ஆன்மிகம், அறிவியல், உளவியல் பறக்கும் கார்கள், கலர் பொடிகள், ஓடும் ரயிலைக் கையால் நிறுத்தும் சாகஸம், திரையில் வழிந்தோடும் ரத்தம் என பார்த்துப் பழகிய தெலுங்குப் படங்களுக்கு மத்தியில் ஒரு மாறுபட்ட விஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் தெலுங்கு படமாக வந்திருக்கிறது ‘காமி’ திரைப்படம். விஸ்வக் சென், சாந்தினி சவுத்ரி, நாடோடிகள் அபிநயா நடித்துள்ள இப்படத்தை வித்யாதர் காகிடா இயக்கியுள்ளார்.
கங்கை கரையில் அகோரியாக வாழும் ஷங்கருக்கு மற்ற மனிதர்கள் ஸ்பரிசம் பட்டாலும் அலர்ஜி ஆகி மயங்கி விழும் நோய் உள்ளது. இந்தப் பிரச்னை தீர இமயமலை உச்சியில் உள்ள மூலிகையால்தான் முடியும். சென்று மூலிகை தேடு என்று கட்டளையிடுகிறார் அகோரிகளின் குரு. ஷங்கர் மூலிகையைத் தேடி செல்கிறார். ஷங்கர் செல்லும் வழியில் ஒரு பெண் இணைந்துகொள்கிறார். உயிரைப் பணயம் வைத்து செல்லும் இவருக்கு மூலிகை கிடைத்ததா என்பது ஒரு கதை.
ஆந்திர மாநில கிராமத்தில் துர்கா என்ற தேவதாசி பெண் தன் மகளை தேவதாசி ஆக்க மறுக்கிறாள். இதனால் ஊர் இவளை எதிர்கிறது. இந்த எதிர்ப்பை மீறும் பெண்ணின் மகளை சிலர் கடத்தி விடுகிறார்கள். இது இரண்டாவது கதை.
இந்திய சீனா எல்லையில் பனி படர்ந்த ஒரு கட்டடத்தில் ஓர் இளைஞனை மருத்துவப் பரிசோதனைக்காக சித்ரவதை செய்கிறார்கள். இந்த இளைஞன் இந்த சித்தரவதையிலிருந்து தப்பிக்கிறான். இது மூன்றாவாது கதை.
இந்த மூன்றடுக்கு கதையை ஒரு புள்ளியில் இணைத்ததோடு மட்டுமில்லாமல், திரைக்கதை எனும் சாலையில் பிரமாதமாக பயணிக்க வைக்கிறார் டைரக்டர்.
ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் ஆன்மிகமாக துவங்கும் முதல் காட்சியே நெகிழ்ச்சி. அடுத்தடுத்த காட்சிகள் இமயமலையை ஆச்சரியமாக பார்த்து வியப்படைய வைக்கின்றன.
விஸ்வாந்த் ரெட்டி செலுமலாவின் ஒளிப்பதிவும், ராகவேந்திரா தருனின் படத்தொகுப்பும் பலம் என்று சொல்வதைவிட தூண்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். கொஞ்சம் பிசகினாலும் குழப்பம் ஏற்படும் திரைக்கதையில் படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது.
அட நம்ம நாடோடிகள் அபிநயாவா இது? தேவ தாசியின் மனகுமுறல்களை அற்புதமாக காட்டியிருக்காரே! ஹீரோ விஸ்வக்சென்னுக்கு டயலாக் குறைவுதான். பாதிக்கப்பட்ட ஒருவனின் மன நிலையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்லா எக்ஸ்பிரஸ் பண்ணியிருக்காரு.
கங்கை கரையின் அகோரிகள், புத்தரின் ஞானம் என ஆன்மிகம், தன்னை அறியும் உளவியல், கொஞ்சம் அறிவியல் என மூன்றும் கலந்து ஒரு காட்சி அனுபவம் தரும் படமாக வந்துள்ளது ‘காமி.’