்ரீ, பத்மபூஷன், தாதாசாகெப் பால்கே, செவாலியர் போன்ற விருதுகள் பல பெற்றவர்;

- சிம்மக் குரலில், தெளிவான உச்சரிப்புடன் வசனங்களைப் பேசுபவர் என்பதையெல்லாம் தாண்டி, எப்படி பல்கலைக் கழகமாக நிமிர்ந்து நிற்கிறார் என்று  பார்ப்போமே!   

சுதந்திரப் போராட்ட வீரரான இவருடைய தந்தையார் ரயில்வேயில் பணியாற்றியபோது வெள்ளைக்காரச் சிப்பாய்கள் சென்ற ரயிலுக்கு வெடி வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றாராம். அவர் சிறை சென்ற அன்றைக்குத்தான் கணேசன் பிறந்தாராம். - சுதந்திர வேட்கையில் ஊறிய குடும்பம்!

பிரபல நடிகராக ஆன பிறகும் அண்ணன் - தம்பியுடன் கூட்டுக் குடும்பமாகவே வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்! - பாரம்பரியத்தை மதித்தவர்!

நேரு, சாஸ்திரி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் இயற்கை இடர்ப்பாடுகளிலிருந்து மக்களை மீட்க நிதி திரட்டியபோதெல்லாம் லட்சக் கணக்கில் வாரிக் கொடுத்தவர் - வள்ளல் தன்மைக்குச் சான்று!

தனது 24 வயதிலேயே பராசக்தி படத்தில் அறிமுகமாகி 72 வயது வரை இடைவிடாமல் நடித்து இமயமாக உயர்ந்து நின்றாலும், இயக்குனர் குறிக்கும் படப்பிடிப்பு நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே ஆஜராகி விடும் அற்புத நடிகர் இவர்! - நேரந்தவறாமைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்!

தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் இளைஞர்களாக இருந்தாலும் அவர்கள் இயக்குனர் பொறுப்பேற்றால் அவர்கள் வார்த்தைகளுக்கு உரிய மரியாதையை வழங்கிய உத்தம நடிகர் இவர்! - மனித நேயத்தை வாழ்வில் கடைபிடித்தவர்!

இவையெல்லாம் இவர் சொந்த வாழ்வில் கடைப் பிடித்தவை!

Sivaji Ganesan

ஒரு நடிகராக எப்படி இவர் உயர்ந்து நிற்கிறார் என்று பார்த்தால் வியப்பின் உச்சத்திற்கே போய் விடுவோம்!

ஆன்மீகவாதிகள் மகிழும் வண்ணம் திருவிளையாடல் படத்தில் சிவபெருமானாகவே நடித்து, நம் மனங்களில் பரமேஸ்வரனைப் பதித்தவர்! இறைவன் இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமென்று படிக்காத பாமரர்களையும் நம்ப வைத்தவர். அவர்களும் ஆன்மீகவாதிகளாக மாற அடிகோலியவர்!

இதிகாச கர்ணனாகவே மாறி அந்த வாடாத வள்ளலுக்கு மேலும் புகழ் சேர்த்தவர்!

நடுவில் வந்த சைவசமயக் குரவராகவும் மாறியவர்!

சுதந்திர வேட்கையை இந்த மண்ணில் விதைத்த வீரபாண்டிய கட்டபொம்மனாகவே மாறி இளைஞர்கள் இரத்தத்தில் சுதந்திரச் சூட்டை ஏற்றியவர்!

பின்னால் வந்த வ.ஊ.சிதம்பரனாராகவே வாழ்ந்துகாட்டியவர்!

பாதிரியாராக, கல்லூரி பேராசிரியராக, காவல் துறை அதிகாரியாக, பாடகராக, புலவராக, லாரி ஓட்டியாக, அப்பாவியாக என்று அனைத்திலும் முத்திரை பதித்தவர்.

பாசமலர் அண்ணனாகவும், ராஜபார்ட் ரங்கதுரை அண்ணனாகவும் என்றைக்கும் மக்களின் இதயங்களில் வீற்றிருப்பவர்.

தெய்வமகனில் மூன்று வேடங்களிலும் நவராத்திரியில் ஒன்பது வேடங்களிலும்  நடித்து, உழைப்பின் உயர்வை உணர்த்தியவர்!

இவையெல்லாம் சில உதாரணங்கள்தான்! அனைத்தையும் விரித்திடின் நாட்கணக்கிலாகும் நாம் சொல்லி முடிக்கவே!

வசந்த மாளிகையில் ஆட்டம் போடும் மைனராக வந்து கலக்கி விட்டு அதன் பின்னர் காதலிக்காகத் தன் வாழ்வையே விட்டுக் கொடுக்கும் உயர்ந்த நிலையை எட்டுவார்! (வேண்டாம் என்றால் விலை மாதாக இருந்தாலும் தொடக்கூடாது என்பது எவ்வளவு உயர்வான வசனம்!)

ஊரே வந்து முதல் மரியாதை வழங்கும் நாட்டாமையாக வந்து, தனக்குப் பிறக்காத மகளை தன் பாசத்தையெல்லாம் கொட்டி வளர்க்கும் தந்தையாகப் போற்றப்படுவார்!

இப்படி இன்னும் பலவற்றைச்  சொல்லிக் கொண்டே போகலாம்.

இவையெல்லாந்தான் மக்களை நல்வழிப்படுத்த இவர் காட்டிய பாதைகள்!

சமுதாயம் முன்னேற பல்கலைக் கழகங்கள் பல சேர்ந்து செய்யும் மகத்தான பணியைத் தனி மனிதனாகச் சாதித்துக் காட்டிய சரித்திர நாயகன் இவர்!

சுமார் அரை நூற்றாண்டாகத் தமிழகத் திரைவானில் தன்னிகரற்ற நடிகனாகப் பரிணமித்த இவர், உலகச் சினிமா வரலாற்றிலும் உயர்கொடி நாட்டியவர்!

பராசக்தியில் ஆரம்பித்து, மனோகரா, வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற  திரைப்படங்களின் வசனங்கள் என்றும் அனைவரையும் இன்புறுத்துவன!

நடிகர் பிரசாந்துக்கு, மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினாலே உயர்ந்து விடலாம் என்று அறிவுரை வழங்கிய ஆசான் இவர்!

     - படப்பிடிப்பிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி முன்னதாகவே ஆஜராகுதல்;

     - இயக்குனராக எவர் இருந்தாலும் அவர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டல்;

       மற்றும்

     - உடன் நடிக்கும் நடிகைகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதிருத்தல்.

இது எல்லோருக்குமான பொதுவான அறிவுரையுங்கூட!

     - நேரந்தவறாமை;

     - உயர்அதிகாரிகளை, மூத்தவர்களை மதித்தல்; மற்றும்

     - பெண்கள் விஷயத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்

      என்பதுதானே இதன் பொருள்!

இந்த மாபெரும் பல்கலைக் கழகத்தின் அறிவுரையைத் திரையுலகம் பின்பற்றியிருந்தால் திரையுலகில் ஆரம்பித்த பாலியல் சூறாவளி பரவிக்கொண்டிருக்காதே!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

SCROLL FOR NEXT