தன் வாழ்நாளில் 160 படங்களில் ஹீரோவாக நடித்த ஒருவர் 80 படங்களில் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? வாருங்கள் அவர் யார் என்றும், மேலும் அவர் என்னென்ன மகத்துவம் செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக ஒரு படத்திற்கு கோடிக்கு கீழ் வாங்கும் ஹீரோக்களைப் பார்ப்பதே மிக மிக அரிது. அந்தக் காலத்தில்கூட சம்பளம் வாங்கி நடிப்பார்களே தவிர, ஒரு படத்திற்குகூட ஊதியம் இல்லாமல் உழைக்கவே மாட்டார்கள். அதில் தவறேதும் இல்லை. அது அவர்களின் உரிமை. ஆனால், அந்த உரிமையை கூட கருத்தில் கொள்ளாமல், ஒரு ஹீரோ சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார். அதுவும் 80 படங்களுக்கு என்றால், யாரால்தான் நம்பமுடியும்.
அத்தனை உத்தமர் யார்? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.
அது வேறு யாரும் இல்லை. இருந்தபோது அவரை வைத்து ட்ரோல் செய்தோம். அவரை இழந்தப்பின் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம், ஏஐ மூலம் படங்களில் வரவழைத்துப் பார்க்கிறோம். ஆம்! அவர் விஜயகாந்த்தான்.
ஒருவர் இறந்தப் பின்னரே அவர் செய்த நன்மைகள் கொடிக் கட்டி பறக்கும். அதற்கு காரணம் அவர் இருந்தபோது அதுபற்றி அலட்டிக்கொள்ளாததுதான். எந்த பொதுநலம் கொண்டவரும் தான் செய்ததை சொல்லிக்கொள்ள மாட்டார். அவர் இத்தனை படங்களில் சம்பளம் இல்லாமல் நடித்துக்கொடுத்தது அந்த தயாரிப்பாளர்களின் நிலை அறிந்தே. அப்போதெல்லாம் சினிமா வளர்ந்து வந்த நேரத்தில் லட்சமே அதிகம். அதுவும் சம்பளம் கொடுத்தே போய்விடும். படத்தின் மேக்கிங்கில் பணம் பற்றாக்குறையாகவே இருக்கும். அதனை கருத்தில்கொண்டுதான் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று இத்தனை படங்களில் நடித்தார்.
மேலும் தமிழ் சினிமாவிற்கு 45 புது தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்தது இவரே. பணம் கொடுத்தால்தான் டப்பிங் வருவேன் ஷூட்டிங் வருவேன் என்று சொல்லாத ஒரே நடிகர் விஜயகாந்த். மேலும் தமிழ் தவிர வேறு எந்த மொழிகளிலும் தான் இறக்கும் வரை நடிக்காதவரும் இவரே.
தமிழுக்கும், சினிமாவிற்கும் கடைசி வரை உண்மையாய் இருந்த ஒரே ஒருவர் சுயநலமற்ற விஜயகாந்த் அவர்களே.